வெள்ளி, 2 செப்டம்பர், 2016

யார் அது?


2  செப்டம்பர்  2016


யார் அது ?
============================================ருத்ரா இ பரமசிவன்
அந்த மீன் கொத்திப்பறவையின்
சிவப்பு நீலச்சிறகுகள்
தண்ணீர்ப்பரப்பிலிருந்து
செங்குத்தாய் நின்று துடிக்கிறது.
ஒரு மீன் அதன் கண்ணில்
குறி வைக்கப்பட்டவுடன்
உடனே பறப்பது நின்று
நீரில் குத்தீட்டி போல்
அது விழுந்து பாயும்.
அதை உன்னிப்பாய் நின்று
கவனிப்பது என் வழக்கம்.
தாமிரபரணி கன்னடியன் வாய்க்காலில்
குளிக்கும்போது
இடுப்பளவு நனைந்து நின்று கொண்டே
இதைப்பார்த்திருக்கிறேன்.
நான் குளிக்கும் படித்துறையிலிருந்து
கொஞ்சம் தள்ளி இருக்கும்
படித்துறையிலிருந்து தண்ணீர் எடுக்கும்
அவள் யார்.?
தெரியாது.
முகம் பார்க்கவில்லை.
கருகருவென்று அகலப்பரந்து
விழும் கூந்தல் அருவியில்
முகம் தெரியவில்லை.
குமுக் என்று குடம் மூழ்குவதும்
வளையொலிகள் கலந்து
இனிமையாய்
அந்த தண்ணீர் எனும் பளிங்கு விழுதுகள்
என்னை இங்கு வந்து வருடுவதும்.....
நான் இன்னும் அந்த
நீலைச்சிவப்பு சிறகுகளின் துடிப்பையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த அந்தரத்து துடிப்பில் என் இதயம்.
கலர்  கலராய் அந்த கண்ணாடி வளையல்களே
அந்த சிறகுகள்.
அது வரை நீரின் அடியில்
இந்த பரும் பரும் மீன்கள்
தங்கள் வாய்களால்
கவ்வி கவ்வி பிடுங்கி கொண்டிருக்கின்றன.
மொசு  மொசு வென்று
அவற்றின் மென்கடிகளில்
யாரோ அடியில் இருந்து
கிச்சு கிச்சு மூட்டுவது  போல் இருக்கும்
மின்னல் வருடல்கள்.
என்ன அது?
யார் அது?
பார்த்து விட்ட முகத்தை விட
பார்க்காமலேயே  விட்டு விட்ட
அந்த முகம் எத்தனை அழகு!

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக