வெள்ளி, 9 செப்டம்பர், 2016

சுடலை மாடன்





சுடலை மாடன்
=============================================ருத்ரா இ பரமசிவன்.

"ஐயனே!
பச்சை நிறமே பச்சை நிறமே என்று
எனது இந்த பச்சை வண்ணம் அலுத்துவிட்டது.
என்ன "ஃபேய்ர் அன்ட் லவ்லி "போட்டாலும்
சரியில்லை.
உங்கள் மேனி மட்டும் எப்போதும்
மினு மினுக்குதே!
எனக்கு கொஞ்சம் அந்த "பவுடரை" தாருங்களேன்."


"சற்று நேரம் பொறு தாட்சாயணி.
என் பக்தன் அங்கே
எரிந்து கொண்டிருக்கிறான்..
அவன் நீறு பூத்த பின் அதை
டப்பியில் அடைத்து லேபிள் ஒட்டி
காப்பி ரைட் ஹோலோகிராம் எல்லாம்
செய்து தருகிறென்.
அப்புறம் பூசிக்கொள்"
என்ன சுடுகாட்டுக் கம்பெனியா அது?"


இதற்குள்
"காடுடைய சுடலைப்பொடி பூசி என்
உள்ளங்கவர் கள்வன்..."
என்று தேவாரப்பண் முழக்கி
அங்கே கூட்டம் குவிந்தது.
இந்த
"சுடலைமாடன்களே"
எங்கள் திருநெல்வேலிச்சீமை
மண்ணின் மைந்தர்கள்.


தென்னாடுடைய இவனின் குரலே
எந்நாட்டுக்கும் வெளிச்சம் காட்டும் குரல்.


மரணத்தை ஜனனத்தில் பூசிக்கொள்.
அல்லது
ஜனனத்தில் மரணத்தின் நேசங்கொள்.


இதுவே
இன்றைய எல்லா மனமுறிவு நோய்களுக்கும்
அருமருந்து.
அச்சம் தவிர் அல்ல.
அச்சத்தையே அருந்து.
எல்லா இசையமப்புகளும்
கொரியாகிராஃபிகளும்
சுடுகாட்டில் தான் அரங்கேற்றம்.
துவைதம் அத்துவைதம் என்ற‌
ஜன்னிப் பிதற்றல்களின்
களம் எல்லாம் அங்கே தான்.
பிடி சாம்பல்களில்
நான்கு வர்ணங்கள் ஏது?
நான்கு வேதங்களும் ஏது?
துடிப்பு அடங்கிய இந்த
இதயத்தின் துடிப்பு ஒலியை
கேட்டிருப்பீர்களே !
"டப் டப்" எனும்
அந்த துப்பாக்கிச்சூடுகள்
இன்னுமா உங்கள்
"அஞ்ஞானத்தை"ச் சாகடிக்கவில்லை?


உண்மையில்
அங்கே சுட்டெரிக்கப்படுவது
உடல்கள் அல்ல.
சச்சரவுகள் கிளப்பும்
எல்லா மதங்களும் தான்.
இது விந்தை அல்லவா?
சுடலை மாடனுக்குள்
எல்லா சூத்திரங்களும்
சுருண்டுகிடக்கிறது.
தீக்குள் விரலை விட்டு
அந்த விஞ்ஞானத்தை
தீண்டும் இன்பம் இது!
"நந்த லாலா"க்களுக்கு
இது இன்னும் புரிந்திருக்காது?
அதனால் தான்
இத்தனைக்\கோத்திரங்களும்
அதன் ஆணவத்தின்
இத்தனை ஆத்திரங்களும்.!
இந்த ஆத்திரங்களும் சாத்திரங்களும்
எரிந்து தொலையட்டும்.
எரிய விடுங்கள்!


============================================

14 பெப்ரவரி 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக