திங்கள், 1 ஜனவரி, 2018

பழைய புத்தாண்டுகளே!





 பழைய புத்தாண்டுகளே!
=============================================ருத்ரா

ஒவ்வொரு புத்தாண்டும்
இப்படித்தான்
ஆடிப்பாடி குதிக்கும்.
வாணவேடிக்கைகளில்
த‌ன்
பழைய வக்கிரங்களை
மறைத்துக்கொண்டு
வெளிச்சம் பிதுக்கிக்கொள்ளும்.
சென்ற ஆண்டின்
நிகழ்வுகளை
மறுபடியும்
அள்ளி அள்ளிப்போட்டு
முறங்களில்
புடைத்துக்கொள்ளும்.
அர்ச்சனை டிக்கெட்டுகள்
நெய்த்தீபங்களோடு
ஈசல்கள் குவியும்.
மாதாகோவில் வசனங்களில்
மெழுவர்த்திகள்
டன் கணக்கில்
எரிந்து உருகும்.
அந்த வெள்ளைக்கண்ணீரில்
கருப்பு ரத்தமும்
இழை பிரிக்கும்.
வாழ்த்துக்களும்
கவிதைகளும்
பூச்செண்டுகளும்
மலட்டு நம்பிக்கைக்குள்
புதிய கருவை
சிந்தனையின் எருவாக்கி
பயிர் காட்ட துடிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும்
இப்படித்தான்
பாம்புச்சட்டையை
உரிக்கிறது.
உடுத்துகிறது.
இப்படித்தான்
சுமார் 25 கோடி
ஆண்டுகளுக்கும் முன்
ராட்சசப்பல்லிகள்
ஆசையையும் வெறியையுமே
உணவாக்கி
ஒன்றையொன்று
வென்று காட்டின.
மூர்க்கமாய்
முதுகெலும்புகளை
முறித்துக்கொண்டு
மண்ணுக்குள்
புதைந்து கொண்டன
டைனோசார்களாய்
அவை இன்று நம் கண் முன்
ஃ பாசில் பல்கலைக்கழகங்கள்.

வடகொரியாவின்
கடற்கரையில்
அந்த வாண வேடிக்கை
கீற்றுகள் எல்லாம்
அப்படித்தான்
ஒரு அழிவின் கோரைப்பற்கள்
போன்று
நேற்று இரவு கர்ஜித்தன.
அணுகுண்டுகளைக்கொண்டு
இந்த உலகம்
எப்போது
கற்பழிக்கப்படுமோ
அப்போது
இந்த மானிட நேயத்தின்
மெகா சவப்பெட்டியிலிருந்து
ஒரு புதிய‌
கிமு கிபி விளையாட்டு
தொடங்கிவிடும்.
நாளை நம் கம்பியூட்டர்கள் கூட
டிஜிட்டல் ஃபாஸ்ஸில்களாய்
தோண்டியெடுக்கப்படும்.
அப்போதும்
நமக்கு புத்தாண்டுகள்
பழைய புத்தாண்டுகளே.

====================================================
01.01.2018  5.40 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக