சனி, 27 ஜனவரி, 2018

இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!

இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!
========================================ருத்ரா

"லூப் தர்ரான் சரிதானா?"
என்று
இந்த பாடலுடன்
ஒரு பிரச்சார பிரளயம்
பெருமைக்குரிய
பாவலர் வரதராஜன் அவர்களால்
பட்டி தொட்டியெல்லாம்
ஆர்மோனியக்கட்டை
அழுத்தி அழுத்தி இசைக்கப்பட்டு
இந்த வாக்காளர்களின்
செவியும் சிந்தனையும்
நிரம்பி வழிந்தன அன்று!

அரசியலின்
புதிய விடிவு ஒரு வடிவு கொண்டது.
அந்த புயற்குழுவில்
மெல்லிதாய் இசை வருடிய‌
அந்த ராஜா
இன்று இசையின்
ராஜாதி ராஜா!

நிழல்கள் படத்தில்
அந்த "பொன்மாலைப்பொழுது"
அப்புறம்
நிறம் மாறாத பூக்களில்
"ஆயிரம் மலர்களே.."
இப்படி எத்தனை ஆயிரம்
தேன்மழையை
சொரிந்திருக்கிறார்
நம் இசைஞானி.
மேள கர்த்தாக்களும்
ஜன்ய ராகங்களும்
அதாவது இசையின்
தாயும் குட்டிகளும்
எப்போதும் அந்த ஞானியின்
குகைக்குள் குடியிருக்கும்.
கூப்பிடும் போது
செல்லமாய் அவர் ஒலியில்
குழைந்து
அருவியாய் ஆர்ப்பரிக்கும்.
அந்த இசைக்கடலை
இப்படியெல்லாம் சொல்வது
ஒரு கொட்டாங்கச்சியில்
அவரை அள்ளப்பார்ப்பது அல்லவா!
இயலுமா அது?
இது
இந்தியாவின்
இரண்டாவது பெரிய விருது தான்.
அதை அவருக்கு சூடும்போது
சிரமப்படுவார்கள்.
இமயங்களுக்கெல்லாம்
இமயம் அவர் இசை!
அந்த உயரத்தை எட்ட‌
இந்த விருதுக்கு
எத்தனை ஆயிரம் ஏணிகள்
வேண்டியிருக்குமோ?
இது தமிழனின் பெருமை.
பெருமகிழ்ச்சி கொண்டு
வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகிறோம்!

====================================================






1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை எமது வாழ்த்துகளும்...

கருத்துரையிடுக