ஞாயிறு, 18 நவம்பர், 2018

கடல் "யானை"


கடல் "யானை"
===========================================ருத்ரா

கஜா என்ற
கடல் "யானையே"
உன் தும்பிக்கையை நீட்டிக்கொண்டு
வரும்போது
உனக்கு கொழுக்கட்டை படைத்து
விளாம்பழம் எல்லாம் கொடுத்து
நாங்கள் கும்பிட்ட‌
பிள்ளையார் சதுர்த்தியின்
மாவிலைத்தோரணங்கள் கூட‌
இன்னும் சருகுகள் ஆகவில்லையே!
எந்த கஜமுகாசுரனைக்கண்டு
இப்படிச்சீற்றம் கொண்டாயோ
தெரியவில்லை.
இரண்டுமே யானைகள் தானே!
புராணங்கள் ஏன்
ஒன்றை தேவனாகவும்
இன்னொன்றை அசுரனாகவும்
காட்டி அம்புலிமாமாக்கதைகளை
சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்?
திருமறைக்காடு என்னும்
தமிழ்ப்பெயரைக்கூட நாங்கள்
வேதாரண்யம் என்று தான்
அழைத்து வருகிறோம்.
வன்புயலே!
எதன் மீது இந்த கோபம்?
அந்த வேதத்தின் மீதா?
இல்லை தமிழ்ப்பெயரை
ஏன் மறந்தீர்கள் என்றா?
வெள்ளம் புயல் என்று
இயற்கையின் அடையாளங்களுக்கு
பதற்றம் அடையும்
எங்கள் அரசாங்கங்கள்
மக்களைக்  காக்க
அண்டா அண்டாவாய்
சோறு வடிப்பதும்
தங்குவதற்கு
தற்காலிக கட்டிடங்கள்
அமைப்பதும் கண்டு
எங்களுக்கு மெய் சிலிர்க்கிறது.

இது போல்
லஞ்சம்  ஊழல்
பேய்க்காற்றுடன்
நாட்டைக் குதறிப்போடும் போது
மக்களை பரிதவிக்க விடுகிறார்களே
அது என்ன அரசியல்?
கண்ணுக்குத்தெரியாத
இந்தப்"பேரிடர்களை"த்தடுக்க
தடுப்பணைகள் எங்கே?
நிவாரண நிதிக்குவியல்கள் என்று
கடல்வழியாய் வரும்
இந்த கோடிகள் எல்லாம்
எங்கேயோ இருக்கும்
"உள் பாக்கெட்டுகளுக்கோ"
என்ற ஐயமே
இன்னும் இன்னும்
அந்த புயல் சின்னங்களில்
எங்களுக்குத் தெரிகிறது!
அந்தக்கடல்களில் தான்
இந்த வாக்கு வங்கிகளும்
சுநாமிகளாக
சுருட்டிப்படுத்துக்கொண்டிருக்கிறது.

========================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக