வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஒலைத்துடிப்புகள் (6).





    16 செப்டம்பர் 2016





ஒலைத்துடிப்புகள் (6).

===========================================ருத்ரா இ பரமசிவன்


"பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

துறைபடி அம்பி அகமணை ஈனும்"

......


ஐங்குறு நூற்றின் 168 ஆம் பாடல் இது.அம்மூவனார் பாடிய கற்பனை வளம் செறிந்த ஒப்பற்ற வரிகள் இவை..இதில் வரும் கடற்கரை காட்சியில் அடுக்கு அடுக்காய் சித்திரங்கள் விரிவது போல் காட்சியை நான் கண்டு களிக்கலாம்.வெள்ளைக்காக்காய் பார்த்தேன் என்றால் நம்மை மேலும் கீழும் பார்க்கும் இன்றைய தமிழர்கள் அப்படித்தான் பார்த்திருப்பார்களோ அம்மூவனாரை? ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் "அந்த சிறுவெண் காக்கைகளை" கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் "துறைபடி அம்பி  அகமணை" ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் "மணை" எனப்படுகிறது.இன்றும் "மணை" என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா? வாழ்க்கையில் மங்கலம் தொடங்கும் மணமேடையில் கூட "மணையில்"தான் பெண்ணும் மாப்பிள்ளையும் மணையில் அமர்ந்து தான் தொடங்குகிறார்கள்.அந்த "அம்பி"மணையில் அவ்வளவு நுட்பம் இருக்கிறது."ஈனும்" என்பதும் கூட சிறுவெண் காக்கைகள் அங்கே தங்கள் இல்லம் தொடங்க கூடு கட்டி குஞ்சுகள் ஈனுவதை குறிக்கும்.பறவைக்கூடு தானே அதற்கு "அருமணை" (அரியதாக அங்கே கட்டப்படும் கூடு என்ற  பொருளில்) அம்மூவனார் எழுதியிருக்கலாமே.மனித வாழ்க்கையையே அந்த சிறு வெண் காக்கைக்கு ஏற்றி (வீடு.... உள்ளம் என்று பொருள் பட) "அக மணை" என்றல்லவா எழுத்தாணியைக்கொண்டு கீறியிருக்கிறார்.இங்கு மேலோட்டமாய் உள்ளடங்கி இருக்கும் மணை என்று உரை செய்தாலும் "அக நானூற்றின்" காதல் மணம் அந்த மணையில் அவற்றிக்கு கூடு கட்ட உந்து விசை ஆகி இருக்கிறது என்று "உள்ளுரையும்" அதில் உளது.படகுகள் இரு முனையும் கூராக இருப்பதால் அவற்றிற்கு அம்பு என்ற சொல் வழங்குவது நமக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.கூராக கிழித்துச் செல்லக்கூடியவை "அம்பி" என சொல்லப்படுகிறது.அம்பு இங்கு "நீருக்கும்" ஆகி வரும் ஆகுபெயர் எனலாம்.தண்ணீர் என்ற சொல்லுக்கு அம்பு என்ற சொல் நமக்கு அப்பு (இடைப்போலி) என்றும் வழங்கப்பட்டிருக்கலாம்.வடமொழியில் அப்பு என்று ஆகியிருப்பதன் உட்குறிப்பில் தமிழின் தொன்மை நன்கு வெளிப்படுகிறது.

தமிழ்ச்சொல்லின் இந்த "அம்பியின்" அம்பு என்னில் தைத்ததையே இங்கு சங்கநடைக்கவிதை ஆக்கியிருக்கிறேன்.




துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌
==============================================ருத்ரா இ பரமசிவன்


தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்

கொடுவரி முதலை குடை தண் துறைய‌

குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌

உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்

பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து

அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்

வேங்கை வரித்த திண்கால் ஓமை

அசைவுறு காலை முரண்தர முரலும்

அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து

அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.

அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌

துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌

ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு

மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.

புலம்பல் காலொடு புள் ஓர்த்து நின்று

என்று வருங்கொல்? இடமெது?தடமெது?

குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது

குழைஇழையாடும் மழைக்கண் தோழி.







பொழிப்புரை

=============================================ருத்ரா இ பரமசிவன்


தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்

கொடுவரி முதலை குடை தண் துறைய‌

குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌

உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்

பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?



தான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் இயல்புடையது முதலை. மேல் தோல் தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைப் போன்றும் வரிகளைக் கொண்டதுமான மேல் தோலை உடைய முதலை மூழ்கி மூழ்கி குளிக்கும் ஆற்றுத்துறையை உடையவனாகிய தலைவனே.ஒரு நாள் அவன் வருவான் என செய்திக்குறி அனுப்பியும் இந்த நீண்ட நெடும் இரவில் வராமல் இருந்துவிட்டான்.தூக்கம் தொலைத்து நான் மாய்ந்து விட்டேன்.என் உடலை உயிர் தின்னுவது போலவும் உயிரை உடல் தின்னுவது போலவும் எனக்கு நோய் தந்து என்னை ஆட்கொண்டு எங்கு சென்றாய்? தலைவனை நோக்கி தலைவி கேட்பது போன்ற கூற்று இது.



அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து

அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்

வேங்கை வரித்த திண்கால் ஓமை

அசைவுறு காலை முரண்தர முரலும்

அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து

அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.



கடற்கரையில் உள்ள ஒரு காட்சி அங்கே விரிகிறது.அளத்தல்(முகவை) பாத்திரமான மரக்கால் எனும் அம்பணம் ஒன்றை கவிழ்த்துப்போட்டது போன்ற ஆமையின் முதுகுப்புறத்தில் அடிக்கடி விட்டு விட்டு குரல் எழுப்பும் நாரை (குருகு) ஒன்று நிற்கிறது.அது சிலம்பின் பரல் ஒலி போல் ஓசை எழுப்புகிறது.அந்த ஒழுங்கான ஓசை திடீரென்று முரண்பட்டு ஒலிக்கிறது.ஏனெனில் வேங்கை மரத்து பட்டை வரிகளைப்போன்ற அமைப்புடைய ஆமையின் உறுதியான கால்கள் நகர்வுற்ற பொழுது நாரை அவ்வாறு கூச்சல் இட்டது.ஆமை முதுகில் ஒரு நில அதிர்வு போல நிகழ்ந்த அந்த அச்சத்தில் சிறகை பட பட என்று அடித்துக்கொண்டு நாரை கலக்கம் அடைந்து அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் தஞ்சம் அடைகிறது.தலைவன் வராமல் விட்டது அவளுக்கு உள் மனத்தில் அப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டதை உட்குறிப்பாய் இக்காட்சி உணர்த்துகிறது.நரைக்கு தஞ்சம் கிடைத்தது போல் தலைவன் மீண்டும் அவளிடம் வந்து விடுவானா? அடுத்துவரும் வரிகள் அதை விவரிக்கின்றன.







அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌

துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌

ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு

மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.

புலம்பல் காலொடு புள் ஓர்த்து நிற்கும்.

என்று வருங்கொல்? இடமெது?தடமெது?

குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது

குழைஇழையாடும் மழைக்கண் தோழி.




சேறு அடைந்த உப்பங்கழியின் பக்கம் சார்ந்த (இருங்கழிப் பால)அந்த‌ கரையில் நெடுநாளாய் கிடப்பில் கிடக்கும்(பழைய) படகு (அம்பி) தனக்கே உரிய நீரில் செல்லும் பாய்ச்சலை மறந்து கிடந்தாற்போல‌ தலைவி துயரம் தோய்ந்து கிடக்கிறாள்.அதனால் அதை தோழியிடம் இவ்விதம் கூறுகிறாள்.பொன் போன்ற மஞ்சள் நிற (கடற்கரையின்)ஞாழற் பூவின் படர்ந்த புள்ளிகள்  போன்ற தேமல் (இப்பசலை நோயில்)உடம்பு முழுதும் சிற்பம் செதுக்கியது போல் (மெய்யது பொள்ளி...பொள்ளி என்றால் செதுக்கி என்று பொருள்) பொய்மைப்பூக்கள் படர்ந்தாற்போல் தோன்றும்.அதனால் நான் காற்றின் ஒலியில் ஒரு புலம்பல் கேட்டு துன்புறுவேன்.வானத்தை வெறித்து பறவைகள் பறப்பதை கூர்மையோடு உற்றுநோக்கி என்னை ஆற்றிக்கொள்ளப் பார்ப்பேன். இருப்பினும் தோழி!அவன் மீண்டும் என்று வருவான்? எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான்?என உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளே! குளிர்பார்வையால் என்னை களிப்பூட்டுவளே!.இப்படி கேள்வி கேட்பது தானே தலைவிகள் எனும் இந்த இரக்கத்துக்குரிய காதலிகளின் பண்டைய வழக்கமான கேள்வி (தொல் கேள்)கேட்கும் தன்மைகள்.




==================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக