திங்கள், 12 நவம்பர், 2018

ஊமை மருதமரங்கள்





ஊமை மருதமரங்கள்
===========================ருத்ரா இ பரமசிவன்.

அந்த ஊமை மருதமரங்கள்
நெடிய நின்று
அகன்று கிளை விரித்து 
நீல வானத்தை தினமும்
நக்கிப்பார்த்துக்கொண்டிருக்கும்.
அதன் மௌனப்பசியில்
என்றாவது இந்த அண்டம் முழுதும்
விழுங்கப்பட்டு விடுமோ
என்ற அச்சம் எனக்கு உண்டு.
அதன் இலைமகுடங்களில்
வெள்ளைக்கொக்குகள்
வைரங்கள் பதித்தது போல்
வெண் சூரியன் முலாம் பூசும்.
யானைக்கால்களைப்போல்
மருத மரங்களின் வேர்கள்
அந்த தாமிரபரணியில் 
கால் நனைத்துக்கிடப்பதை
கண்டு அந்த மணற்பாய் விரிப்பில்
நினைந்து நினைந்து களிப்பேன்.
அந்த மரங்களின் ஊடேயும்
கரு முண்டங்களாய்
நிழல் திட்டுகள்.
இந்த உலகம் முழுவதும்
அந்த சல்லடைக்கண்கள் வழியே
உருகி வழிகின்றன.
நேற்று இரவு உறக்கம் வராமல்
ஒரு மெழுகுவர்த்தியை சுடராக்கி
அவள் ஆடும் விழிகளை 
அதில் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அந்த சுடர் ஆடி ஆடி
உருகிய மௌன சலங்கைக‌ளாய்
மேஜையெல்லாம் வழிந்தது.
வருகிறேன் வருகிறேன் என்று
ஒளி மொழிகள் உதிர்க்கிறாள்.
வரட்டும் என்று
அந்த ஒற்றைக்கணத்தை
ஊசியாக்கி
ஊழையும் இனிய கூழாக்கி
குடிக்கும் வெறியோடு
அதன் முனையில்  என் தவம்.
இரவெல்லாம்
மனசு பூராவும் ரத்த வெள்ளம்.
இந்த மருத மரத்தின்
வெளிர்சிவப்பு இலைக்கொளுந்துகள் எல்லாம்
உருண்டு திரண்டு
என் விழி நோக்கி வரும்
அக்கினி மழுவாய்....
நான் இமைகளுக்குள் அழுந்திக்கிடந்தேன்.

"மாமா...சக்கரப்பொங்கல் சாப்டிறீங்களா?"
இலையும் பூவும் கொடியும்
இழையும் வண்ணத்தில்
குறும்பாவாடையில்
அகன்ற குமிழிக்கண்கள் 
குறுகுறுக்க கேட்டாள் 
அந்த சிறுமி.
கொஞ்சம் தூரத்தில் 
சின்ன மரகதக் குன்றுளாய்
குத்துப்பாறைகள்!
தாமிரபரணி அவற்றைச்சூழ்ந்து
கல கல என்று
நுரையும் நொங்குமாய்
சிரித்து ஓடுகிறாள்.
அதில் ஒரு குடும்பம்
இனிய பொங்கல் விழுதுகளை
இலைகளில் இட்டு 
ஆற்று நீரில் அளைந்து கொண்டே
சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
இந்த பிஞ்சு
அங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும்.
தழைய தழைய அந்த‌
இலைப்பொங்கலை கையில் வாங்கி
"தேங்க்ஸ்"
என்று சொல்லும் முன்
அந்த மின்னல் குட்டி
மறைந்தே போய்விட்டது

அவள்...
பாவாடை முந்தானையில்
அந்த நட்சத்திரங்களையெல்லாம்
அள்ளி முடிந்து கொண்டு
"கழற்சிக்காய்"களாக்கி
அம்மானை ஆடுவாளே.
இப்போது
சேலைப்பருவம் வந்திருப்பாள்.
வானவில்லில் 
அவள் கொசுவம் சுண்டும்போது
இந்த வானமே 
இன்னொரு செவ்வானத்தில்
அமிழ்ந்து போகுமே!
வருகிறேன் வருகிறேன்...
சொல்லியிருக்கிறாள்.
மீண்டும் என் விழிகள்
அந்த மருத மரத்தில்.
அதன் அடியில் 
"இசக்கி மாடன்"
கண்கள் பிதுக்கி நாக்கு துறுத்தி
கையில் வெட்டரிவாளுடன்....
பட்டுக்கனவுகளில் படுத்திருந்தாலும்
காதலும் ஒரு
வெட்டரிவாள் தானோ?

===========================================================
17.01.2016



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக