சனி, 5 அக்டோபர், 2024

மைல்கற்கள்

 



சினிமாக்களை மாலையாக‌
கோர்த்து
நாம் போட்டுக்கொண்டு
நம் மைல்கற்களை
எண்ணிப்பார்க்கலாம்.
பாகவதரின் ஹரிதாஸ்
மூன்று வருடங்கள் நம்
தலையில் ஏறி நின்று
நர்த்தனம் ஆடியது.
இன்னும் பல படங்கள்
அவரது சங்கீத அருவியாகி
ஊரெல்லாம் தெருவெல்லாம்
ஓடியது.
பிறகு நடிப்பில் மயிர் கூச்செறிய‌
சிம்மாசனம் போட்டுக்கொண்டவர்
பி யு சின்னப்பா.
இவர் பாடல்கள்
திருக்கு முறுக்காய் இருப்பினும்
அத்தனையும்
நாக்கில் நீர் சொட்டி நிற்கும்
ஜிலேபிகள் தான்.
அந்த "எல்லோரும் நல்லவரே .."பாடல்
உலகத்தின் மலை முகடுகளில்
எல்லாம்
உருக்கமான லாவாவைப் பிழியும்
சுரங்களின் எரிமலை.
அதன் பிறகு
எம்ஜிஆர் சிவாஜி தான்.
முன்னவர் வாள்முனையில்
வீரத்தின் சன்னலைத்திறந்து
வைத்தார்.
பிற்பகுதிகளில் விநோத ஒப்பனையில்
சிருங்கார ரசத்தை
மழையாகக்கொட்டி
பட்டி தொட்டிகளில்
பட்டா போட்டுக்கொண்டு
முதலமைச்சர் நாற்காலி வரை சென்று
அந்த பசையில்
சினிமாவில் வாழ்க்கையா
வாழ்க்கையில் சினிமாவா
என்ற மயக்கத்தை
மக்களிடம் புகட்டி விட்டது.
சிவாஜியைப்பற்றி
ஒன்றும் சொல்வதற்கில்லை.
நடிப்புச் சிலிர்ப்பின் உணர்ச்சிப்பிழம்பின்
உச்சிக்கும் உச்சியின் மேல்
ஏறி நின்று கொண்டார்.
சினிமாக்கொட்டகையின்
அவர் சினிமாவின் பிலிம்சுருள்கள்
எல்லாம்
உயிர்த்துடிப்பான
நடிப்பு மியூசியங்கள் ஆகின.
பாசமலர் ஒன்று போதும்.
நவராத்திரியில் ஒன்பது ஆஸ்கார் விருதுகளை
கோர்த்து வைத்தது போல்
இருக்கும்.
நமது இந்த பஞ்சு மிட்டாய்
நூல் பிசிறுகள்
தமிழுக்கு மட்டுமே அமுத விழுதுகள்.
மற்ற மொழியினருக்கு
அது கொடுத்துவைக்கவில்லை.
அவ்வளவே.
யார்மீது யார் அனுதாபம்
காட்டிக்கொள்வது?
இப்போது இன்னும்
மூன்று ரத்தினங்கள் உண்டு.
கமல் ரஜினி விக்ரம்.
நடிப்பு வெளிச்சத்தில்
மூன்று சிகரங்களும்
முதல் முதல் முதல் தான்.
குணா ஜெயிலர் அந்நியன்
இவை
நினைக்க நினைக்க நெருடவைக்கும்.
அதற்கு பின்
இன்னொரு மாலை தான்
தொடுக்கவேன்டும்.
சினிமாக்களை வைத்து
நம் வயதுகளின் தூரங்களை
அடையாளம் வைத்துக்கொண்டவர்களே
அதிகம்.
சரி.
இது இடைவேளையாக இருக்கட்டும்.
_______________________________________________
எப்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக