புதன், 7 செப்டம்பர், 2016

"அறிவோம் நன்றாக..." (ஆசிரியர் தினம்)

"அறிவோம் நன்றாக..." (ஆசிரியர் தினம்)
===================================================ருத்ரா
"..குருவே துணை" என்று
அரிசி நிரப்பிய தட்டில்
இன்றைய "விசைப்பலகையை"
அன்றே நாம் பார்த்துவிட்டோமே.
இதற்கு
உயிர்த்துணை அல்ஜீப்ராவாய் இருந்து
உருவம் தந்தவர்கள் ஆசிரியர்கள்.
ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும்
தம் "அக நூல்"களை வருடி அல்லவா
நம் முக நூல்களை படிப்பார்.
ஓலைச்சுவடியைக்கூட‌
ஏந்தி சென்ற அன்றைய நாட்களில்
நம் மொழியின் உயிரெழுத்து மெய்யெழுத்து வரிகள்
ஊர்ந்துகிடக்கும்
அந்த நீட்டோலை வடிவ
குறுந்தகடுகளை மறக்க இயலுமா?
உடைந்த சிலேட் என்றாலும்
அதுவே தான்
நாளும் நாம் உற்றுப்பார்க்கும்
அறிவின் சன்னல்.
அந்த "விண்டோ"வுக்குள்ளும்
விடலைகளின் குறும்புச்சிரிப்புகள்
மத்தாப்பு வனங்கள் தானே!
அங்குலமும் சொல்லிக்கொடுப்பார்
அதை வைத்து விரல் முட்டியையும்
அளந்து பார்ப்பார் நம் ஆசான்.
அந்த நாளில்
அன்பின் அழுத்தம் திருத்தமான அர்த்தம்
கண்டிப்பு தானே.
நீள மான பிரம்பு அல்லது ஒரு அடிஸ்கேல் தான்
அவரது செங்கோல்.
ஆனால் அவர் அமர்ந்திருக்கும்
அரியாசனம் மட்டும் நம் நெஞ்சங்களில் தான்.
காலத்தின் வரலாற்று ஆறு
எத்தனையோ கரைகள் உடைத்து
தடம் புரட்டியிருக்கிறது.
மடிப்பொறியில்
மவுஸ் சரியில்லை என்று
வீதி விளிம்புகளில் போராட்டம்.
அரசியல் எனும்
ஒரு மலைப்பாம்பின் முதுகில் ஊர்ந்து கொண்டிருக்கிறதோ
இந்த "பிள்ளைத்தமிழ்"க் கூச்சல்கள்
என்றும்
திகைக்க வைக்கிறது இன்றைய சித்திரங்கள்.
கண்ணை விற்று சித்திரம் வாங்கும்
கல்வி வியாபாரத்திலும்
தேர்தல் வியாபாரத்திலும்
இலவசம் என்பதே எங்கும் பரவசம்.
ஓசியாய் சக்கர நாற்காலி கிடைக்கிறதென்றால்
காலை ஒடித்துக்கொண்டாலும் பரவாயில்லை.
இலவசமாய் கிடைக்கிறதென்று
அந்த கண்ணுக்கு தெரியாத சர்வாதிகாரத்தை
ஜனநாயகத்தை காவு கொடுத்தாலும் பரவாயில்லை.
என்று "ஓட்டை " விற்று வாங்கும்
இந்த படிப்பினை எப்படி வந்தது?
இந்த சிந்தனை எப்படி நுழைந்தது?
இனி வருகின்ற
புதிய ஆசிரியர்களாவது
இந்த பஞ்சடைந்த கண்ணாடிகளை
கழற்றி வைத்து விட்டு
வகுப்பு எனும் கோயில்களுக்குள்
புதிய வெளிச்சம்  காட்ட
நுழைவார்களா?

===================================================
7 செப் 2014ல் எழுதியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக