ஜோல்னாப்பைகள்
============================ருத்ரா இ பரமசிவன்
இந்த உலகத்தை
தங்கள் தோள் பையில்
தூளி கட்டி
ஒரு பேனாவில்
தூள் கிளப்பவும்
அல்லது
அதை தூங்க வைக்கவும்
வலம் வரும்.
ஒரு சித்தாந்தம்
எப்படி கரு தரித்தது என்று
அதன் மசக்கைப்பருவத்திலிருந்தே
பிள்ளைத்தமிழ் பாடுவது போல்
ஆலாபனை செய்யும் வெற்றுப்பைகள்.
"தமிழுக்கும் அமுது என்று பேர்"
என்று இனிப்பாக
எங்காவது ஒலித்துவிட்டால் போயிற்று!
"லேங்குவேஜ் ஷ்சாவனிசம்" என்று
குதி குதியென்று குதிக்கும்
இந்த பைகள்.
சம்ஸ்கிருதமே உலக மொழி என்று
மேக்ஸ் முல்லர்களை உட்காரவைத்து
பல்லக்குத் தூக்கும்.
எங்கோ ஒரு குட்டித் தீவில்
ராணுவப்புரட்சி என்று
தலைக்குள் எல்லாம்
மூளையை எரித்துக்கொள்ளும் .
அண்டைத்தீவில்
சொந்த இனம்
ஆயிரம் ஆயிரமாய்
கசாப்பு செய்யப்படும்போது
ஒரு விநோதமான சாணக்கியத்தனம் பற்றி
விரிவுரை ஆற்றும்.
வெளிநாட்டுத்தேர்தலின்
ஜனநாயக நாடி நரம்புகளை
அவர்களின் "ஜெபஃ ர்சன் பேப்பர்ஸ்"லிருந்து
வரி வரியாய் பிளந்து கட்டும்.
அதே தொனியில்
உள்நாட்டு தேர்தலின் போது
கொண்டு வந்து நிறுத்தப்பட்ட
அந்த கரன்சிகளின் "மகா தேர்கள் "
பற்றியெல்லாம்
வெளுத்துக்கட்டினாலும்
இன்னும் இங்கு
கிழக்கு வெளுத்த பாடில்லையே
என்ற கவலை இல்லாமல்
காலையில் உதிக்கும் "சூரியனே"
படு அலர்ஜியாகி
மக்கள் விழிக்கும்போது விழிக்கட்டும்
என்று "உப்புமாக்கட்சிகளோடு"எல்லாம்
கூட்டணி கணக்கு போடும்.
உலகத்தொழிலாளர்களே
என்று உரத்து முழங்கினாலும்
உள்ளூர் பஞ்சசப்படி உயர்வோடு
இவர்கள் விடியல்
கல்லறைக்கு போய்விடும்.
கோபால் ராவ் இல்லாவிட்டால்
ஒரு சோமையாஜுலு
என்ற பெயரே
யதார்த்தம் என்று நம்பப்படும்.
எனவே
மறந்தும்
தமிழ் வழுதி அல்லது தமிழ் ஒளி
என்ற பெயர்கள்
தலை தூக்குவதே "பூர்ஷ்வாத்தனம்"
ஆகிவிடும் இவர்களுக்கு
"காக்கையை
யார் இப்படி
பிய்த்துப்போட்டது"
"தடாக நிழலில் காக்கை"
மேலே உள்ளது கவிதை.
கீழே உள்ளது தலைப்பு.
இது சர்ரீயாலிசம்
அல்லது
ஃ பெண்டாசி
அல்லது ஏதோ ஒண்ணு !
கவிதையை
அவியப்போடுமுன்
கோழியை உரிப்பது போல்
சிறகை செதில் செதிலாக பிய்த்து
நவீனத்துவம் பின் நவீனத்துவம்
என்று
வார்த்தைகளில்
கோழி குருமா வைப்பதே இங்கு
இலக்கியப்பசியெடுத்த
அறிவு ஜீவித் தனம்.
மண்ணின் மக்களின்
நாடி நரம்புகளை விட
அந்த "பிரம்ம சூத்ர பாஷ்யம்" மாதிரி
புரியாத வாக்கு வாதங்களின்
"நாடி ஜோஸ்யமே"
இவர்களின் கனவு.
அந்த குமிழிக்குள்ளிருந்து கூட
ஏதோ ஒரு "லாவா"என்று
பிதுக்கிக்கொண்டிருக்கும்
இவர்களின் தாகம்.
ஆம் "அறிவு ஜீவிகள்"!
அறிவை ஆசை போட்டு அசைபோட்டு
ஒரே இடத்தில்
அசையாமல் அணியடித்துக்கொண்டு
சிந்தனைசெய்யும்
தர்க்க வாதிகளே
இந்த "ஜோல்னாப்பைகள்".
===========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக