13 செப்டம்பர் 2016
இந்த மன்றத்தில் ஓடி வரும்....
=================================================ருத்ரா
(இந்த மன்றத்தில் ஓடி வரும் காற்றில் கலந்து வரும் ஏதாவது வேறு மொழியின் கவிதை வாசனையை முகர்வதே இவ்வரிகள் )
ஆவியாய் ஒரு.....
============================== ========(பெயர்ப்பு : ருத்ரா)
ஒரு மழை பெய்த போது
உற்றுப்பார்த்தேன்.
இருட்டின் கருப்புப்பிழம்பில்
அது பிழியப்படவில்லை.
ஆனால்
எங்கும் தூள் தூள் தூள்
ஏதோ ஒரு கதிரியக்கம்
உயிரை உடலையெல்லாம்
தூளாக்கி பரப்பியது.
"தூள்" காட்சி தான்!
காதுகளில் ரத்தம் வழிந்தது.
காலடிகளில்
பூமியின் காக்காய் வலிப்பு.
பூகம்பம்!
பிணக்குவியலிலும்
உயிர்ப்பூச்சு!
பூக்களின் நாளங்கள்
ரகசியமாய் மகரந்தங்கள் தெறித்தன.
அந்த புல் திடலில்
ஒரு ஒளிப்பசையை
துளியிலும்..துளியிலும் ..துளியாய்
சிரிப்பை தடவியது!
இன்னும் ஒளியாண்டுகளின் கடல்களுக்கு
அப்பாலும் அப்பாலாய்..
கருந்துளையின் அந்த தொப்பூள் முடிச்சில்
சுடர் வீச்சாய்
பிரபஞ்ச நிகழ்வுகளின்
வாசல் விரிப்பில்
உங்கள் சிந்தனைகள் சவங்கள் ஆகின.
உங்கள் மனது...
அதை மிதித்து உள்செல்லும்
ரத்னக்கம்பளங்கள்..
அப்புறம் உங்கள் மூளைப்பொக்கிஷம்
எல்லாம் ஆவி ஆவி ஆவியே தான்.
இருப்பினும்
அதோ பாருங்கள்!
மகரந்த சேர்க்கைக்குத் துடிக்கும்
முதல் நறுமணம்..
ஒரு மெல்லிய மேகப்பிஞ்சாய்..
கதிர் பாய்ச்சுகிறது!
ஏதோ இன்னொரு நாட்டில்
அந்த இன்னொரு புல்திட்டின்
செயற்கை ஒளி பளபளப்பு வர்ணத்தில்
நுண்கதிர் இழைகிறது.
அங்கு மேயும் கலைமான்கள்
தன் கொம்புப்பின்னல்களினூடே
திடும் என்ற
அந்த கரும் மழையில்
அந்த தூள்..தூள்..தீயை
தின்று தீர்க்கிறது.
எங்கும் மரணத்தின் ஆவியாய் ஒரு.....
எங்கும் மரணத்தின் ஆவியாய் ஒரு.....
காதுகளை மூடிக்கொள்ளுங்கள்.
வெடிப்பிரளயம்
உங்கள் செவிப்பறைகளை
ரத்தக் கூழாக்கலாம்!
============================== ===================
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக