திங்கள், 5 செப்டம்பர், 2016

கல் பொரு சிறுநுரை......




கல் பொரு சிறுநுரை.....
================================ருத்ரா

(1) சிறை

அவள் போனபிறகு
அந்த சன்னல் கம்பிகளை
தொட்டு தொட்டு பார்த்தான்.
சிரிப்பென்ற வெள்ளிமுலாம் பூசினாளே
எங்கே அது?
இன்னும் "கம்பிகளை"
எண்ணிக்கொண்டு தான் இருக்கிறான்.
காதல் சிறை !


_________________________________________


(2) வளையல் துண்டுகள்

ஏன் உடைத்து சென்றாய் வளையலை?
பௌர்ணமித் துண்டுகளாய்
அவை கீழே
சிதறிக்கிடந்ததில்
பஞ்சாங்கம் மாறிப்போனது!
வரவேண்டிய
முழு நிலவு முகம் மறைந்து போய்
இன்று அமாவாசை ஆகிப்போனது.


___________________________________________


(3) புதிய விஞ்ஞானம்

வேப்பங்காயாக கசந்த
குவாண்டம் மெக்கனிக்ஸ் இனித்தது.
அன்று நீ கல்லூரி வகுப்புக்கு
நெஞ்சோடு தழுவி எடுத்துவந்த‌
உன் புத்தகத்தை இரவல்கேட்டு
பேராசிரியர் நடத்திய
விஞ்ஞானப்பாடம் அல்லவா அது?


__________________________________________


(4) "கல் பொரு சிறுநுரை"

"கல் பொரு சிறுநுரை" பற்றிய அந்த
"குறுந்தொகை வகுப்பில்"
குளுக்கென்று சிரித்து விட்டு
குனிந்து கொண்டாய்.
அந்த சிறுநுரை பட்டு
என் நெஞ்சத்து பாறாங்கல்
நொறுங்கியே விட்டது.


====================================ருத்ரா
6 நவம்பர் 2013ல்  எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக