திங்கள், 12 செப்டம்பர், 2016

உயிர்ப்பதிகாரம்

உயிர்ப்பதிகாரம்
================================ருத்ரா இ பரமசிவன்

எங்கே இளங்கோ?
காவிரி அழைத்தாள்.
என்ன தாயே?
என்றான் அவனும்.
நான் இப்போது
நீரின் ஆறு இல்லை...சுடும்
நெருப்பின் ஆறாய்
கொதித்திடுகின்றேன்.

தமிழ் மொழியின்
கிளை மொழிதானே
கன்னடத்தவனும்
நம்மிடத்தானே என‌
நறுந்தடம் பதித்தேன்
வளம் பல குவித்தேன்.
சமக்கிருத மயக்கத்தாலே
தன்னின் தன்னின் உதிரத்து
தமையனாம் தமிழனை
தாக்க வந்த கொடுமை என்னே!

தண்ணீர் அல்ல உணர்வாயோ! உன்
தாயின் அந்த   முலைப்பாலுக்கா
இத்தனை  அணைகள்?
இத்தனை  அணைகள்?
எல்லாம் எல்லாம் நும்
திராவிடருக்குத்தானே
ஏன் இதனை  மறந்தீர்?
எதற்கு இந்த வெறித்தீ?
சூழ்ச்சியில் எரியும் இத்தீயும்
அரசியல் வெந்தீ. அறிவாயோ?
கனக விசயர் வேடம் தாங்கிய
சாணக்கியத்தாரின்
சதித்தீ முடிச்சு இதுவேயாம்.
சாதாத்தமிழனுக்குள்ளே ஒரு
ஈழத்தமிழனும் இருப்பதனால்
மையக்குடுமி வேந்தர்களின்
மௌன நாடக வலை விரிப்பில்
கர்நாடகமுமே இங்கே யொரு
துர் நாடகம் தன்னை
நடத்துது நடத்துது
தினம் தினமே.
வெறிக்கு வெறியை
வளர்க்காமல் தமிழா
அறிவுத்தீ கொளுத்திடுவாய்.
கற்றோர் மற்றோர் யாவரையும்
கலந்ததோர் கூட்டம் கூட்டிடுவாய்.
இரு முனை நடப்பும் ஒருமிப்பாய்
கலந்ததோர் கூட்டம் கூட்டிடுவாய்.
இரண்டு பக்கமும் தவிப்பு உண்டு.
இரண்டு பக்கம் தாகமும் உண்டு.
வெறும் கன அடி அல்ல தண்ணீர் !
அது ஆகிடலாமோ நம் கண்ணீர்.?
ஆறப்போடுவோம் அத்தனையும் ...நம்
உயிரின் ஆற்றில் அத்தனையும்
ஆறப்போட்டே  சிந்திப்போம்.
பகையை நட்டு சம்பா அறுவடை
செய்தல் இயலுமோ சிந்திப்பீர்.
திராவிடக்கட்சிகள் எத்தனை? எத்தனை?
பகைமை நெருப்பின் சாம்பற்பூவில்
எத்தனை திராவிடக்கட்சிகள் சமைப்பீர்?
அதனால்
இருந்தால் இன்று இளங்கோ அடிகள்
பாடிடுவார்  சிலிர்ப்பதிகாரம் ...அதுவே நம்

உயிர்ப்பதிகாரம்! உயிர்ப்பதிகாரம்!
வேண்டாம் இங்கே" உயிர்ப்பலிகாரம்"

===================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக