சில தீர்ப்புகளின் வரிபிளந்து
நோக்கினோமானால்
செங்கடல்கள் சில வாய்பிளந்து
வாசல் கதவு திறந்து விட்டிருக்கும்.
சில
சவப்பெட்டிக்குள்
சிங்காரப்பூங்காவாய்
சில்லறை உணர்ச்சிகளை
சிதற விட்டு
வார்த்தைகளை மார்பிள் கோலம் போட்டு
வதைத்தே முடித்திருக்கும்.
எப்படியானாலும்
விழாக்கோலம் தான்.
மிச்சமாய்
இருப்பவர்களுக்கு இங்குள்ள தோரணங்கள்
மற்றும்
சங்கீத முந்திரிக்கொத்துக்கள்.
இல்லாது போவோர்களுக்கோ
மொத்த வானத்தையும் கசக்கி
வர்ணக்குமிழிகள் ஆக்கி
ஊதிக்காட்டுவார்கள்.
இருட்டின் சிப்பங்களுக்குள்
என்ன சிற்பங்கள் இருந்திருக்கும்?
எல்லாரும் கொண்டாடுவோம்.
ஆம்...எல்லோரும் தான்.
எதற்கு கூச்சம்?
எதற்கு வெட்கம்?
சும்மா சும்மா நியாயங்களை
கக்கிக்கொண்டே மாய்ந்து போவதற்குப்பதில்
சிறகுதிர்ந்த ஈசல்களாய்
மல்லாந்து கிடப்பதே சுகம்.
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக