"புல்லை நகையுறுத்தி..."
________________________________________
பொதுநலம் பற்றி
பட்டி மன்றத்தில்
பங்கெடுக்க
புறப்பட்டன
மலர்க்கூட்டம்.
தாமரை நீர் பற்றி எழுத..
ரோஜா காதலின் தேன் வடிக்க..
மல்லிகையோ இரவுகளையெல்லாம்
தூங்கவைக்கும் கனவுகளோடு வர..
சங்குப்பூ
இதழ் மடிப்புகளில்
ஒரு நாவலையே
எழுதிக்கொண்டு வர...
பட்டாம்பூச்சிகளோ
பிக்காஸோத்தனமாய்
முகம் எது
கண் எது
வாய் எது
என்று காட்டமலேயே
வண்ணச்சிலிர்ப்பை சிந்திவர...
பார்வையாளர்கள்
திமு திமு என்று
கூட்டமாய் வர..
களை கட்டியது
பட்டி மன்றம்.
கடைசியாய்
பாரிஜாதம்...
பெயரைப்பார்த்து
புல்லரித்துக்கொள்ளவேண்டாம்.
நம் முன்றில் அணிலாடும்
வெளியில்
சிதறிக்கிடக்கும்
பிச்சிப்பூக்கள் தான்..
அலட்சியமாய் நடைபோட்டு
சென்றது.
வழியில் படர்ந்த புல்லைப்பார்த்து
அற்ப புல்லே!
இன்னுமா நீ கிளம்பவில்லை?
என்று கேட்டது.
பட்டி மன்றத்தில் பேசி விட்டு
வாருங்கள்.
நான் என் பொதுநலப்பணியில் தானே
எப்போதும் இருக்கிறேன்...என்று
புல்லும் சிரித்தது.
நீங்கள் போவதும் வருவதும்
என்னை நசுக்கிக்கொண்டு தானே!
அந்த பொதுநலப்பூங்காவில்
புல்லையும் நகையுறுத்தி
பூவைக்கொண்டு
வியக்கவைத்தானே கவிஞன்
அவன் அந்த பொதுநலச்சூரியனுக்கு
புன்னகையால்
பாமரம் வீசினான்.
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக