சனி, 27 ஜூன், 2026

செக்கு மாடுகள்.

 

ரியாஸ் குரானா அவர்களே!

சிந்தனைவெளிகளில் தான்

நம் சிந்து வெளி நாகரிகங்கள்

பரந்து கிடக்கிறது

என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

ந‌ம் தேடல் எந்த குறிக்கோளையும் 

கொண்டு அலையாமல்

கிடைப்பதை...ஆகா

இது தானே நாம் தேடிய‌

சொர்க்கத்தீவு என்று

புளகாங்கிதம் அடைய வேண்டும்.

நம் கையையும் காலையும் 

ரத்த விளாறு ஆக்கிய‌

அந்த சப்பாத்திக்கள்ளிகளையும்

நீண்ட அந்த காக்கா முட்களையும்

கண்டு புல்லரித்துக்கொள்ளவேண்டும்.

அப்புறம்

அந்த சுத்த அன்பை தேடி நீட்டும்

தராசையும் படிக்கற்களையும்

அதோ தூர எறிந்து விடுங்கள்.

இந்த பிரபஞ்ச சமன்பாடு

தேவனையும் சைத்தானையும்

ஒன்றாக தூக்கி நிறுத்துகிறது.

இன்பத்தையும் துன்பத்தையும்

நீதிகளையும் அநீதிகளையும்

துப்பாக்கிக்குண்டுகளையும் 

ரோஜா மலர்ச்செண்டுகளையும்

ஒரே குவாண்டம் ஃபீல்டில்

நடவு செய்கிறது.

இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?

பிரம்மத்தை அடைவது என்பதே

பிரம்மத்தை தூக்கி எறியுங்கள் 

என்பது தான்.

ஆனாலும் டன்கணக்கில்

சுலோகங்களின் வைக்கோல்படப்பில்

எறிந்தார்களோ இல்லையோ

அந்த ஊசியைத்

தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

எப்போதும்

இந்த சிதையை வட்டமடித்து வட்டமடித்து

செய்யும் பஜனைகளில்

என்ன கிடைத்தது?

என்ன கிடைக்கும்?

அல்லது

என்ன கிடைத்துக்கொண்டிருக்கிறது?

கேள்விகள் அல்ல‌

செக்கு மாடுகள்.

இன்னும் கேள்வியையே 

ஆரம்பிக்காத நாமே

எலும்பு வற்றிப்போன‌

செக்கு மாடுகள்.

_____________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக