வியாழன், 11 ஜனவரி, 2018

ஒரு பொங்கல் வாழ்த்து

ஒரு பொங்கல் வாழ்த்து
==============================================ருத்ரா

ஓ என் தமிழா!

பொங்கல் என்றால்

ஒரு கிலோ அரிசியும்
அரை கிலோ வெல்லமும்
கொஞ்சம் முந்திரிப்பருப்பும்
ஒரு கரும்புத்துண்டும்
அடங்கிய பொட்டலமா?

இலவசமாய் கொடுத்தால்
உன் ஒரு கிலோ
மாமிசத்தையும் அறுத்து
பாக்கெட் போட்டு
உன்னிடம் கொடுத்தால்
வாங்கிக்கொள்வாயா?

அப்படித்தான்
வாங்கிக்கொண்டிருக்கிறாய்
இத்தனை நாளும்.
உன் மொழியும் மண்ணும்
வீடும் கூடும்
காக்கைச்சிறகுகள் போல்
கிழிக்கப்பட்டு
சிதறடிக்கப்படுவதை

நீ உணர்ந்திருக்கிறாயா?

பொங்கல்...

இதன் இலக்கணம் தெரியாமல்
உன் இலக்குகள் இழந்தாய்.

பொங்கு! பொங்கு !
என்ற வினையின் ஆகுபெயரே
பொங்கல்!

அது உன் எரிமலை
என்று
இன்னும் புரியாமல்
இந்த மின்மினிப்பூச்சிகளிடமா
இன்னும் நீ
கை ஏந்துவது?

பொங்கல்! பொங்கல்! பொங்கல் !
தமிழின்
இதயத்துடிப்புகள் அவை!
அவற்றை வாழ்த்தி
என்ன பயன்?
அந்த துடிப்புகள்
அடங்கும் முன்
அவியும் முன்
அதன் ஆழிப்பேரலைகள்
பொங்கி எழுந்து
கரை கட்டிய இந்த
பாறைகளை புரட்டிப்போடட்டும்.
உன் அடிமைத்தளையின்
பழைய நூற்றாண்டுகள்
பொடிப்பொடி யாகட்டும்.
உன் தொன்மைத்தோற்றம்
சீற்றம் கொண்டு
எல்லா இழிமைகளையும்
சீர் திருத்தட்டும்!
நேர் படுத்தட்டும்!
பொங்கலோ !பொங்கல்!
தமிழா நீ பொங்கியே ஆகவேண்டும்.
அதனால் ..அதனால்
பொங்கலோ! பொங்கல்!
பொங்கலோ! பொங்கல்!

==============================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக