சனி, 3 நவம்பர், 2018

"ஊமைப்படம்"

"ஊமைப்படம்"
======================================ருத்ரா இ.பரமசிவன்

அவள் இரைந்து கத்தினாள்.
பற்கள் கடித்தாள்.
மார்பில் கைகளை அடித்துக்கொண்டாள்.
ஆக்ரோஷம் ஆக்ரோஷம்.
டிஃபன் தட்டை ணங்கென்று
வைத்த போதும்
காஃபிக்கு நுரை மகுடம் சூட்டி
சூடாகவே தந்தபோதும்
அவள் உடம்பு நடு நடுங்க
குரல் எழுப்பினாள்.
கண் விழிகள்
கரும் கடுவாயின்
வெள்ளை விழிகளையும்
துப்பாக்கி குண்டுகளைப்போல‌
க‌ருங்க‌ன‌ல் துண்டுக‌ளையும்
ப‌ட‌ம் காட்டின‌.
புள்ளி போட்ட‌ மார்பிள் ஷிஃபான் கூண்டுக்குள்
இருந்துகொண்டு
கொசுவ‌த்தை சொடக்கு போட்டு
பேசிக்கொண்டே போனாள்.

நான் "ம்யூட்டை"தட்டி விட்டு
புதையல் ஆகிவிட்டேன்.
அதாவது மௌனமாய் இருந்தேன்.
என் செல் ஃபோனில்
எதையோ டவுன் லோடு செய்துகொண்டு.
அதில் "முப்பது"க‌ளின் ஒரு ஊமைப்பட‌ம்
ஓடிக்கொண்டிருந்தாலும்
என் விழித்திரைக்குள்
அவ‌ள் முக‌ ந‌ர‌ம்புக‌ள்
எரிம‌லையின் வ‌யிற்றைத்
திருகி திருகி ஃபிடில்
வாசித்த‌து.
வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாய்
அவ‌ள் மீது
என்ன‌ சொல்லை வீசியிருப்பேன்?
இந்த‌ எதிர்வினைக‌ளின் க‌ன‌ல்ப‌ரிமாண‌த்தை
வைத்து
நியூட்ட‌னை த‌லைகீழாக‌ நிறுத்தி வைத்துக்கொண்டு
கேட்டேன்.
அந்த நேரான‌ சொல் தான் என்ன‌?.
சொன்னவன் எனக்குத் தெரியாதா?
இருந்தாலும் கேட்டேன்.
முக‌ம் க‌ழுவிக்கொண்டு
அமைதியாக‌ நான் அறைக்குள் போய்விட்டேன்.

அவ‌ள்
இன்னும் அம்புப்ப‌டுக்கை த‌யார்செய்து
அதில்
ர‌த்த‌மாக‌த்தான் ச‌த்த‌ம்போட்டாள்.
நான் என்ன‌ அப்ப‌டி கேட்டுவிட்டேன்.
மீண்டும் அமைதியாய்
முக‌ம் துடைத்துக்கொள்ள‌
க‌ண்ணாடி பார்த்தேன்.
ட‌ப்பென்று க‌ண்ணாடி சித‌ற‌த‌ல்க‌ள்.
கீழே விழுந்த‌ சில்லுக‌ள் எல்லாம்
துண்டு துண்டாக‌ தெரிந்த‌து.
குரூர‌க்கொரைப்ப‌ல் தெரிந்த‌து.
ர‌த்த‌ம் சொட்டிய‌ ச‌வுக்கு
என் க‌ழுத்தில் வ‌ல்லாட்டுபோல்
தெரிந்த‌து.
நாகரிகத்தில்
முடி சூட்டிக்கொண்ட‌
என் அகலமான‌
ஸ்மார்ட் ஃபோன்
கீழே விழுந்து கிட‌ந்த‌து.
அத‌ன் "அண்ட்ராய்டு"க்குள்
வ‌ரை
அந்த‌ அசிங்க‌த்தின் கோர‌ம்
வ‌ர்ண‌மாய்த் தெரிந்த‌து.
நான் சுட்ட சொல்
இப்போது தெரிந்தது.
நான் அந்த க்யூட்டிகுராவில்
பிடி சாம்பல்.

=====================================================
12.10.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக