"இந்த மன்றத்தில் ஓடிவரும் ........" (2)
நம் மன்றத்துக்கு ஒடி வரும் காற்றில் தவழும் கவிதைகளுக்கு மொழியின் வேலி இல்லை.உணர்வின் பெயர்ப்புகளே இங்கு காற்றாய் வீசும்....
==================================================பேப்லோ மெதினா
(IN DEFENSE OF MELANCHOLY )
வாரம் ஒரு முறையாவது
அந்த நகரத்துள் வலம் வருவேன்.
செங்கற்கள் அடுக்கிய கட்டிடங்களில்
சிவப்பு ரத்தினக்கற்கள்
குவிந்து குவிந்து
வளர்வது போல் இருக்கும்.
ஆனாலும் அங்கு
புறாக்களையும் பூனைகளையும் கூட
கொல்லக் காத்திருக்கும்
கொலை வெறி உமிழும் கண்கள்.
கசாப்புக்கடைக்காரர்களின்
வீடுகளையும் கடந்து செல்வதுண்டு.
அவர்களின் வெட்டரிவாட்கள்
தூங்கா நோயால் சாணை பிடிக்கப்படும்
கொலையின் தீப்பொறிகளை அங்கு
சிதற விட்டுக்கொண்டிருக்கும்.
இருள் கவியும் ஆற்றுப்பாய்மரங்களில்
கிழிந்து கிழிந்து வெடவெடக்கும்
கடல் அலைப்பிழம்புகளில்
எங்கோ ஊளையிடத்துவங்கிவிட்ட
நாயின் கூரிய பற்களில்..
வந்து இழைகிறது...
ஓ!அழகிய துன்பம் எனும் பெண்ணே!
உன்னை இப்படி செதுக்கி செதுக்கிப் பார்த்து
களிக்கின்றேனோ!
மிச்சமாய் இருப்பதையும் அங்கே
சுவைப்பேன்.
அவள் அந்த குறுகிய கட்டிலில்
எனக்காக காத்துக்கொண்டிருக்கிறாள்
குண்டு குழி ரோடுகளில்
கரை புரளும் மழைநீரைப்
பார்த்துக்கொண்டு..
ஒளியெல்லாம் ஒழுகிப்போன
அந்த நோஞ்சான் அந்திப்பொழுதைப்
பார்த்துக்கொண்டு...
இலைகள் யாவும் நாவுகளாய்
அசைய அசைய பாடும்
அந்த மரங்களைப்பார்த்துக்கொண்டு..
=============================================================
மொழி மறு வார்ப்பு.... ருத்ரா இ.பரமசிவன்
==============================
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக