திங்கள், 1 ஜனவரி, 2018

ரஜனி எனும் அலை

ரஜனி எனும் அலை
==========================================ருத்ரா

வெப் சைட்டில்
பட்டா போட்டு
பட்டையைக்கெளப்பி
விட்டார்
பாட்ஷா என்ற பாபா.
பிரம்மத்தை ஆத்மாவுக்குள்ளும்
ஆத்மாவை பிரமத்துள்ளும்
மடித்து மடித்து வைத்து
குழப்புகிறது வேத பாஷ்யங்கள்.
அந்த வலைக்குள்
"ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கு ஒரு கவலையில்லை"
என்று பாடிய‌
காளி என்னும் ரஜனி
வீழ்ந்து விடக்கூடாது.

ஆத்மி என்றால் மனிதன் தான்.
அந்த "மனிதநேயமே"
ஆத்மீகம் என்று
ரஜனி
இந்த இளைஞர்களுக்கு
வெளிச்சம் காட்டவேண்டும்.
ஒரு மதத்தை இடித்துத் தள்ள‌
இன்னொரு மதம்
கடப்பாரை தூக்குவது
மனித நேயம் அல்ல‌
என்று
ரஜனி விளங்கிக்கொண்டு
எல்லோருக்கும்
அதையே விளக்கவேண்டும்.
திராவிடம் என்று தனியாக இல்லை.
தமிழின் கனல் நரம்புகளில் தான்
அது பின்னிக்கிடக்கிறது
என்று
ரஜனி புரிந்து கொள்வது நல்லது.
இதை
காக்கியில் கால் சட்டையும்
கம்பு சகிதமாகவும்
இருக்கும்
பின்னணிக்கூட்டம்
அனுமதிக்காது
என்பதையும் அவர்
கூர் மதியால் உணர்ந்து கொள்ளுதல்
அவசியம்.
பாபாவும்
அந்த முத்திரையும்
அந்த சமஸ்கிருதச்சொல்லும் போதும்
அவர்களுக்கு
உங்களை வைத்து
இந்த தமிழ்நாட்டின் முகத்தில்
காவி பூச.
தமிழர்கள்
அடிப்படையில்
தமிழுக்கே உரிய பக்தியில்
லட்சக்கணக்காய்
கோவில்களில் மொய்ப்பார்கள்.
இதை
கும்பமேளா கும்மியாட்டமாக‌
அவர்கள் ரசித்துக்கொண்டு
ஓ ரஜனி அவர்களே
அவர்கள் உங்கள் காதை
கடிப்பார்கள்.
காதை புண்ணாக்கிக்கொள்ளாதீர்கள்.

கன்னடமும் களிதெலுங்கும்
சேரத்து மலையாளமும்
தமிழ்க்கூட்டங்களின்
நாகரிகக்கலவைகள் தான்.
இதை பிளக்கவே
உங்கள் ஆன்மீகத்தை
கோடரியாய் அவர்கள்
ஆக்கிக்கொள்ளலாம்.
இந்தக்கோடரிக்கு
"பிடி" கொடுக்க‌
கண்டிப்பாய் நீங்கள்
மறுத்துவிட வேண்டும்.
இதில் உங்கள் சமரச‌ம் என்பது
தமிழர்களின்
ஆன்மீகத்தை
நீங்கள் கசாப்பு செய்வதற்கு சமம்.
சமீபத்தில்
மோகன் பாகவத்
என்னும்
அந்த உச்ச கட்ட மூளை
இந்த நாட்டில்
முஸ்லீமும் கிருஸ்துவர்களும் கூட‌
இனி இந்துக்கள் எனும்
லேபிளை கட்டாயம்
ஒட்டிக்கொள்ளவேண்டும்
என்ற அர்த்தத்தில்
அறிக்கை தயாரித்து வருகிறார்.
இவர்கள் "அம்பேத்காரிசத்துக்கு"
ஒரு சமாதி கட்ட நினைத்தாலும்
ஒரு பெரிய அம்பேத்கார் படம்
திறந்து வைத்து விழா நடத்தி தான்
செய்து முடிப்பார்கள்.
காந்திஅடிகளின் சிலை திறக்க
அந்த "நாதுராம் கோட்ஸேயையே "
ரிப்பன் வெட்ட
கொண்டு வந்து விடுவார்கள்!
உங்கள்ஆத்மீக அரசியலுக்கு
தேவைப்படுவதெல்லாம்
தற்போது ஒரு
எச்சரிக்கை அரசியல் மட்டுமே.

"ஆண்டவன் சொல்றான்
இந்த அருணாசலம் கேட்கிறான்"
என்பதெல்லாம் சரி தான்.
ஆனால் அந்த‌
சினிமா ஜிகினாத்தூசியையெல்லம்
நீங்கள் தட்டி விட்டு
"மனிதத்தின்"
ஒலிக்கு
ஒளிக்கு
மட்டுமே சினிமா காட்டுங்கள்.
தூரத்தில் வருகிற‌
234 தொகுதிகளைக்காட்டிலும்
அருகில் வருகிற‌
அந்த 40 தொகுதிகளிலும் கூட‌
உங்கள் ஜனநாயக பாபாவின்
உயிர்மூச்சு
இழைந்து தான் கிடக்கிறது.
எங்கோயோ ஒரு கடைக்கோடியில்
இருக்கும் உங்களின்
சாதாரண ஒரு எளிய ரசிகனின்
குரல் தான் இது!

இந்தியாவே சிந்துவெளி ஒளியில்
ஒரு அகன்ற திராவிடமே.
எனவே
நீங்கள் உங்கள் கட்சியை
என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்
அது திராவிட எரிமலையை
தன் மடியில் கட்டிக்கொண்டு தான்
உங்கள்
உண்மை
உழைப்பு
நேர்மைக்கு
அந்த முத்திரையை கூர்மையாய்
நீட்டும்.
வாழ்த்துக்கள்.
வெற்றிகள் குவிக்கட்டும்
உங்கள் அலை!

===========================================================






2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

நன்றாகவே சொல்லி இருக்கின்றீர்கள் ஐயா

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…



ரஜனி அலைகள் என்பதும் அது வாக்குகளின் கரைமீது மோதி
மாறி விடும் தோற்றம் போல் தான் தோற்றம் தருகின்றன.

கருத்துரையிடுக