சனி, 3 செப்டம்பர், 2016

ஓலைத்துடிப்புகள் (4)






3 செப்டம்பர் 2016



ஓலைத்துடிப்புகள் (4)
==========================================ருத்ரா இ பரமசிவன்


சங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன்   பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோடையை.அதில் "கல்" "உயிர்" என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது.இவற்றிற்கு"ஒலி" என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த "வேர்" வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும்.








அவன் அவிழ் ஒரு சொல்
================================================ருத்ரா இ பரமசிவன்


குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய பண்ணின்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்துப் பால்பெய் திங்களில்.
கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.
இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் என்செயும்  முயங்கு இழைத்தோழி.


=====================================================



பொழிப்புரை
=================================================ருத்ரா இ பரமசிவன்



குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.



குட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து "பொதிகை"என அழைக்கப்படும்.அந்த மலையின் அருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.



கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.


கல்லிலிருந்து ஒலிக்கும்.உயிரிலிருந்தும் ஒலிக்கும்.
என்ன அந்த நுண்ணொலி?
அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி
 கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது
 விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும்  நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை
வருடிச்செல்வதைக்கண்டுநான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று  விழும். ஒவ்வோரு பருவத்தேயும்
பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும்  விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே.அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.



இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்
நாள் ஈரும் வாளது கூர்முள்
என்றுகொல் மலர்தலை சீர்க்கும்?
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.


இடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல்  அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும்? அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும்  பூவின் கொத்துகளாய்  இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் துயர்தனை நீ அறிவாய்.



===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக