யாதானும்
நாடாமால் ஊராமால் என்னொருவன்...?
வள்ளுவர் அப்படியே நிறுத்திக்கொண்டார்.
மனிதா!
சாந்துணையும்
என்று அவசரப்பட்டுவிட்டேன்.
சாவு எனும் முரட்டுக்குதிரையையும்
உன் ஆராய்ச்சிகள் மூலம்
டி ஏஜிங் அல்லது டி டையிங்
என்று என்னவெல்லாமோ
சாதிக்கத் துணிந்து விட்டாயே.
தளராதே..மனிதா முன்னேறு.
வள்ளுவர் புன்னகை புரிகிறார்.
கேள்வி எனும் விழுச்செல்வன் உன்
கையில் உண்டு.
ஏன் எப்படி எதற்கு...
விடாதே கேள்விகளை.
கல்வி கேள்வி அறிவு
நுண்மாண் நுழைபுலம் திறவோர் காட்சி..
இவற்றிற்கு
தேசியக்கொடிகள் இல்லை
தேசப்பட எல்லைகள் இல்லை.
மொழியில்லை
இனமில்லை.
மனிதம் எனும் புள்ளி
வெளிச்சம் தேடி தேடி
அண்டத்தின் விரிவு போல்
வட்டங்களை அகலமாக்கிக்
கொண்டே இருக்கும்.
அறிவு நூல்கள் தான் மனிதனின்
மனித உரு தாங்கிய சுவடுகள்.
அவன் சிந்தனை
இடறும்போதெல்லாம்
கடவுள் அங்கே நிற்கிறார்.
ஏன் என்னை தடுக்கிறாய்?
மனிதன் கேட்கிறான்.
நானும் அதையே தான் கேட்கிறேன்.
கடவுள் கேட்கிறார்.
இவர்களோடு நான்
பலூன் ஊதி ஊதி விளையாடுவது
உனக்கு ஏன் பிடிக்கவில்லை?
ஆம்.
திடீரென்று வெடித்து
நீ ஒன்றுமில்லை என அறியும் போது
மறுபடியும் அவன்
பூஜ்யத்திலிருந்தா தொடங்கவேண்டும்?
தொடங்கட்டுமே..
இது ஒரு விளையாட்டு தானே.
சிவ லீலா
கிருஷ்ண லீலா
என்று கொண்டாடிவிட்டுப்போகிறான்.
உன்னக்கென்ன வந்தது?
"சிந்தனை" எனும் பிசாசே
குறுக்கே வராதே போ!
சிந்தனை பொருட்படுத்தவில்லை.
அறிவு அயர வில்லை.
அதன் விஸ்வரூபம் தான்
உண்மையில் விஸ்வரூபம்.
கடவுள் காட்டிய பூச்சாண்டிகள் எல்லாம்
ஒன்றுமே இல்லை.
மனிதனின் விஞ்ஞானம்
எல்லையே இல்லை எனும்
விளிம்பற்ற நிலையைக்கூட
வியக்கவைக்கும் கணித சூத்திரங்களால்
தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது.
கடவுள்
மனிதனின் ரோபோட்டுகளாக
மாறி வெகு காலமாகி விட்டது.
"கலி முத்திடுத்து"
எனும் ஒரே மந்திரம் தான்
அது உச்சரித்துக்கொண்டிருக்கிறது.
பிழைத்துப்போகிறது கடவுள்.
விட்டு விடுங்கள்.
கூர்மை மழுங்காத
சிந்தனைக்கதிர் அலைகளே
தொடருங்கள்.
மனிதம் உங்களோடு பயணிக்கும்.
வெற்றிகள் மனிதனுக்கே!
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக