வெள்ளி, 5 ஜனவரி, 2018

விஜயசேதுபதிக்குள் எத்தனை கோணங்கள்?

விஜயசேதுபதிக்குள் எத்தனை கோணங்கள்?
===========================================================ருத்ரா

ஆனந்தவிகடனில்
போட்டோக்களில் அத்தனை அபிநயம்.
கட்டுரையில்
அத்தனையும் அற்புத கோணங்கள்!

"விக்ரம் வேதா"வும்
"கவண்" படமும் தான்
அவருக்குள் அவரை
அவர் இன்னமும்
அசை போட்டுக்கொண்டிருக்க
வைக்கிறதாம்.
ஆம்
2017ல் அவர் அடுக்கி அடுக்கி
எட்டு படங்களை அல்லவா
கொடுத்திருக்கிறார்.
கதையும் நடிப்பும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
சுடர்ந்து புடம் போட்டிருக்கின்றன.

அவரது
வைரமே அந்த‌
"நடுவில் கொஞ்சம் பக்கத்தைக்காணோம்"
என்பது தான்.
அவர் அதில்
பட்டை தீட்ட ஆரம்பித்த‌
பளீர் கோணம்
ஒவ்வொன்றுமே
இன்று வரை
கதிர் வீசிக்கொண்டிருக்கிறது.

விஜய சேதுபதி என்ற மனிதன்.
அவன் தாங்கும் பாத்திரங்கள்.
நடிப்பு எனும்
அதிசய ரசாயனக்கலவையால்
பூசப்படும் வினோத வியப்புகள்
இந்த மொத்தம் தான்
இவரது அரிய மணிமகுடம்.

நடிப்பு என்றால்
உண்மையில்
நடிப்பே
அங்கு துளியும் இருக்கக்கூடாது.
ஆனால்
ஒரு யதார்த்தம் இழையோடும்
மனிதனின்
பச்சை நரம்புகளும்
பற்றி எரியும் உணர்வுகளும் மட்டுமே
அங்கு வேர் விடும்.
அதுவே அடர்ந்த உணர்ச்சியின்
விருட்சம் ஆகி விடும்.
இப்படி
ஒரு புதிய இலக்கணத்தை
கையோடு கொண்டு வந்தது போல்
வந்து
திரைப்படங்களை
ஆட்சி செய்து கொண்டிருப்பவர் விஜயசேதுபதி!

"சூது கவ்வும்"...
இந்தப்படத்தில்
அந்த இருள் திகிலை
எப்போதும்
பரபரப்பு கவ்விக்கொண்டேதான்
இருக்கும்.
யார் யாரை கடத்தவேண்டும்?
மகாபாரதத்தின்
சூழ்ச்சிச் சோழிகள்
அங்கங்கே
குலுக்கிப்போடப்படுவது போல்
ஒரு மவுன பயங்கரத்தின்
சிதறு ஒலிகளை
நம்மை கேட்கவைத்து
அவர் பார்வைகள் சுழற்றுவது
மறக்கப்படவே முடியாது.

நரைத்துப்போன‌
வாழ்க்கையின் விளிம்பில்
சிறுபிள்ளைத்தனமான‌
மழலை இனிப்பை
குறும்பின் சிகரத்தில் நின்று
நமக்கு
சப்புகொட்டுவதற்காக‌
நீட்டினாரே
அந்த "ஆரஞ்சு மிட்டாயை"
அற்புதத்திலும் அற்புதமான‌
கோணம் அது.

இப்படி
அவர் படம் ஒவ்வொன்றிலும்
அவர் இன்னும்
மிக மிக எட்டாத உயரத்தை நோக்கி
செதுக்கிக்கொண்டிருக்கிறார்
என்பதை
நாம் ரசிக்கும்போது
நமக்கே ஒரு பெருமிதத்தை
சிறகுகள் ஆக்கி
விலாவில் ஒட்ட வைத்து விடுகிறார்.

ஜூங்கா
சீதக்காதி
சூபர் டீலக்ஸ்
ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்

இந்தப்படங்களையெல்லம்
அவர் நமக்குத்தரப்போகிற‌
அந்த ஆர்வ மினுமினுப்பு !
இலக்கியத்தரம் வாய்ந்த
எழுத்துக்களை
காகிதத்தில் அள்ளித்தரும்
ஒரு நாவல் ஆசிரியனின்
மின்னல் கொடி கனவுகள்!
எல்லாமாய்
ஒரு வர்ணகலக்கலாய்
நமக்கு இனிய மேகமூட்டங்களை
கற்பனை செய்ய வைத்து
நமைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன
"எப்போது அந்த படங்களை
பார்த்துத்தொலைவோம்" என்று!
காத்திருக்கும் பொறுமையின்மையின்
படபடப்பு இது!

வரும் ஆண்டுகள்
மகுடத்தின் மேல் மகுடங்களை
அவருக்கு
சூட்டி அழகு பார்க்க‌
வாழ்த்துகிறேன்! வாழ்த்துகிறேன்!

===================================================






2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

எனது வாழ்த்துகளையும் சொல்லி வைக்கிறேன்.

ராஜி சொன்னது…

நானும்...

கருத்துரையிடுக