செவ்வாய், 30 ஜனவரி, 2018

தேசத்தந்தையே!

தேசத்தந்தையே!
=====================================================ருத்ரா


தேசத்தந்தையே!

உனக்கு ரெண்டு சொட்டு
நிமிடத்துளிகள்
எங்கள் மௌனத்திலிருந்து
உனக்கு உதிர்ந்தன இன்று.
நம் தேசத்துக்கு
உயிர் கொடுத்த தியாகிகள் மீதும்
அது நம் நெஞ்சத்தைக்கரைத்து
ஊற்றியது இன்று.

இதோடு சரி.
அரசு ஆவணங்கள் தங்கள்
கோப்புகளை மூடிக்கொள்ளும்.
அந்த மியூசியக்கதவுகள் கூட‌
இனி
அடுத்த வருட "கிரீச்சு"களுக்குத்தான்
எண்ணெய் இட்டு
தயார் செய்து வைக்கும்.

குடியரசு பூத்து
அறுபத்தொன்பது கிளைகள் பிரிந்து
பூத்து பூத்து
எண்ணிக்கொண்டே இருக்கின்றன‌
வருடங்களை.

சுவரில்
நிரந்தர சிலுவைகளாய்
காலண்டர்கள் தொங்குகின்றன.
ஆண்டுகளைக்காட்டும்
முண்டைக்கண்கள் மட்டும்
புதிது புதிதாய் பிதுங்குகின்றன‌
தீராத எங்கள் பிரச்னைகள் போல்.

உழவர்கள் தான்
நாட்டின் மண்ணுக்குள்
மக்களின் கண்ணுக்குள்
தெரிகின்றனர்.
ஆனால்
அவர்கள் வாழ்க்கையின்
மதிப்பு
அரைக்கோவணம் கூட இல்லை.

அவர்கள்
விளைபொருள்கள் எல்லாம்
சந்தைச்சகுனிகளால்
பகடையுருட்டப்பட்டு
கொள்ளையடிக்கப்படுகின்றன.
பசிக்கின்ற‌
குழிவயிறுகளிலேயே
அவர்கள் கல்லறைகள் கட்டப்பட்டு
விடுகின்றன.
அந்த யோஜனா இந்த யோஜனா
என்று
கொழுத்த இந்திச்சொற்களில்
அவர்கள் கனவுகள்
தேய்ந்து போகின்றன.
அவர்களின்
தற்கொலைப்புள்ளிவிவரங்கள்
நம் பொருளாதாரத்தின்
மகாப்பெரிய கரும்புள்ளி ஆகும்.
அவர்களின்
உயிர்போன்ற உழவுக்கான‌
விதைகளும் உரங்களும் கூட‌
கார்ப்ரேட் காரர்களின்
"எட்டுக்கை ஆயுதங்களின்"
தினவுகளில்
தின்னப்பட்டுக்கிடக்கின்றன.

எங்கள் பாரதக்குடியரசே!
இன்னும்
உன் சுவடுகளில் தான்
நாங்கள் நடக்கின்றோம்.
நடப்பவை வெறும்
எலும்புக்கூடுகள் என்றாலும்
என்றாவது
அதில் அக்கினிப்பறவைகள்
கூடு கட்டும்..
சாதி மதங்களின்
இந்த மரண இருட்டுகள்
அதில் சாம்பல் ஆகும்
என்ற நம்பிக்கையில்
நடக்கின்றோம்.

உங்கள் அழுக்குப்பிடித்த‌
வர்ணங்களைக்கொண்டு
எங்கள் பயணத்தின்
இந்த மைல்கற்களுக்கு
எண்கள் இடுவதை
நிறுத்திக்கொள்ளுங்கள்.

எங்கள் இதயங்களில்
எங்கள் கனவுகளுக்கு
எங்கள் மரணங்கள் தான்
அடையாளங்கள் இட்டுத்தருகின்றன.

புதிய உயிர் மூச்சுகளுடன்
புதிய வாழ்க்கையின் கீற்று
அதோ முழங்குகிறது.
உங்கள் சப்பளாக்கட்டைகளைக்கொண்டு
அதை நசுக்கி விடாதீர்கள்.

நாங்கள் ஒலிக்கிறோம்
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று.
உங்கள் இந்தியை பரப்ப அல்ல.

கனல்கின்ற இந்தியாவின்
உள் வெப்பத்தை
ஒலி பரப்ப‌
அதை ஒலிக்கின்றோம்.

============================================================








1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

எமது கண்ணீரையும் காணிக்கை செலுத்துகிறேன்.

கருத்துரையிடுக