சனி, 13 ஜூன், 2026

பரிணாமமே அடையாத...

 


இஞ்சியும் தின்று

கள்ளையும் குடித்து

தேளும் கொட்டிய 

குரங்கு என்ன பாடு படும்?

அதுவே

நம் அரசியல் நிலை.

அரசியலை சிந்தனை செய்யுங்கள் 

என்றால் அது நம்மை

பரிணாமமே அடையாத நிலைக்கா

கொண்டு செல்லும்.

இல்லை. நிச்சயம் இல்லை.

அப்படியென்றால் ஏன் இந்த நிலை?

தமிழர்களுக்கு இன்றியமையாத‌

அரசியல் என்ன?

தமிழும் தமிழ் இனமும் 

தோன்றிய வரலாறும் 

அதன் வெளிச்சத்தின்

ஓர்மை மட்டுமே தான்.

இதன் நிலை என்ன?

மேலே சொன்னது தான்.

வந்தாரை வாழ வைக்கும்.

அவர்களை முதுகில் ஏற்றி

உப்பு மூட்டை விளையாடி

களிப்பு ஊட்டும்.

அந்த கனமான மூட்டையில்

நசுங்கி விழுந்த போதும்

விருந்தோம்பலே விழுமியம்

தம் வயிறுகள் சுருங்கி ஒடுங்கி

பட்டினி கிடக்கும்.

இதை விடவா

மானுட வளர்ச்சிக்கு

தம்மையே அழித்துக்கொள்ள‌

முன் வரும் பண்பாடு

நமக்கு காணக்கிடைக்கும்.

எங்கிருந்து கொண்டோ

ஒரு ஆரிய மாயைத்தீயை 

பற்றவைப்பவர்களுக்குமா

இந்த உப்பு மூட்டை விளையாட்டு?

சரி..

பரவாயில்லை 

தமிழர்களே!

விசில் ஊதிக்களித்து

உடன் விளையாடிக்களித்து

இன்புறுங்கள்.

நம்மவர் போல நடிப்பு காட்டும்

அந்த ஜிகினா கூட‌

தமிழர்களே

உங்கள் விடியல்கள் தான்.

விடியல் என்றால் வெளிச்சத்தின் கீற்று

சிறிது கூட இல்லையே

என்பது மட்டும் அல்ல‌

உங்கள் உயிர் நாளங்கள்

அறுந்து தொங்கி நீங்கள்

மூச்சிழந்து பேச்சிழந்த போதும்

வள்ளுவன் சொன்ன‌

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க 

நாகரிகம் வேண்டு பவர்."

என்பற்கு

பொழிப்புரை ஆற்றிக்கொண்டிருக்கிறீர்களே.

தமிழர்களே நீங்கள் வாழ்க!

தமிழே!

நீ நீடூழி நீடூழி..வாழ்க!

_______________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக