செவ்வாய், 15 அக்டோபர், 2024

ஒரு படம் பார்க்கலாமா?

 


ஒரு படம் பார்க்கலாமா?
___________________________________


ஜனநாயகவாதிகளே!
ஓட்டுச்சோறு தின்று
பசியாறலாம் என்று
காத்திருக்கும்
கண்ணுக்கு கண்ணான‌
மக்களே!
நடப்புகளின் வெப்பனிலை
கதகதப்பானது தான்.
ஆனாலும்
அது ஒரு எரிமலையின்
லாவாக்குழம்பு
என்பதை நீங்கள்
உணர்ந்து கொள்ளாத‌
போதைகளின் வெள்ளம்
உங்கள் மீது விழுந்து
கொண்டே இருக்கிறது.
அதை
கடவுள் மந்திரங்கள்
கொப்பளித்துக்கொண்டே
இருக்கின்றன.
அறிவு வளர்ந்து விட்டதாய்
பொய்யறிவின்
கானல் நீர் ஆறு
உங்களைச்சுற்றிலும்
ஓடிக்கொண்டே இருக்கிறது.
அதில் நுரைப்படகுகள் ஆயிரம்
மிதக்கின்றன.
உண்மையான விஞ்ஞானம்
விஞ்ஞானிகளிடையே
பத்திரமாய் உறங்குகிறது.
வியாபார வெறியின் உந்து விசை
எல்லா மண்டலங்களுக்கும்
பலூன்கள் விட்டு
பணங்காய்ச்சி மரங்களை
நட்டு வைக்கிறது.
மக்களே
இந்த மரங்கள் பழுத்த
கனிகளில் பசியாறியிருக்கிறீகளா?
உலகத்தின் முக்கால் வாசி இடங்கள்
பசி பட்டினியின்
எலும்புக்கூட்டுக்குழிகளாத்தான்
இருக்கின்றன.
வளமான நகர நாகரிகங்கள்
பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
செழித்துக்கொழித்து
இருந்த வரலாறுகள்
ஏன் வறண்டு போயின.
சாதி மதங்களும்
இன வெறி நெருப்பும் மூண்டு
எல்லாம் சாம்பல் ஆயின.
இயற்கைப்பேரிடர்கள் கூட‌
மூடந‌ம்பிக்கைகளின்
பூதக்கண்ணாடியில்
அழிவின் பிரம்மாண்ட பிம்பங்களாய்
தோன்றின.
அதை வெல்லும் மனிதத்திறன்
தனி மனித பேராசைகளில்
அரச திமிர்வாதங்களில்
மழுங்கிப்போயின.
இந்த‌
கம்பியூட்டர் யுகமும் கூட‌
இன்னும்
அந்த வெறி வளர்க்கும்
கோட்டை கொத்தளங்களாக‌
மாறிவிடுமோ
என்ற அச்சம் மெல்லிதாய்க்கூட‌
ஓ மக்களே
உங்களுக்கு தோன்றவில்லையா?
செயற்கை மூளை மூலம்
செயற்கை மனிதர்களே போதும்.
இயற்கையான மக்களும்
இயற்கையான வளங்களுமே
இவர்களுக்கு இனி
கச்சாப்பொருள்கள்.
எத்தனை நாட்களுக்குத்தான்
எலிகளையும் தவளைகளையும்
வைத்து பரிசோதனை நடத்துவது?
ஆயுட்காலம் கூட்டித்தரும் கம்பெனிகள்
பில்லியன்கள் பில்லியன்களை
கொட்டி முளைத்து வரக்கூடும்.
மக்களே
உங்கள் ஓட்டுக்களையெல்லாம்
அந்த எந்திரங்கள்
பார்த்துக்கொள்ளும்.
கடற்கோள்
பேய் மழை.
பெரும் நெருப்பு
இவையா உங்களை காணாமல்
ஆக்கி விடும்
என்று நம்புகிறீர்கள்?
லாபம் என்று பார்க்க
ஆரம்பித்தால்
இந்த கோடி கோடி
மக்களை வைத்து
வியாபாரம் பண்ணுவோம்
என்ற
ஒரு வெறித்தீ கூட‌
மௌனமாய் மூண்டு
கொண்டிருக்கிறது.
இது ஆலிவுட் சை ஃபை படம்
அல்ல.
திரையே இல்லாமல் ஓடும்
ஒரு அபாய அறிகுறியின்
படம் இது.
இது வெறும்
ஹாலோக்ராஃபிக் கற்பனை அல்ல.
இன்றைய நடப்புகளின்
கூர்முனை இது.
மக்களின் விழிப்புணர்வு ஒன்றே
நமக்கு பாதுகாப்பு.
________________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக