செவ்வாய், 20 செப்டம்பர், 2016

முரண்பாடுகளே அழகு.





முரண்பாடுகளே அழகு........................ருத்ரா
======================================


புரிதல்!
எதை வைத்து
எதை புரிவது?
அந்தக்கூவத்தில்
ஊறி பாதி அழுகிய‌
தென்னை மட்டை
புரிந்து கொண்டது
தென்னையையா?
அந்த கூவத்தையா?
எந்த மொழி
இங்கே 
அடையாள சத்தங்களை
அடைக்காத்துக்கொண்டிருக்கிறது?
சமஸ்கிருதத்துள் தமிழா?
தமிழுக்குள் சமஸ்கிருதமா?
சிவனா?விஷ்ணுவா?
கல்லுருவின்
கர்ப்பப்பைக்குள்
முண்டிக்கொண்டு
முனை கூட்டுவது.
அதோ
அந்த ஈழச்சகதியில்
மூழ்கிப்போனது
துப்பாக்கியா?
தாகமா?
எங்கும் எதிலும்
இந்த‌
ஒத்தையா ரெட்டையா
விளயாட்டு தான்.
வேறு எல்லாவற்றையும்
அப்பால் வையுங்கள்.
இந்த இருட்டுப்படலத்து
வானம்
திடீரென்று
ஒரு பிறையை
ஞானவெளிச்சமாய்
தருகிறதே
அதில் கூட‌
எல்லாப்புள்ளிகளும்
கோடுகளும் தெரிகிறது.
ஒரு கோதண்டமும்
சூலமும்
அடர்த்தியான‌
இருட்கடலை
குத்திக்கிழித்து
ஒளிப்பிரளயம் 
உண்டு பண்ணுகிறதே!
ஏதோ 
எறும்புகளின் ஊர்வலம்
என்று இருந்தவன்
அது
திரும்பிவரவே இயலாத‌
ஒரு முற்றுப்புள்ளிக்கு
போகிறது என்றும்
அதுவே
இந்த உலகத்தை எல்லாம்
நசுக்கிக்கூழாக்கும்
மரணம் எனும்
கனமான சொல் என்று
புரிந்ததும்
அந்த வலிக்கு
ஒரு மரணம் கண்டுபிடிக்க‌
ஆசைகளை களைந்து எறி
என்றானே
அந்த அரசமரத்து முனிவன்.
அந்த புரிதலில் கூட‌
ஆயிரம் பௌர்ணமிகள்
ஒன்றாய் திரண்டு
வெளிச்சத்தை
"பிளிறின".
வெறும்
உடலையும் ரத்தத்தையும்
கொண்டு செய்யப்பட்ட ஆடுகளே
உங்கள்
வெளிச்சத்தின் மேய்ப்பர்
வந்து விட்டார்..
ஆம்.
மனிதர்களே
ஒருவர் தலையை
ஒருவர் வெட்டிக்கொள்வதில்
மிஞ்சப்போவது
ஒரு முண்டத்தின்
பரமண்டலமா?
இல்லை..இல்லை..
என் மார்பில்
தலையில்
ஆணி அடித்தாலும்
ஆணித்தரமாக‌
இதை மறித்துச்சொல்வேன்..
இன்னும் இன்னும்
இந்த 
புரிதல் காடு
அடர்த்தியானது.
அந்த ராபர்ட் ஃப்ராஸ்ட்
சொன்னது போல்
அந்தக் காடு அழகானது.
ஆனாலும்
நாத்திகத்தின்
ஒவ்வொரு மைல்கல்லாய்
பயணம் தொடருங்கள்.
அல்லது
ஆத்திகத்தின்
பன்னீர்க்காவடிகள்
பால் காவடிகளில்
பயணம் தொடருங்கள்.
ஆனால்
நிச்சயம்
அது
நீங்கள்
எதை வைத்துப்
புரிதல் செய்கிறீர்களோ
அதற்கு
எதிரானது தான்.
இந்த முரண்பாடுகளே அறிவு.
இந்த முரண்பாடுகளே அழகு.
இந்த முரண்பாடுகளே வாழ்வு.

===================================ருத்ரா
14 DECEMBER 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக