கவிதைகளே
கதறத்தொடங்குகின்றன?
நான் கவிதையா?
நான் கவிதை இல்லையா?
நான் ரெண்டுங்கெட்டானா?
இதெல்லாம் ஒரு கவிதையா
என்று
ஒரு கவிதை
இன்னொரு கவிதை மேல்
வெற்றிலை எச்சிலைக்
குதப்பிக்கொண்டு
காறி உமிழ்கிறது.
ஆகா...அருமை அருமை
என்று
ஒரு கவிதை
இன்னொரு கவிதைக்கு
மணிமகுடம் சூட்டுகிறது.
சொற்கள்
கன்னிக்குடம் கிழித்துக்கொண்டு
வரும்போது
வங்காளக்குடாக் கடலின்
எதோ
ஒரு துளியிலும் துளியாக உள்ள
அந்த துளி
காற்றாக
மழையாக
கட்டடங்களையே
தட்டி நொறுக்குகின்ற
பெரும்புயலாக
இருப்போம் என்று
நினைக்கிறதா?
இப்படி இது
குப்பையாகவும்
கோபுரமாகவும்
பார்த்து
அமரும் அமர்வில்
என்ன நிகழ்கிறது?
யாருக்குத்தெரியும்.
நிகழ்தகவு எனும்
ப்ராபபலிடி
இப்போது ஒரு
கவிதை எனும் குவாண்டம்.
அறிவிற்கும் அறிவின்மைக்கும்
இடையில் குழைவியாக துடிக்கும்
அந்த "மெல்லிய செங்கோடு"
(தின் ரெட் லைன்)
இங்கே
எல்லா பிரபஞ்சங்களையும்
பந்தாடுகிறது.
சிந்தனை
எப்போதெல்லாம் சிவப்பாக
எரிகிறதோ
அப்போதே தூசு துரும்புகள் எல்லாம்
சாம்பல்.
____________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக