வியாழன், 4 ஜனவரி, 2018

கமலின் சாசனம் (4)

கமலின் சாசனம் (4)
============================================ருத்ரா

ஆர்.கே நகர் வாக்குகள்
பணப்புயல் சுநாமிகளால்
படையெடுக்கப்பட்ட போது
இளையராஜா அவர்களின்
சுநாதங்களில் சுருண்டு கிடந்து
சுந்தரக்கனவுகளில்
அமிழ்ந்து கிடந்ததில்
இங்கு யாருக்கும்
ஆட்சேபணை இல்லை.
எரிந்து முடிந்த சாம்பலுக்குள்
என்னத்தை உற்றுப்பார்த்தீர்கள்?
அவிந்து போன ஜனநாயகத்தின்
ஏதாவது ஒரு ஃ பீனிக்ஸ் பறவையின்
முட்டை கிடைக்குமா என்று
அந்த ஆனந்தவிகடன் பத்திகளில்
பதிப்பு செய்தீர்களா?
ஓட்டுக்கு
நாம் பிச்சையெடுக்கும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்று
"எல்லாரும் இந்நாட்டு மன்னர்"
என்பதாக
பவனி வருபவர்களிடம்
இப்போது
சில்லறை குலுங்கும் ஒரு
நசுங்கிய அலுமினிய டப்பாவை
கையில் கொடுத்து
அழகு பார்த்தீர்க்களா ?
இதுவும் அழகாக நம் எல்லோரையும்
அவமானப்படுத்திக்கொள்வது தான்.
தியேட்டர்களில்
நம் ரசிகர்களே ஒன்றுக்கு பத்து மடங்கு
விலை கொடுத்து
டிக்கட் வாங்கும் அவலங்கள்
நமக்கு தெரியாமல் போய்விடுகிறது.
"ஓட்டர்ஸ் சைக்காலஜி"
எனும் "பேண்டோரா பாக்ஸ்"
நம் நாட்டில்
என்றோ திறக்கப்பட்டு விட்டது.
கூர் தீட்டிய உங்கள் பேனாக்கள்
எதை வேண்டுமானாலும்
எழுதிக்கொள்ளட்டும்
என்று "அரசியல்" மரத்துப்போன
இந்த கற்பு நெறி பற்றி
கவலைப்படுவார் யாருமில்லை.
அன்று
தேர்தல் எனும்
அந்த குருட்சேத்திரத்தில்
உங்களோடு ஒத்து நிற்கும்
சினிமாவின் சக பாண்டவர்களோடு
ஒரு வியூகம் வகுத்திருக்கலாமே.
அபிமன்யூ மாதிரி ஒரு சின்ன பையன்
அந்த "வேட்பு மனு" கொடுக்கும்  போது
நடந்த அந்த  அசிங்க வியூகத்தை உடைத்து
நீங்கள் எல்லாம் அம்பு மழை பெய்து
அந்த பண மழையை
ரவை ரவையாய் உடைத்து
ஒன்றுமில்லாமல் செய்து
உண்மை ஜனநாயக முகத்தை
எல்லோருக்கும் காட்டியிருக்கலாமே.
இன்று இந்த
பிச்சைக்காரர்கள்  பட்டமளிப்பு விழா
தேவை தானா?
உலகநாயகன் அவர்களே
உங்களிடன் ஒரு ஆற்றல் சுரங்கம்
இருப்பதாகத்தான்
இன்னும் நாங்கள்
நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இந்த "வசனங்கள்" எல்லாம்
உங்கள் வருங்கால "தேர்தல்"சினிமாக்களை
ஓட்டுக்களின்  "பாக்ஸ் ஆஃ பீஸ்  ஹிட்டுகளாக "
மாற்றுமா என்பது
சந்தேகத்துக்குரியது மட்டும் அல்ல
கவலைக்கு உரியதும்  ஆகும்!

===============================================






1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

கமலிடம் எனக்கு பிடித்தது அவருடைய ஒழுக்கம், பெண்களிடம் கண்ணியம் தவறாமை.

கருத்துரையிடுக