ஒரு துயரமான நகைச்சுவை.
____________________________________________
அடிமைப்படுத்துபவர்களை விட
அடிமைப்படுபவர்களே
ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு
ஒரு பெரிய "கில்லட்டின்".
கசாப்பு கத்தியைக்கூட
ருசியான தழை என்று
நாக்கை நீட்டும் வெள்ளாடுகள்
மலிந்த தேசத்தில்
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்
சரி
இதே மேளம் தான்.
இதே ஆட்டம் தான்.
கொண்டாட்டம் தான்.
பட்டாசுகள் தான்.
ஜிலேபிகள் தான்.
பெரிய வாணலியில் கிண்டுகின்ற
அல்வாவே
நம் வரவு செலவு சாசனம் என்று
புளகாங்கிதம் கொள்ளும்
அறிவு ஜீவிகளும்
அறிவில்லாத ஜீவிகளும்
மத்தாப்பு
கொளுத்திக்கொண்டிருக்கிற
தேசத்தில்
சர்வாதிகாரி என்று
எவரும் இல்லை.
சிந்தனை சூன்யம்
அல்லது
சூன்ய சிந்தனை
என்று எப்படி
வைத்துக்கொண்டாலும்
இதுவே
சர்வாதிகாரத்தின் வற்றாத ஊற்று.
கணிப்பொறி கிளிக்குகள்
எல்லாம்
டாய் ஸ்டோரிகள் தான்.
வாக்குகள்
என்பதற்கும் ஒரு
கூர்மையான ஓர்மை உண்டு.
அது இல்லாத
வாக்குச்சீட்டுகளும்
வெறும் காகிதக்குப்பைகளே.
இவிஎம் ஆனாலும் சரி.
சீட்டுமுறை ஆனாலும் சரி
முதலில் சொன்ன வரிகளே
இந்தியா எனும்
இருண்ட கண்டத்தின்
வறண்ட வரிகள்!
"அடிமைப்படுத்துபவர்களை விட
அடிமைப்படுபவர்களே
ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு
ஒரு பெரிய "கில்லட்டின்"..."
அறிவின்மையும்
அறிவுடைமையும்
ஒன்றுக்கொன்ன்று
முகம் பார்த்துக்கொள்ளும்
கண்ணாடிகளே
என்பது தான்
ஒரு துயரமான நகைச்சுவை.
________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக