செவ்வாய், 2 ஜனவரி, 2018

லேட்டு தான்! லேட்டஸ்ட் அல்ல ரஜனி!

லேட்டு தான்! லேட்டஸ்ட் அல்ல ரஜனி!
==========================================================ருத்ரா

கருத்துக்களில்
பின் தங்கியவராய்
லேட்டு தான்
ரஜனி!
லேட்டஸ்ட் அல்ல அவர்
சிந்தனையில்!

இருபத்திஒன்றாம்
நூற்றாண்டுக்கு வந்து விட்டு
பழைய பத்தாம் பசலி
நூற்றாண்டுகளுக்குள் தானே
இன்னும்
உழன்று கொண்டிருக்கிறீர்கள்
எங்கள் அன்பான‌
ரஜனி அவர்களே!

உங்கள் ஆன்மீகம் எனும்
ஏமாற்று வேலையை
இப்போ
உங்கள் ஆண்டவன் கூட‌
காப்பாற்றத் தயார் இல்லை.
ஆன்மீகம்
அரசியல் பேசும் என்பது
கொத்துக்கறியாக‌
போடப்பட்டுவிட்ட‌
ஆட்டுக்குட்டுகள்
மீண்டும்
உயிர்த்து வருவது போல் தான்.

ரத்தம் தோய்ந்த
வரலாறுகளைப்பாருங்கள்.
மதம் என்றும்
ஆன்மீகம் என்றும்
அரசாங்க எந்திரம்
கட கடத்து ஓடியபோதெல்லாம்
அதன் கோரைப்பற்கள்
வலிமையற்ற‌
எளிய மக்களை
தீனியாக எடுத்து
தின்று தீர்த்திருக்கிறது.

நம் நாட்டில்
ஷண்மதம் என்ற‌
ஆன்மீக ஒளியில்
தான்
யுத்தங்கள்
ரத்த ஆறுகளை
ஓடவிட்டிருக்கிறது.

ஏதோ
திராவிடம் என்றால்
அது ஒரு
தீண்டாமைக்குரிய‌
சித்தாந்தம் என்று
சித்திரம் தீட்டியவர்களின்
ஒவ்வொரு புருசு மயிரும்
நச்சு தோய்த்த‌
அம்புகளாகி
இந்த பாரத புத்திரர்கள்
எல்லோரையும்
சல்லடை யாக்க‌
காத்திருக்கிறது.

ஊழல் எனும்
ஏமாற்று வித்தைகளின் 
விதையூன்றிய
குருட்சேத்திரபூமிலிருந்து
அல்லவா
உங்கள் பாஞ்சஜன்யம்
முழங்கிஇருக்க வேண்டும்.

அங்கே யுத்தமாக
வந்து ரத்தம் பருகிய
நியாயங்கள் எனும்
அநியாயங்கள் காட்டிய
விஸ்வரூப பூச்சாண்டிகளை
இன்னும்
இங்கே காட்ட நினைப்பது
நீங்கள் இன்னும் 
"லேட்டாய்" இருப்பதைத்தானே
காட்டுகிறது.
எல்லாம் வல்ல இறைவன்
அங்கு அவதாரம்
எடுத்து இருக்கும்போதும்
பதினெட்டு நாட்களின்
ரத்த சமுத்திரங்கள் தானே
உங்கள் ஆன்மிக அரசியலின்
சாட் சியாக இருக்கிறது.

ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறீர்கள்.
"சோ அவர்கள் அருகில் இல்லாதது
பத்து யானைகள் பலம் இல்லாதது "என்று.
இப்போது புரிகிறது!
அவர் "சம்பவாமி யுகே யுகே"என்றார்.
நீங்கள் "கதம்..கதம்" என்கிறீர்கள்.
உங்கள் குறி
திராவிட இயக்கம் தவிர வேறல்ல.
ஊழலின் காங்கோத்ரி
இந்தியாவின்
எல்லா நாடி நரம்புகளிலும் தான்.
அந்நிய நாட்டு வெள்ளையர்களின்
ஆதிக்கம் போய்
இப்போது உள் நாட்டு
சாதி  வெள்ளையர்களே
எல்லா சுரண்டலிலும்
பங்கு வகிக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஒரு
வெளிச்சத்தை
நம் அரசியல் அமைப்பு
நமக்குக்காட்டியிருக்கிற போது
அதையே "போலி" என்று
மாற்று மதத்தார்களை
பலிகேட்கும்
ஆன்மீகத்தின்
அரசியல்
உங்கள் ஆவேசங்களில்
புதைந்து கிடக்கிறதோ
என்ற அச்சமே
இங்கு படர்ந்திருக்கிறது.

மானிட சிந்தனையின்
பரிணாம மலர்ச்சியை
உங்கள் காமிராக்கண்களில்
காட்டிக்கொண்டிருந்த
உங்களைச்சுற்றி 
மனிதத்தையே சுட்டுப்பொசுக்கும்..
மனித நீதிகளையே
மயானத்துக்கு அனுப்பிவிடும்...
ஒரு வெறியின்
காட்டுத்தீயை காட்டும்
சூழ்ச்சிகள் அல்லவா  தெரிகின்றன!

பசுக்களை பலி கொடுக்கவேண்டாம்
என்று
மனிதர்களை பலியிடும்
மாற்றுப்பாதையைக் காட்டும்
தந்திரங்கள் எல்லாம்
தவிடு பொடியாக்கப்படும்
என்பதை நீங்கள்
புரிந்து கொள்வீர்கள் என்று
மனதார நம்புகிறோம்.

இன்னும் நீங்கள்
கொடி விரிக்க வில்லை.
கொள்கை விளக்கவில்லை.

ஆனால்
உலகநாயகன் அவர்கள்
மனித நம்பிக்கைக்கு
உதடுகள் அசைத்த போது
இந்த மதவாதிகளில்  சிலர்
அவரை தூக்கில் போடவேண்டும்
என்றார்கள்.
ஆனால்
நீங்கள் "முத்திரை"காட்டியபோதோ
இவர்கள்
வாய்க்குள் ஒருவருக்கொருவர்
லட்டுகள் திணிக்காத குறையாய்
ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள்.

சமூக நீதிக்கும்
மதங்களின் வர்ணங்கள் அற்ற
மானிட அறத்துக்கும்
நீங்களும்
ஒரு நம்பிக்கை விளக்கு தான்
என்று நம்புகிறோம் !
அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும்
அந்த ஆன்மீக அரசியலை
ஒழித்துவிட்டு
உங்கள் பாபாமுத்திரையைக்
காட்டுங்கள்.
அப்படிக் காட்டாத வரை
இதுவும்
உங்கள் மொழியில் சொன்னால்
ஒரு
பாப முத்திரையே!

===================================================




1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

நீ நடிகன்டா என்று மயில்சாமி சொன்னது போல சொல்லும் காலம் வரும்....

கருத்துரையிடுக