வெள்ளி, 18 அக்டோபர், 2024

கனவு

 

கனவு

______________________________


இந்த சல்லாத்துணி கொண்டு

தினம் தினம்

மூடுகிறாய்.

கனவே!

இந்த சில்லரை வர்த்தகத்தில்

உன் வியாபாரம் தான் என்ன?

எங்கள் ஆசைகளின்

கனபரிமாணம் 

இன்னும் குமிழிகளாகத்தான்

இருக்கின்றன.

அரும்பு மீசைப்பருவத்தில்

வளையல்களின் ஓசைகளை

எங்கள் தலையண ஓரங்களில்

வட்ட வட்டமாய்

நக்கூரம் பாய்ச்சுகிறாய்.

குழந்தை குட்டிகளோடு

நாங்கள் கூடுகளுக்குள்

முடங்கிய போதும்

எங்கள் வாழ்க்கையின்

விளிம்புகள் தோறும்

பொன்னும் வைரமுமாய்

ஜிகினா அலைகளில் 

நீந்தச்செய்கிறாய்.

ஆசைகளின் 

ராட்சச இறக்கைகள்

வானம் முழுதும் 

சடசடக்கிறது.

நட்சத்திரப்பொடிகள் 

காலையில் தூவிக்கிடக்கும் 

என்று

உள்ளம் ஏங்குகிறது.

அப்புறமும் 

இறுதிக்காலத்துப் படுக்கையிலும்

சிவலோக பதவி என்றும்

வைகுண்ட சொர்க்க லோகங்கள்

என்றும்

முகத்தருகே வந்து

உடுக்கை 

அடித்துக்கொண்டிருக்கிறாய்.

ஒரு பிடி மண் தான் நீ

என்று

அர்த்தம் சொல்வதற்கா

இத்தனை கனமான‌

சடங்கு சம்ப்ரதாய அகராதிகளை

வாழ்க்கை என்ற பெயரில்

எங்கள் மீது சுமத்தினாய்.

போ...போய் விடு

என்று அன்றே

உன்னை ஒரு

நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு

நாத்திகன் என‌

தலை நிமிர்ந்திருப்பேனே.

நான் சொன்ன மந்திரங்கள் எல்லாம்

வெறும்

கனவுப்பிதற்றல்கள் தானா?

ஒன்றுமே இல்லை என்று

இன்று சீட்டுகளை விரித்து

விட்டாயே!

பயம் எனும் மேகமூட்டத்துள்

நீ ஆட்டிய படி

நிழல்களாய் ஆடினோம்.

...

இப்படித்தான்

எமனே என் அருகில் வா

உன்னை காலால் உதைக்கிறேன்

என்றான் கவிஞன்.

பயம் எப்படியோ

போதைச்சரக்கு 

ஆகிப்போனது.

கற்பனை 

கனவு

கடவுள்

அப்புறம் சாவு.

மனிதா!

சிந்தனை என்ற‌

வெளிச்சத்தின் ருசியே இல்லாமல்

இந்த பேய்க்குழிக்குள்ளா....

விழப்போகிறாய்?

அடச்சீ..போய் விடு.

.............

விலுக்கென்று எழுந்தேன்.

இது கனவா?

விறீர் என்று தேள் கொட்டியது

போல் அல்லவா இருக்கிறது.

எழுந்து உட்கார்ந்து

சிந்திக்க துவங்கியிருக்கிறேன்.


________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக