திங்கள், 28 அக்டோபர், 2024

இனி வெட்ட வெளிச்சமே.

 

தமிழா!தமிழா!!

_______________________________________


இந்த அழைப்பு 

உன் அடி ஆழத்திற்கு செல்ல‌

ஒரு வரலாறு தேவைப்படுகிறது. 

குகை மனிதர்கள்

நகர் மனிதர்களாக ஆகும் வரை

நடந்த வேட்டைகள்

ஓடிய ரத்த ஆறுகள் எல்லாம்

எல்லாம் கூட‌

ஒரு சினிமாப்படத்தின்

பிரம்மாண்டத்தில்

உனக்கு இப்போது காட்டப்படுவதை

நீ பார்த்திருப்பாய்.

இந்த உலகம் அதில் ஒரு

வெளிச்சத்தைக்கண்டிருக்கிறது.

அதுவே நம் தமிழ்!

நாம் இடையில் விலங்குகள்

பூட்டப்பட்டோம்.

அவை இன்னும் மிச்ச சொச்சங்களாக‌

நம்மை அழுத்திக்கொண்டிருக்கின்றன.

அவையே

சாதிகளும் மதங்களும் மற்றும்

வற‌ட்டு சாத்திரங்களும்.

ஆனால்

இதுவே போதையாகி 

நம்மை இன்னும் இன்னும் கீழே

அழுத்திக்கொண்டிருக்கிறது.

சூழ்ச்சிக்கார கூட்டம் ஒன்று

இதையே நம்மிடையே கவர்ச்சிகரமான

கடவுள்கள் என்றும்

நாங்கள் சொல்லும் இந்த‌

கடவுள்கள் மட்டும் தான்

உங்கள் கடவுள் என்றும்

சட்டத்தை விடவும் அதிகாரமிக்க‌

கட்டளைகளை வைத்து

அச்சமூட்டு கின்றன.

ஜனநாயகம் எனும் பரிணாம‌த்தை

சுக்கு நூறாக்கவே

இந்தக் கூட்டம் சதி செய்கிறது.

அரசியல் சட்டம் எதற்கு?

தேர்தல்கள் எதற்கு?

மாநிலங்கள் எதற்கு?

பாவங்களின் வடிவமான‌

இந்த மக்களா

சட்டங்களை இயற்றுவது?

நானே கடவுள் 

எல்லாவற்றையும் இயக்குபவன்.

என் அம்மா இறந்தபோது

இதை நான் புரிந்து கொண்டேன்

என்று சொல்லிக்கொண்டு

ஒரு குரல் மேலெழும்பியதை

நீங்கள் கேட்கவில்லையா?

இதை எதிர்த்தே ஆகவேண்டும்

என்பதே திராவிடம்.

ஆகா..இதோ பாருங்கள்

வானத்தை அப்படியே கறந்து

ஒலியாக்கி

நான்கு வேதம் ஆக்கியிருக்கிறோம்

என்று ஒரு கூட்டம் வந்தது.

ஆனால் அது

மக்களின் மீது 

மயக்கும் மந்திரக்கூச்சல்களின்

தூரிகையை வைத்து

நான்கு வர்ணம் பூசியது.

நாங்களே முதல் வர்ணம் மட்டும் அல்ல‌

நாங்களே அந்த கடவுளின்

தொப்பூள் கொடியிலிருந்து

திரித்து முறுக்கிய‌

நூல் அணிந்திருக்கிறோம்

என்றது.

இந்த சமுதாயத்தையே

தன் உழைப்பால் படைத்து

வியர்வையும் ரத்தமும் சிந்திய‌

தொண்ணூறு சதவீதத்துக்கும்

அதிகமான மக்களை

அடிமை வர்க்கம் என்றும்

அவர்கள் இழிபிறவிகள் என்றும்

கோடு போட்டது.

அந்த நச்சுக்கோடுகளே

சாத்திரங்கள் ஆகின.

இதில் நம் எரிமலைத்தமிழ்

என்ன ஆயிற்று?

கடவுள்கள் சாதிகள் மதங்கள் எனும்

கும்மாளங்களில்

நீர்த்துப்போகும் படி செய்தது

அந்த நரிக்கூட்டம்.

ஆளும் ஆதிக்கம் அந்த‌

நரிகள் சொல்வதையே

சட்டங்கள் ஆக்கியது.

அப்புறம் ஆயிரம் இரண்டாயிரம் என்று

ஆண்டுகள்

கொடுமையான கனபரிமாணமாய்

ரோடு ரோலர்கள் ஆகிய‌

அந்த சுயநலக்கும்பலுக்கே

பாதைகள் ஆகி நசுங்கிக்கிடந்தோம்.

தமிழர்களே!

அந்தப்பாதைகளில் செல்லும்

வண்ண வண்ண வாகனங்களின்

அடியில்

உங்கள் எலும்புகள் நொறுங்கும் 

சத்தங்கங்கள் கேட்க வில்லையா?

இடையில் ஆங்கிலேயன் 

வந்தான்.

அவனும் கனத்த 

அடிமைச்சங்கில்களுடன் தான்

வந்தான்.

அவன் திறந்து வைத்த‌

ஆங்கிலம் என்னும் சன்னல் தான்

வெளிச்சம் காட்டியது.

வேத வர்ணங்கள் நம்மை

சவக்குழியில் வீழ்த்தியது புரிந்தது.

த்ரமிளம் என்றும் த்ரவிடம் என்றும் 

நம் மொழியை

மிலேச்சம் எனும் அசிங்க மொழியாக‌

அந்த நரிகள் ஆக்கி வைத்திருந்த 

தந்திரம் புரிந்தது.

அவர்களே  நம் தமிழை திராவிடம்

என்று சொன்னதால்

அந்த வெள்ளைச்சாளரம் வழியாகவே

நம்மிடம் ஒரு ஆயுதமாக அது

வந்து விட்டது.

நம்மைச்சுரண்டும் ஆதிக்கத்தை

அதை வைத்தே தான் நாம்

எதிர்த்தாக வேண்டும்.

அந்த சூழ்ச்சியை நாம் புரிந்து கொண்டதன்

வடிவமே திராவிடம் என்பது.

என்னருமைத் தமிழர்களே!

இந்த திராவிடத்தை நம்பாதீர்கள்

என்று

பசப்பல் மொழியில்

பல வித வேடங்களில் வருகிறார்கள்.

அந்த ஜிகினா அவதாரமே

இப்போது நம்மிடையே வலம் வரும்

அந்த விஜய் எனும் "பைப்பர்".

இவர் ஊதும் குழலில் மயங்கி

எலிகளாகி கூட்டம் கூட்டமாய் போய்

அந்த 

மரண ஆற்றில் மூழ்கி விடாதீர்கள்.

ஆம்.

வரும் 2026 என்பது

தமிழின் எதிரிகள் எனும்

திராவிடத்தின் பகைவர்கள்

நம் தமிழ் நாட்டை பாழ்வனம் ஆக்க‌

பல குரல்களில்

அரிதாரப்புகை தூவி

வருகிறார்கள்.

விஜய் எனும் அந்த துடிப்பான 

இளைஞருக்கு நம் வாழ்த்துக்கள்.

ஒரு விஷம் முறிவு பட‌

அந்த விஷமே மருந்து ஆவது இல்லையா?

இவர்கள்  விஷமத்தனமான‌ முழக்கங்களும் 

அப்படித்தான்.

இப்போது தான் திராவிடப்பகையின் 

புகை மூட்டம் நமக்கு புரிகிறது.

ஆம் 

விஜய் அவர்களே

நீங்கள் கக்கும் விஷத்துக்கு

உங்கள் அர்த்தமற்ற பிதற்றல்களே

விஷமுறிவு..

விஜய் அவர்களே வருக!

பட்டி தொட்டியெல்லாம்

நம் திராவிட மாடல் மேலும் மேலும்

கூர்மை பெறும்.

நீக்கள் கூறும் ஊழல் எதிர்ப்பு

உங்கள் மேநாட்டுக் காரிலிருந்து

தொடங்குகிறது என்பது

இனி வெட்ட வெளிச்சமே.


_________________________________________________























ஞாயிறு, 27 அக்டோபர், 2024

விஜய் மகா சமுத்திரம்




விஜய் மகா சமுத்திரம்

_________________________________

சொற்கீரன்



இந்து மகா சமுத்திரத்தை

பெயர்த்துக்கொண்டு வந்து விட்டாரா

விஜய்?

இன்னோரு எம் ஜி ஆர் வெள்ளமா

விஜய்?

தமிழ் மக்கள் 

ஒரு நில நடுக்கத்தை 

எதிர் கொள்ளப்போகிறார்களா?

கோடி கோடி பணத்தை

கொட்டப்போகிறது அவரது

ஒரு திரைப்படம் என்பது

நன்கு தெரிகிறது?

தமிழ்த்தரைப்படத்தில் ஒரு திரைப்படமா?

அது தான் அந்த பஞ்ச் டைலாக்.

"அது "ஃபாசிச‌ம்னா"இது என்ன "பாயசமா?"

பெரியாரின் அட்டைக்கருப்பு நாத்திகம்

எங்களுக்கு இல்லை.

அவரது பெண்ணுரிமை சமூக சமத்துவமே

எங்கள் அடி முழக்கம்.

இது என்ன திராவிட மாடலா? குடும்ப ஆட்சியா?"

இவர் இப்படி பலூன்கள் விட்டிருக்கிறார்.


தமிழ் நாட்டின் நலத்திட்டங்களுக்கு

உலகமே பாராட்டுகிறது.


தமிழர்களே

இந்த வெள்ளம் உங்களை

கரையேற்றுமா? மூழ்கடித்து விடுமா?

என்பது

உங்கள் சிந்தனை எழுச்சியில் இருக்கிறது.

உங்கள் சிந்தனைப் புரட்சியில் இருக்கிறது.

தமிழ் எதிரிகளுக்கு இது பாயசம் அல்லது அல்வா வாக‌

இருக்கலாம்.

அல்லது தமிழ்ச்சுடர்களுக்கு இது ஒரு பாய்சனாகவும் 

இருக்கலாம்.


ஃபாசிசத்தை பாயசம் ஆக்கி 

அதாவது இனிய நலத்திட்டங்கள் ஆக்கி

தமிழர்களுக்கு

வெற்றிச்சரித்திரத்தை

படைத்துக்கொண்டிருக்கிறது

தமிழ் நாடு அரசு!


காமிராவுக்குள் 

கானல்நீர்க்கோட்டை 

கட்டிக்கொண்டிருப்பவரால்

இந்த உண்மையின் தரிசனத்தை

காணமுடியுமா? என்ன?


தமிழர்களின் நாடித்துடிப்புகள் வேறு.

தமிழர்களுக்கு நாடகக் கூட்டங்கள் வேறு.

சினிமாவுக்குள் சினிமா காட்டலாம்.

சிந்தனை வெளிச்சங்களுக்குள்

சினிமா இருட்டுகளின் கவர்ச்சிகள்

வெற்றி காண இயலாது.

மாற்றான் தோட்டத்து 

மல்லிகையும் சரி

உள்ளூர்க் காட்டின் 

கள்ளிகளும் சரி

தமிழனுக்கு அது

யாதும் ஊரே யாவரும் கேளிர் தான்.

நிகழும் வரலாற்று நொதிப்புகளில்

வெறும் பேரிரைச்சல்களும்

கூட்ட நெரிசல்களும்

தள்ளு முள்ளு செய்து கொண்டு

ஓடுவதில்

மீண்டும் நம் தமிழ்

நசுங்கி கூழாகலாம்.

தமிழ் ஒரு பிரளயம்.

அது நிகழ்வுகளில் மூழ்காதது.

நிகழ்வுகளை

தன் பாதையாக ஆக்கிக்கொண்டு 

ஓடும் பேராறு.

அந்த பஃறுளி யாறு

தடுக்கும் இமயங்களைக்கூட‌

கூழாங்கற்களாய் புரட்டித்தள்ளி விட்டு

பெருகும் பெருகும் பெருகும்.

வாழ்க தமிழ்!

வெல்க தமிழ்!!


________________________________________________________ 

புதன், 23 அக்டோபர், 2024

படையல்கள்

 

படையல்கள்

___________________________________

சொற்கீரன்



நம் இறைவர்கள்

கை கோர்த்து கொண்டு

நம் வழிபாடுகளையும்

பூக்களையும்

தூப தீபங்களயும்

ஏற்றுக்கொள்கிறார்கள்.

நம் படையல்களையும்

விழுந்து விழுந்து

கும்பிடும் நம்

நமஸ்காரகாரங்களையும்

ஏற்றுக்கொள்கிறார்கள்

கை கோர்த்துக்கொண்டு

அந்த "சைத்தான்களோடு".


______________________________________



"மெல்லிய செங்கோடு"

 


கவிதைகளே

கதறத்தொடங்குகின்றன?

நான் கவிதையா?

நான் கவிதை இல்லையா?

நான் ரெண்டுங்கெட்டானா?

இதெல்லாம் ஒரு கவிதையா

என்று

ஒரு கவிதை

இன்னொரு கவிதை மேல்

வெற்றிலை எச்சிலைக் 

குதப்பிக்கொண்டு

காறி உமிழ்கிறது.

ஆகா...அருமை அருமை

என்று

ஒரு கவிதை 

இன்னொரு கவிதைக்கு

மணிமகுடம் சூட்டுகிறது.

சொற்கள் 

கன்னிக்குடம் கிழித்துக்கொண்டு

வரும்போது

வங்காளக்குடாக் கடலின்

எதோ 

ஒரு துளியிலும் துளியாக உள்ள‌

அந்த துளி

காற்றாக‌

மழையாக‌

கட்டடங்களையே

தட்டி நொறுக்குகின்ற‌

பெரும்புயலாக‌

இருப்போம் என்று

நினைக்கிறதா?

இப்படி இது

குப்பையாகவும் 

கோபுரமாகவும்

பார்த்து

அமரும் அமர்வில்

என்ன நிகழ்கிறது?

யாருக்குத்தெரியும்.

நிகழ்தகவு எனும்

ப்ராபபலிடி

இப்போது ஒரு

கவிதை எனும் குவாண்டம்.

அறிவிற்கும் அறிவின்மைக்கும்

இடையில் குழைவியாக துடிக்கும்

அந்த "மெல்லிய செங்கோடு"

(தின் ரெட் லைன்)

இங்கே

எல்லா பிரபஞ்சங்களையும்

பந்தாடுகிறது.

சிந்தனை

எப்போதெல்லாம் சிவப்பாக‌

எரிகிறதோ

அப்போதே தூசு துரும்புகள் எல்லாம்

சாம்பல்.


____________________________________________________

சொற்கீரன்

செவ்வாய், 22 அக்டோபர், 2024

ரஜினியின் வேட்டைத்துப்பாக்கி.

 


ரஜினியின் வேட்டைத்துப்பாக்கி.

___________________________________

சொற்கீரன்


சிகரெட்டை தூக்கி எறிந்து

வாயில் கவ்வும்

அதே இவரது

யுத்த தந்திரம் 

இப்போது

மூக்கு கண்ணாடியை 

எகிற வைத்து

கண்களில் அமர்த்திக்கொள்வது.

இது

அபி நயமா?

ஸ்டைலா?

நடிப்பா?

மேன்னரிசமா?

எதுவோ எப்படியோ

அந்த 

பஞ்ச் டைலாக் எனும்

"பந்து அடிக்கும் வசனம்" 

இவரது நயம்.

இது இன்னும் கூட 

நூறு ஆண்டுகளுக்கு

வசூல் குவிக்கும்.

மராட்டிய மண்ணுக்குள்

தமிழின் மின்சாரம் பாய்ச்சிய‌

சொல்லின் கூர்மை அது.

வேட்டையன் குறி வைக்கும்

"என்கவுண்டர்"

எல்லா மூலை முடுக்குகளையும்

துழாவுகிறது.

வீரப்பன் விழுந்தது.

யோகி ஆதித்தனார்

காவிக்குண்டுகளில்  குவித்தது.

இப்போதும்

சென்னையில் காக்கித்துப்பாக்கிகள்

வெடித்தது.

செம்மரக்கட்டைகளில்

புல்லட்டுகள் துளைத்ததை

தொட்டுக்காட்டியது.

எல்லாமே

என்கவுண்டர்களின்

எட்டுத்தொகையும் 

பத்துப்பாட்டும் தான்.

நீதியும் ஜனநாயகமும்

துப்பாக்கியை வைத்து

தராசு காட்டும் 

விளையாட்டை அருமையாக‌

அரங்கேற்றியிருக்கிறார்

ஞானவேல் ராஜா அவர்கள்.

அவருக்கு நிச்சயம் இது

வேல் வேல் வெற்றிவேல் தான்.

துப்பாக்கிக்குழல்கள் தான் அதிகார ஊற்று

என்று ஒரு

சித்தாந்த மேதை

சித்திரம் காட்டிப்போய்விட்டான்.

துப்பாக்கிக்குழல்களே

ரோஜா நாற்றுகளை

சொருகிக்கொண்டு

ஜனநாயக "பூச்சாண்டி"காட்டும்

கரு தான் திரைக்கதை.

இந்த "டாய் ஸ்டோரிகளே"

நம் அன்றாட வரலாறுகள்

ஆகிக்கொண்டிருப்பதில்

எத்தனை "சிந்துவெளி சரஸ்வதிகளை"

தோண்டிக்கொண்டிருக்க முடியும்?


________________________________________________________

திங்கள், 21 அக்டோபர், 2024

தீ

 

தீ
___

உன் வயது விளிம்பில்
காதலுக்கு அர்த்தம் சொல்ல‌
வானவில்லும்
பட்டாம்பூச்சியும் போதும்.
காதல் எனும் சாதல் பற்றி
சிதையில் வெந்து வெந்து
எழுந்திருக்க‌
ஒரு கவிதை வேண்டுமே.
எழுதினான்.
இதயத்தின் ஆழத்துள் மூழ்கி
சொற்களின் கருப்பொருள்
நுழைந்து கவிதை எழுதினான்.
அனுப்பினான்.
அவளுக்கு கிடைத்தது.
ஆனால் அவளுக்கு வெறும்
காகிதமாகத்தான் அது தெரிந்தது.
ஆழம் தெரியவில்லை.
துடிப்பும் உணரவில்லை.
ஏதோ எழுத்துக்கள்
கம்பளிப்பூச்சிகளாய் ஊர்ந்தன.
அவளும் படித்தவள் தானே.
ஆனால் காதலை
அவன்
ஆசைத்தீயில் கருகிச் சாகும்
சாதலாக அல்லவா
எழுதியிருந்தான்.
அந்தத்தீயில் கருகிச்சாம்பலான‌
அந்த ரோஜாவை
அவள் பார்க்க முடியவில்லை.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம்
சிரிப்பு தான்.
அவனை அந்த தீக்குளியில்
தள்ளியதும் அவள்
சிரிப்பு தான்.
அது அவனுக்கு
தேன்.
ஆனால் அதுவே அவனுக்கு
இனிக்கும் தீ ஆனதால்
எழுத்துக்கள் எல்லாம் தீக்கொழுந்துகளாகின.
அந்த அக்கினியின் அதிர்வு எண்களில்
அவள் இன்னும் யாழ் மீட்டவில்லையே.
இப்போதும் அவளுக்கு தெரிந்தது
சிரிப்பு தான்.
அவள் சிரித்துக்கொண்டாள்.
அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள்.
_______________________________________________
சொற்கீரன்
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

களித்தொகை (1)

 


களித்தொகை (1)

___________________________________________


கறி இவர் வேங்கையின் நுண்தகை வீக்கள்

மென் மழை தூஉய் நனிகளி போழ்தை

மீ மிசை உவப்ப தரும் தண்மையின்

நீழல் வீழ்த்தும் எல் என்னுப கதிரவன்

அதனை அவனும் ஆங்கு காசு மழை அன்ன‌

நிழற் பொடி பெய்த காட்சியில் மலிந்தான்.

அலர் அல்ல இஃது நீ தெளிதி

எனவாங்கு

அவள் வாள்நுதல் வருடி புல்லிய‌

வெள்ளிய அருவி இழிந்தன்ன‌

தழீஇ தந்தான் எல்லே நாண‌

இருள் கவித்து மஞ்சு தரிப்ப காண்.


_______________________________________சொற்கீரன்


சனி, 19 அக்டோபர், 2024

அகழ்நானூறு 82

 


அகழ்நானூறு 82

____________________________________

சொற்கீரன்


வடு போழ்ந்த கண்ணினாய்

ஒளிறுபு மின் அன்ன‌

நின் கண் வௌவி 

கல்லென சமைந்தான் என்னே.

ஒருபிடி படியும் சீறிடம்

எழுகளிறு உவக்கும் உளத்தன்

இமிழ்தரு சிமையத்தான்

ஆயிரம் விண்ணும் நிவக்கும்

கவலை ஆறுகள் நீந்தி

சுரம்பல கடாஅத்து ஆங்கே

பொருளும் வளனும் ஈட்டி

அற்றைத் திங்கள் மின்னிய‌

அணிமுறுவல் இன்றும் ஏந்தி

அன்று கண்டாங்கு காண்குவன் 

பெரும வருக இம்முக்கூடல் என‌

நீலக்குவளை கவிழ்ந்தவள் நீர்த்து

குண்டு சுனைக்குள் குழைநிழல்

சிரிக்கும் புல்லிய பொழுதின்

புகுதந்து நின்றாள் என்னே.

___________________________________________


ஊற்று வெட்டி....

 ஈரோடு தமிழன்பன் கவிதையில்

ஊற்று வெட்டி உருவாக்கிய வரிகள்

______________________________________

சொற்கீரன்.....19.10.2024


மனிதன் ஊமையாய்

கைக்குறி

காட்டி நின்ற போது

அவன்

இருட்டைத்தான்

பிசைந்து கொண்டிருந்தான்.

இன்னும் அது

என்ன? என்ன?

என்று

எண்ண ஆரம்பித்ததும்

உள்ளுக்குள்ளேயே

எழுந்தான் எழுச்சி பெற்றான்.

இதுவே இங்கு

"ஏண்ணும் எழுத்தும்" கண் என ஆகியது.

அது இல்லாமல் தான்

குருடாய் நின்று 

காற்றில் கயிறு திரித்தான்.

விடியல் எனும் 

சொல் எத்தனை ஒளி ஒலி ஆனது?

அதுவே அவனுள்

மன்னி நிற்கும் மனம் தந்தது.

மனம் மனிதன் ஆனது!

அய்யா!

உங்கள் வரிகளை உரிக்க உரிக்க‌

ஏழு அல்ல ஏழாயிரம் கடல்கள்

பொங்கி வருகின்றன.

மிகவும் சிலிர்த்துவிட்டேன்

உங்கள் சொற்களில்!

__________________________________

சொற்கீரன்

வெள்ளி, 18 அக்டோபர், 2024

கனவு

 

கனவு

______________________________


இந்த சல்லாத்துணி கொண்டு

தினம் தினம்

மூடுகிறாய்.

கனவே!

இந்த சில்லரை வர்த்தகத்தில்

உன் வியாபாரம் தான் என்ன?

எங்கள் ஆசைகளின்

கனபரிமாணம் 

இன்னும் குமிழிகளாகத்தான்

இருக்கின்றன.

அரும்பு மீசைப்பருவத்தில்

வளையல்களின் ஓசைகளை

எங்கள் தலையண ஓரங்களில்

வட்ட வட்டமாய்

நக்கூரம் பாய்ச்சுகிறாய்.

குழந்தை குட்டிகளோடு

நாங்கள் கூடுகளுக்குள்

முடங்கிய போதும்

எங்கள் வாழ்க்கையின்

விளிம்புகள் தோறும்

பொன்னும் வைரமுமாய்

ஜிகினா அலைகளில் 

நீந்தச்செய்கிறாய்.

ஆசைகளின் 

ராட்சச இறக்கைகள்

வானம் முழுதும் 

சடசடக்கிறது.

நட்சத்திரப்பொடிகள் 

காலையில் தூவிக்கிடக்கும் 

என்று

உள்ளம் ஏங்குகிறது.

அப்புறமும் 

இறுதிக்காலத்துப் படுக்கையிலும்

சிவலோக பதவி என்றும்

வைகுண்ட சொர்க்க லோகங்கள்

என்றும்

முகத்தருகே வந்து

உடுக்கை 

அடித்துக்கொண்டிருக்கிறாய்.

ஒரு பிடி மண் தான் நீ

என்று

அர்த்தம் சொல்வதற்கா

இத்தனை கனமான‌

சடங்கு சம்ப்ரதாய அகராதிகளை

வாழ்க்கை என்ற பெயரில்

எங்கள் மீது சுமத்தினாய்.

போ...போய் விடு

என்று அன்றே

உன்னை ஒரு

நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு

நாத்திகன் என‌

தலை நிமிர்ந்திருப்பேனே.

நான் சொன்ன மந்திரங்கள் எல்லாம்

வெறும்

கனவுப்பிதற்றல்கள் தானா?

ஒன்றுமே இல்லை என்று

இன்று சீட்டுகளை விரித்து

விட்டாயே!

பயம் எனும் மேகமூட்டத்துள்

நீ ஆட்டிய படி

நிழல்களாய் ஆடினோம்.

...

இப்படித்தான்

எமனே என் அருகில் வா

உன்னை காலால் உதைக்கிறேன்

என்றான் கவிஞன்.

பயம் எப்படியோ

போதைச்சரக்கு 

ஆகிப்போனது.

கற்பனை 

கனவு

கடவுள்

அப்புறம் சாவு.

மனிதா!

சிந்தனை என்ற‌

வெளிச்சத்தின் ருசியே இல்லாமல்

இந்த பேய்க்குழிக்குள்ளா....

விழப்போகிறாய்?

அடச்சீ..போய் விடு.

.............

விலுக்கென்று எழுந்தேன்.

இது கனவா?

விறீர் என்று தேள் கொட்டியது

போல் அல்லவா இருக்கிறது.

எழுந்து உட்கார்ந்து

சிந்திக்க துவங்கியிருக்கிறேன்.


________________________________________

சொற்கீரன்


வியாழன், 17 அக்டோபர், 2024

"சோசியல் எஞ்சினீயரிங்"

 


"சோசியல் எஞ்சினீயரிங்"

______________________________


அந்த வெள்ளைக்காரர்கள்

கையாண்ட பிரித்தாளும் 

தந்திரத்தை வைத்து தான்

நம்மூர் வெள்ளைக்காரர்கள்

சனாதனம் என்ற பெயரில்

கருப்பு மற்றும் வெள்ளை நிறமற்ற 

நிற‌த்தவர்கள் மீது

ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

அதற்கு தான் காரணமில்லை

என்றும்

மேலே இருக்கிற கடவுள் ஏற்படுத்திய‌

ஏற்பாடு தான் இது

என்றும்

புராணங்கள் இதிகாசங்கள்

மற்றும் வேதாந்த பாஷ்யங்கள்

மூலம் 

ஊதி பெருக்கிய மந்திரம் 

மற்றும் சடங்ககுகள் எனும்

பொய் மூட்டைகளின் கனம் தாங்காமல்

இந்த தேசத்து

அறிவின் அச்சே முறிந்து போனது.

நம்மை ஆண்ட‌

அதே வெள்ளையர்களின் கல்வி முறை

இந்திய தேசத்துக்கு

ஒரு வெளிச்சம் காட்டியது.

சாதி வர்ணங்களின் இருட்டு தேசமாக‌

இருந்த நம் நாடு

கொஞ்சம் வானம் வெளுக்கத்

தொடங்கியதை அறிந்தது.

சுதந்திரம் எனும் குரல் உயர்ந்தது

உண்மைதான்.

ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மதம்

தன் வேதாந்த வர்ண தேசத்தை

நிறுவ வரிந்து கட்டியது.

மக்களின் விழிப்புணர்வு அதற்கு

குறுக்கே நின்றது.

அதன் விளைவாக 

ஒரு மூவர்ணக்கொடி நிழலில்

அந்த நான்கு வர்ணக்களைகளையும் எதிர்த்து

போராடும் நிலையில் தான் 

நாம் இன்னும் இருக்கிறோம்.

சாதிகள் நமக்கு அக்மார்க் முத்திரை

என்ற பொய்மைப்போதையைத்

தான் 

இந்த கோவில் விழாக்களும்

குடமுழுக்குகளும்

உருமாக்கட்டல்களும்

ஆண்ட பரம்பரை எனும்

ஆதிக்க வெறியாட்டங்களும்

ஊத்தி ஊத்திக்கொடுக்கிறது.

இதை 

யார் யாருக்கு 

எப்படி ஊத்திகொடுத்து

மனிதம் எனும் ஒரே ஆற்றலை

சுக்கு நூறாக்கும் சூழ்ச்சிகள் செய்யும்

சூட்சுமமே இந்த "இஞ்சினீயரிங்".

நம் இளைய சமுதாயம் இந்த

சூழ்ச்சிக்கு இரையாமல்

மதசார்பற்ற சாதிய வன்மம் அற்ற‌

ஒரு மக்கள் சமுதாயத்தை

படைக்க அணிதிரளவேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் இருந்து

புறப்படும் இளம்புயல்களே!

தந்திர‌வாதிகள் இப்படி

பொறிவைத்து நம்

ஜனநாயகத்தை விழுங்கும்

அபாயங்களை புரிந்து கொள்ளுங்கள்.

மானுடம் வென்றதம்மா

என்று ஒரு கவிஞன் பாடினான்.

ஆம் 

இந்த சமுதாய சமநீதியின்

மானிடமே நம் மகத்தான பேராற்றல்.

வாழ்க ஜனநாயகம்!

வெல்க ஜன நாயகம்!


_______________________________________________

சொற்கீரன்.










மழை

 

மழை
__________________________________
இது வெறும்
ஹெச் 2 ஓக்களின்
குடைச்சல் என்று தான்
நினைத்திருந்தோம்.
கோமாதாக்கள் வேண்டாம்
நாங்கள் நீருக்குள்ளிருந்து கூட‌
அரசியல் வெண்ணெய்
அற்புதமாய் கடைவோம்
என்று
சில போலி ஊடகங்கள்
மத்தும் கையுமாக‌
அதாவது காமிராவும் கையுமாக‌
குட்டிக்கரணங்கள் அடித்தன.
ஆடு மிதக்கும் மாடு மிதக்கும்
மக்கள் மூழ்கும்
காட்சிகளின் வெள்ளமே
26 ஓட்டுப்பெட்டிக்குள்
ஆட்சியாய் நம் கையில் விழும்
என்று
சப்புக்கொட்டிக்
கொண்டிருந்தவர்களுக்கு
வருண பகவான்
வச்சான் பாரு
சரியான ஆப்பு.
யார் கண்டது?
இஸ்ரேல் காரனிடம் சொல்லி
அடுத்த "க்ளவுட் பர்ஸ்டிலாவது"
அபூர்வ தண்ணீர்க் குண்டு மழைக்கு
ஏற்பாடு செய்தாலும் செய்வார்கள்.
தமிழர்களே!
எச்சரிக்கையாய் இருங்கள்.
ஆரிய மூல வேர்
யூத மண் வரை செல்லுகிறது.
திராவிட சிங்கங்களே
உங்கள் வீர கர்ஜனை
உலகத்தின் திக்குகள் எல்லாம்
எதிரொலிக்கட்டும்.
அச்சங்களை
அப்புறப்படுத்துவோம்.
அபாயங்களை
எதிர்த்து வெல்லுவோம்.
மழை எங்களுக்கு பகை அல்ல.
நம் வளத்தின்
வெண் கொற்றக் குடையே
அது தானே.
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்.
தமிழ் வாழ்க!
தமிழ் வெல்க!
_________________________________
சொற்கீரன்.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

அகழ்நானூறு 81

 

அகழ்நானூறு 81

____________________________

சொற்கீரன்



வணர் ஒலி ஐம்பாலாய் 

வரை அடுக்கத்து

ஒள்ளருவி வரி கூந்தல் 

விரித்தது காண்.

வெள்ளாறு வியன் அகல‌

கொடுமுடியும் மறித்தாங்கு

பொருள் கொள்ள ஆரிடை

நனிஊர்ந்த மல்லன்

நடை திறக்கும் நாளே

நன்னாளாமென சுருள் அரவு

பரி அற்று கிடந்ததன்ன‌

அவன் வரவு நோக்கி

அவண் நோற்றாள் என்

என முன்றில் வீக்கள்

அலமரல் ஆற்றும் மன்னே.

________________________________________________

ஒரு படம் பார்க்கலாமா?

 


ஒரு படம் பார்க்கலாமா?
___________________________________


ஜனநாயகவாதிகளே!
ஓட்டுச்சோறு தின்று
பசியாறலாம் என்று
காத்திருக்கும்
கண்ணுக்கு கண்ணான‌
மக்களே!
நடப்புகளின் வெப்பனிலை
கதகதப்பானது தான்.
ஆனாலும்
அது ஒரு எரிமலையின்
லாவாக்குழம்பு
என்பதை நீங்கள்
உணர்ந்து கொள்ளாத‌
போதைகளின் வெள்ளம்
உங்கள் மீது விழுந்து
கொண்டே இருக்கிறது.
அதை
கடவுள் மந்திரங்கள்
கொப்பளித்துக்கொண்டே
இருக்கின்றன.
அறிவு வளர்ந்து விட்டதாய்
பொய்யறிவின்
கானல் நீர் ஆறு
உங்களைச்சுற்றிலும்
ஓடிக்கொண்டே இருக்கிறது.
அதில் நுரைப்படகுகள் ஆயிரம்
மிதக்கின்றன.
உண்மையான விஞ்ஞானம்
விஞ்ஞானிகளிடையே
பத்திரமாய் உறங்குகிறது.
வியாபார வெறியின் உந்து விசை
எல்லா மண்டலங்களுக்கும்
பலூன்கள் விட்டு
பணங்காய்ச்சி மரங்களை
நட்டு வைக்கிறது.
மக்களே
இந்த மரங்கள் பழுத்த
கனிகளில் பசியாறியிருக்கிறீகளா?
உலகத்தின் முக்கால் வாசி இடங்கள்
பசி பட்டினியின்
எலும்புக்கூட்டுக்குழிகளாத்தான்
இருக்கின்றன.
வளமான நகர நாகரிகங்கள்
பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
செழித்துக்கொழித்து
இருந்த வரலாறுகள்
ஏன் வறண்டு போயின.
சாதி மதங்களும்
இன வெறி நெருப்பும் மூண்டு
எல்லாம் சாம்பல் ஆயின.
இயற்கைப்பேரிடர்கள் கூட‌
மூடந‌ம்பிக்கைகளின்
பூதக்கண்ணாடியில்
அழிவின் பிரம்மாண்ட பிம்பங்களாய்
தோன்றின.
அதை வெல்லும் மனிதத்திறன்
தனி மனித பேராசைகளில்
அரச திமிர்வாதங்களில்
மழுங்கிப்போயின.
இந்த‌
கம்பியூட்டர் யுகமும் கூட‌
இன்னும்
அந்த வெறி வளர்க்கும்
கோட்டை கொத்தளங்களாக‌
மாறிவிடுமோ
என்ற அச்சம் மெல்லிதாய்க்கூட‌
ஓ மக்களே
உங்களுக்கு தோன்றவில்லையா?
செயற்கை மூளை மூலம்
செயற்கை மனிதர்களே போதும்.
இயற்கையான மக்களும்
இயற்கையான வளங்களுமே
இவர்களுக்கு இனி
கச்சாப்பொருள்கள்.
எத்தனை நாட்களுக்குத்தான்
எலிகளையும் தவளைகளையும்
வைத்து பரிசோதனை நடத்துவது?
ஆயுட்காலம் கூட்டித்தரும் கம்பெனிகள்
பில்லியன்கள் பில்லியன்களை
கொட்டி முளைத்து வரக்கூடும்.
மக்களே
உங்கள் ஓட்டுக்களையெல்லாம்
அந்த எந்திரங்கள்
பார்த்துக்கொள்ளும்.
கடற்கோள்
பேய் மழை.
பெரும் நெருப்பு
இவையா உங்களை காணாமல்
ஆக்கி விடும்
என்று நம்புகிறீர்கள்?
லாபம் என்று பார்க்க
ஆரம்பித்தால்
இந்த கோடி கோடி
மக்களை வைத்து
வியாபாரம் பண்ணுவோம்
என்ற
ஒரு வெறித்தீ கூட‌
மௌனமாய் மூண்டு
கொண்டிருக்கிறது.
இது ஆலிவுட் சை ஃபை படம்
அல்ல.
திரையே இல்லாமல் ஓடும்
ஒரு அபாய அறிகுறியின்
படம் இது.
இது வெறும்
ஹாலோக்ராஃபிக் கற்பனை அல்ல.
இன்றைய நடப்புகளின்
கூர்முனை இது.
மக்களின் விழிப்புணர்வு ஒன்றே
நமக்கு பாதுகாப்பு.
________________________________________________
சொற்கீரன்

திங்கள், 14 அக்டோபர், 2024

பொற்கிழி பெறும் கவி இமயம் ஈரோடு தமிழன்பன்

 


பொற்கிழி பெறும் கவி இமயம் ஈரோடு தமிழன்பன்

அவர்களுக்கு

ஒரு பாராட்டு மடல்

_______________________________________


அந்த இமய வரம்பன் போல்

என் மீது ஏறி

நீயும் தமிழ்க்கொடி 

பொறிக்க வந்திட வேண்டாம் 

கவிஞனே.

இதோ நானே

உன் தமிழ் ஒளி பெற்றிட‌

இறங்கி வருகின்றேன்

கவி இமயமே!

உன் உயர்ச்சியால்

இந்த கூழாங்கற்களும் 

வைரம் ஆகின.

தினம் ஒரு கவிதை.

பூங்காலை இமை திறக்கு முன்னே

உன் பேனா மூடி திறக்கிறது.

அப்புறம் என்ன?

சொற்களின் வெள்ளம் தான்.

தமிழுக்கு நீ தந்த அரியணை

மில்லியன் மில்லியன் 

ஒளியாண்டுகளின் "உயரத்தில்".

சூரியன் கிழக்கில் நிற்கும்போது

நீ மேற்கில் நிற்கிறாய்

அவனோடு

தமிழ்ப்பூப்பந்து விளையாடும்

ஒரு ஒளி படைத்த கண்ணினாக!

உன் புத்தகங்கள்

ஏணிகள் ஆயின‌

இந்த தமிழ்ச்சிகரங்களுக்கு எல்லாம்.

குதிரைகள் நுரைதள்ளி

கொஞ்சம் அயரலாம்.

உன் எழுத்துக்கள்

அந்த ஜேம்ஸ் வெப் 

தொலைநோக்கியோடேயே

சென்று

அண்டம் அளந்து நம்

தமிழுக்கு அளபடை சொல்கிறது.

அதன் இன்னிசை அளபடை கேட்டு

நாங்கள் பூரித்துப்போகிறோம்.

பொற்கிழி பெறும் தமிழின்

பொற்குவையே!

உன்னை அளந்து குவிக்க‌

அளவைகள் போதாது.

அதனால்

அந்த அகன்ற வானத்தை

இன்று ஒரு நாள் வாடகைக்கு

எடுத்திருக்கிறோம்.

அது கேட்ட விலை

உன் கவிதை மட்டுமே!

நீ நீ நீ நீ ...

ஆம் நாங்களும் தான்

உன் தமிழ்ப்புகழ் ஒளியில்

நீடு நீடு வாழ்வோம்.

வாழ்க நம் தமிழ் ஒளியெனும்

உலகச்செம்மொழி!


_________________________________________________

பணிவ‌ன்புடன் வணங்கும்

சொற்கீரன் 

எனும் இ பரமசிவன்.

கற்பக நகர்

மதுரை...625007.




ஞாயிறு, 13 அக்டோபர், 2024

என் அன்பான வாழ்த்து மடல்.

 

எண்பத்தி ஒன்றாவது வயது நிறைந்த

என் நண்பன் சிவசுப்பிரமணியனுக்கு

என் அன்பான வாழ்த்து மடல்.

________________________________________________


எங்கிருந்தோ

மூலைக்கரைப்பட்டியிலிருந்து

வந்ததாய்த் தான் 

அந்த மாணவர்கள் 

எண்ணினார்கள்.

ஆனால் கல்லூரிப்பேராசிரியர்

சொந்த ஊர் எதுவெனக்

கேட்டபோது

"திக்கெல்லாம் புகழும்

திருநெல்வேலிச் சீமை"

என்று 

முழங்கினாயே!

அன்று முதல் 

உனது அந்த 

முழக்கம் ஓயவில்லை

ஒடுங்கவில்லை.

பாட்டாளி வர்க்க சமுத்திரத்தின்

பேரலையாய்

முழங்கிக்கொண்டிருக்கிறாய்.

நூறாண்டுகள் எல்லாம் ஒரு பொருட்டா?

உன் யுகம் 

இந்த மைல்கற்களையெல்லாம்

உள்வாங்கிக்கொண்ட

பெரு வரலாறாய்

முன்னேறும் முன்னேறும்!

கல்லூரிக்காலம் எனக்கு

அறிவின் ஊற்று சுரக்கும்

பசுஞ்சோலையாக‌

இருந்ததன் இன்னொரு 

தேனூற்று

இனிய நண்பா

அது நீயே தான்.

வாழ்க என் நண்பா!

நீ நீடூழி நீடூழி வாழ்கவே!


____________________________________

அன்புடன்

செங்கீரன் எனும்

இ பரமசிவன்.


சனி, 12 அக்டோபர், 2024

வெற்றிகள் மனிதனுக்கே!

 

யாதானும் 

நாடாமால் ஊராமால் என்னொருவன்...?

வள்ளுவர் அப்படியே நிறுத்திக்கொண்டார்.

மனிதா!

சாந்துணையும்

என்று அவசரப்பட்டுவிட்டேன்.

சாவு எனும் முரட்டுக்குதிரையையும்

உன் ஆராய்ச்சிகள் மூலம்

டி ஏஜிங் அல்லது டி டையிங்

என்று என்னவெல்லாமோ

சாதிக்கத் துணிந்து விட்டாயே.

தளராதே..மனிதா முன்னேறு.

வள்ளுவர் புன்னகை புரிகிறார்.

கேள்வி எனும் விழுச்செல்வன் உன் 

கையில் உண்டு.

ஏன் எப்படி எதற்கு...

விடாதே கேள்விகளை.

கல்வி கேள்வி அறிவு 

நுண்மாண் நுழைபுலம் திறவோர் காட்சி..

இவற்றிற்கு

தேசியக்கொடிகள் இல்லை

தேசப்பட எல்லைகள் இல்லை.

மொழியில்லை

இனமில்லை.

மனிதம் எனும் புள்ளி

வெளிச்சம் தேடி தேடி

அண்டத்தின் விரிவு போல்

வட்டங்களை அகலமாக்கிக்

கொண்டே இருக்கும்.

அறிவு நூல்கள் தான் மனிதனின்

மனித உரு தாங்கிய சுவடுகள்.

அவன் சிந்தனை

இடறும்போதெல்லாம்

கடவுள் அங்கே நிற்கிறார்.

ஏன் என்னை தடுக்கிறாய்?

மனிதன் கேட்கிறான்.

நானும் அதையே தான் கேட்கிறேன்.

கடவுள் கேட்கிறார்.

இவர்களோடு நான்

பலூன் ஊதி ஊதி விளையாடுவது

உனக்கு ஏன் பிடிக்கவில்லை?

ஆம்.

திடீரென்று வெடித்து 

நீ ஒன்றுமில்லை என அறியும் போது

மறுபடியும் அவன்

பூஜ்யத்திலிருந்தா தொடங்கவேண்டும்?

தொடங்கட்டுமே..

இது ஒரு விளையாட்டு தானே.

சிவ லீலா 

கிருஷ்ண லீலா

என்று கொண்டாடிவிட்டுப்போகிறான்.

உன்னக்கென்ன வந்தது?

"சிந்தனை" எனும் பிசாசே

குறுக்கே வராதே போ!

சிந்தனை பொருட்படுத்தவில்லை.

அறிவு அயர வில்லை.

அதன் விஸ்வரூபம் தான் 

உண்மையில் விஸ்வரூபம்.

கடவுள் காட்டிய பூச்சாண்டிகள் எல்லாம்

ஒன்றுமே இல்லை.

மனிதனின் விஞ்ஞானம் 

எல்லையே இல்லை எனும் 

விளிம்பற்ற நிலையைக்கூட‌

வியக்கவைக்கும் கணித சூத்திரங்களால்

தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது.

கடவுள்

மனிதனின் ரோபோட்டுகளாக‌

மாறி வெகு காலமாகி விட்டது.

"கலி முத்திடுத்து"

எனும் ஒரே மந்திரம் தான்

அது உச்சரித்துக்கொண்டிருக்கிறது.

பிழைத்துப்போகிறது கடவுள்.

விட்டு விடுங்கள்.

கூர்மை மழுங்காத‌

சிந்தனைக்கதிர் அலைகளே

தொடருங்கள்.

மனிதம் உங்களோடு பயணிக்கும்.

வெற்றிகள் மனிதனுக்கே!


____________________________________________

சொற்கீரன்


வெள்ளி, 11 அக்டோபர், 2024

ஒரு துயரமான நகைச்சுவை.

 

ஒரு துயரமான நகைச்சுவை.

____________________________________________


அடிமைப்படுத்துபவர்களை விட‌

அடிமைப்படுபவர்களே

ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு

ஒரு பெரிய "கில்லட்டின்".

கசாப்பு கத்தியைக்கூட‌

ருசியான தழை என்று

நாக்கை நீட்டும் வெள்ளாடுகள்

மலிந்த தேசத்தில்

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்

சரி

இதே மேளம் தான்.

இதே ஆட்டம் தான்.

கொண்டாட்டம் தான்.

பட்டாசுகள் தான்.

ஜிலேபிகள் தான்.

பெரிய வாணலியில் கிண்டுகின்ற‌

அல்வாவே

நம் வரவு செலவு சாசனம் என்று

புளகாங்கிதம் கொள்ளும்

அறிவு ஜீவிகளும்

அறிவில்லாத ஜீவிகளும்

மத்தாப்பு 

கொளுத்திக்கொண்டிருக்கிற‌

தேசத்தில்

சர்வாதிகாரி என்று

எவரும் இல்லை.

சிந்தனை சூன்யம்

அல்லது

சூன்ய சிந்தனை

என்று எப்படி 

வைத்துக்கொண்டாலும் 

இதுவே

சர்வாதிகாரத்தின் வற்றாத ஊற்று.

கணிப்பொறி கிளிக்குகள்

எல்லாம் 

டாய் ஸ்டோரிகள் தான்.

வாக்குகள் 

என்பதற்கும் ஒரு 

கூர்மையான ஓர்மை உண்டு.

அது இல்லாத‌

வாக்குச்சீட்டுகளும்

வெறும் காகிதக்குப்பைகளே.

இவிஎம் ஆனாலும் சரி.

சீட்டுமுறை ஆனாலும் சரி

முதலில் சொன்ன வரிகளே

இந்தியா எனும் 

இருண்ட கண்டத்தின்

வறண்ட வரிகள்!


"அடிமைப்படுத்துபவர்களை விட‌

அடிமைப்படுபவர்களே

ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு

ஒரு பெரிய "கில்லட்டின்"..."


அறிவின்மையும் 

அறிவுடைமையும்

ஒன்றுக்கொன்ன்று

முகம் பார்த்துக்கொள்ளும்

கண்ணாடிகளே

என்பது தான்

ஒரு துயரமான நகைச்சுவை.


________________________________________________

சொற்கீரன்













கனவுக்குள் ஒரு கனவு

 


கனவுக்குள் ஒரு கனவு

________________________________________

சொற்கீரன்.


படு

என்று கண்களை அழுத்தியது.

கண்களை திறக்க முடியவில்லை.

இடுக்கு வழியாக பார்த்தால்

பிம்பங்கள் இழை பிரியாமல்

மசமசத்துக்கிடந்தன.

ஆழ்துயில் கடலில் 

அமிழ்ந்து விட்டேன்.

அப்புறம்

திரைப்படம் ஓடியது.

திரைப்படமா?

யார் எடுத்தார்கள் அந்த‌

படத்தை?

எவனோ எடுத்தான்.

எதற்கோ இங்கு காட்டுகிறான்.

அது தான் சொல்லிவிட்டார்களே

தூணிலும் இருப்பான்

துரும்பிலும் இருப்பான் என்று.

சரி தான்.

நரசிம்மம் வாயைப்பிளக்கிறது.

குடல் நீள நீள 

ரத்தம் வழிய வழிய‌

கோபத்தின் ரங்கோலியெல்லாம்

குரூரச்சித்திரங்கள்.

ஆனால் எப்படி

இவர் இங்கே வந்தார்?

வெண்தாடியும் கைத்தடியுமாய்..

பின்னாலேயே

விஷ்ணுவும்....

"பின்ன என்ன தான் 

செய்யச்சொல்றீங்க

எத்தனை அவதாரம் எடுத்து

சூசகமாக சொன்னாலும்

உங்களுக்கு

அறிவு வேலை செய்ய மாட்டேங்குது.

கடவுள்..பிரம்மம் 

அது இதுண்ணு

இந்த ஏழை பக்தர்களை

பாடா படுத்துறீங்க.

அதெல்லாம் ஒண்ணுமே இல்லடா

முண்டங்களா

(கடவுளே இப்படி திட்டுறார்னு

நெனைக்காதீங்க...)

இல்லவே இல்லைன்னா

இல்லவே இல்லை தான்.

அதத்தான் இவர் ஆணித்தரமா

சொல்றார்ல..

ஸ்லோகம் சொன்னாத்தான் ரிஷியா?

இவர் பகுத்தறிவுச் செல்வம்டா

ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி இவரே தான்.

இப்ப நான் சொல்றேண்டா

இல்லவே இல்லைடா

அது உங்க பயப்பிரம்மம்டா..

கேக்கபோறீங்களா இல்லையா....

கடவுள் கர்ஜித்தார்

நரசிம்மமாய்...

...........


"ஆமாம்...என்ன இது?"

தாயார் தொட்டு எழுப்பினார்.

பாற்கடல் உறக்கத்திலுமா கனவு?

பெருமாள் முறுவலித்தார்.

........

"போதும் தூங்கினது.

இன்னும் கெளம்பலையா?

நாழியாச்சே...

அந்தக்கோயிலுலே இன்னிக்குத் தானே

உங்கள் சத்பிரசங்கம்.."

என்னத்தச்சொல்றது

பகவான் தூக்கமே இன்னும்

கலையலே"

பௌராணிகரும்

முறுவலித்தார்.


__________________________________________________________



வியாழன், 10 அக்டோபர், 2024

விண்ணிலே ஒரு அரிய காட்சி


விண்ணிலே ஒரு அரிய காட்சி



 Comet with 28-lakh-kilometre-long tail photobombs stunning solar eruption (msn.com)

9428115495%7Ctwgr%5E46ef0077a9c2fcf4d47a190e03a796aaa3c01c46%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fscience%2Fstory%2Fcomet-with-28-lakh-kilometre-long-tail-photobombs-stunning-solar-eruption-2614524-2024-10-10

வேட்டையன்

 

வேட்டையன்

_________________________________


புதர்களுக்குள்ளிருந்து

வந்து விட்டான்.

இங்கே

எந்த மிருகத்தை

சுட்டு வீழ்த்துவான்

என்பது தெரிந்ததே.

சம்பவாமி யுகே யுகே என்று

வந்து விஷ்ணு சக்கரத்தை

காட்டிவிட்டு போய்விடுவான்.

சம்ப‌வமும் அதே.

யுகமும் அதே.

அதே தூசி படிந்த

அட்டைத்தெய்வக்களின்

அம்புலிமாம வதங்கள்.

இதுக்கு

கணினிகளின்

அல்காரிதங்கள்

அலங்காரத்தோரணக்கள்

தொங்க விட‌

அப்புறம்

வசூல் புள்ளிவிவரங்கள்.

அன்பான மக்களே

இந்த அடிப்படையான புள்ளிவிவரங்கள்

உங்களுக்குத் தெரியுமா?

கோடிக்கணக்கான மக்கள் வாழும் தேசத்தில்

ஒன்றிரண்டு சதவீத மக்களிடமே

தொண்ணூற்றெட்டு சதவீத செல்வங்கள்

குவித்து வைத்துக்கொள்ள‌ப்பட முடியும்

என்று.

காமிராவிலிருந்து வரும்

இந்த சோப்புக்குமிழிகளால்

சோற்றுக்கவலைகள்

தீரவே போவதில்லை.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

சொற்கீரன்




பட்டாசுகளும் ஜிலேபிகளும்.

 


பட்டாசுகளும் ஜிலேபிகளும்.

____________________________________


மேலை நாட்டிலே

எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக் இஞ்சினீயரிங்

ராக்கெட் இஞ்சினீயரிங்

ஜெனடிக் எஞ்சினீயரிங்

என்று கொடி கட்டி பறக்கிறார்கள்.

நம் நாட்டில்

கொடி கட்டி பறக்கும்

இந்த‌

"சோசியல் இஞ்சினீயரிங்" என்பது தான்

என்ன?

உண்மையில் இதற்கே

நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

இங்கே

ஜனநாயகம் என்பது

அறிவு பூர்வமானது அல்ல.

உணர்ச்சிப்பிரவாகம் மட்டுமே.

அதுவும்

ஆயிரம் ஆயிரம் வாய்க்கால்களில்

சாதிகள் எனும் சாக்கடையாய்

தேங்கியே கிடக்கும்.

தேர்தல் காலங்களில் மட்டும்

சில குள்ளநரிகளும் ஓநாய்களும்

மக்களின் 

இந்த துக்கடா உணர்ச்சிகளை

பொறித்து எடுத்து

பக்குவமாய் தீனி காட்டும்.

சாணக்கிய தந்திரம் என்று

அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு

தர்மத்தை

எப்போதுமே

சூது

கவ்விக்கொண்டிருக்கும்.

ஓட்டுப்பெட்டிகள் நிரம்பி வழியும்.

இது மூச்சு முட்டும் அளவுக்கு

அதில் அடைத்துக்கொண்டு விடுவதால்

ஜனநாயகம் எப்போதோ

மூச்சை விட்டிருக்கும்.

அது போதும்

இஷ்டப்படி நாற்காலிகளை

இழுத்துப்போட்டுக்கொண்டு

அமர்ந்து கொள்ள.

அந்த முகம் தெரியாத மாயாவிப்பூதத்தை

தன் ஏவல்களுக்கு

அடிமைப்படுத்தும் கலையே

சோசியல் இஞ்சினீயரிங்.

காலண்டர்களில்

ஆகஸ்டுகள் வந்தன‌

ஆகஸ்டுகள் போயின‌

ஆனால் 

சுதந்திரம் மட்டும்

இமை விரிக்கவே இல்லை.

இதில்

140 கோடி என்ன?

200 கோடி என்ன?

சிதறிக்கிடகின்ற நெல்லிக்காய்கள் 

ஒரு பக்கம்.

சேர்க்கத்துடிக்கும்

ஜனநாயக உந்து விசை

ஒரு பக்கம்.

இதுவே நம் விடியல்களின்

இருட்டு "அனாடமி"


____________________________________________

சொற்கீரன்



புதன், 9 அக்டோபர், 2024

தேர்தல் எங்கே நடந்தால் என்ன?


 

தேர்தல் எங்கே நடந்தால் என்ன?
தேர்தல் தேர்தல் தான்.
மக்கள் மக்கள் தான்.
ஆலிவர் கோல்ட்ஸ்மித்
எழுதினான்.
அது ஒரு கட்டுரையாக‌
எஸ் எஸ் எல் சி
ஆங்கிலப் பாடப்புத்தகத்தில்
இருந்தது
"அன் எலக்ஷன் இஸ் டிஸ்க்ரைப்டு" என்று.
எங்கும்
எப்போதும்
அதன் குறுக்குவெட்டுத்தோற்றம்
ஒன்றே தான்.
ஏதாவது கொடுக்க வேண்டும்.
அந்த கட்சி ஜெயித்து விடலாம்.
ஆனால்
மக்கள் எப்போதும்
தோற்றுக்கொண்டே இருப்பார்கள்.
அது அவர்களுக்கு
ஒரு பொருட்டே இல்லை.
நமக்கு கடவுள் இருக்கிறார்.
கோவில் இருக்கிறது
விழா இருக்கிறது
மதம் இருக்கிறது.
பசிக்கு சோறு கிடைத்தவுடன்
அப்புறமும்
இப்படித்தான்
பசி வறுமை பிணி
என்ற சக்கரத்தைச்
சுற்றிக்கொண்டே
இருக்க வேண்டும்
பகவான் சக்கரமும்
இந்த கேள்வியை மட்டுமே
சுற்றிக்கொண்டிருக்கும்.
தீர்வு எனும்
சிந்தனை பற்றி
சிந்திக்கவே முடியாது.
இடைத்தேர்தல் நமக்கு
விடை தெரியா
இடைவெளியா?
தலைகள் "எண்ண"வேண்டும்.
தலைகளை எண்ணவா ஜனநாயகம்?
பாதி வரை
மயிலிறகு தான்.
பாதிக்கு மேல் ஒன்று
வந்தாலே போதும்.
பட்டாக்கத்தி ஆகி விடும்.
சாதாரண மக்கள்
சதா ரணமாகும்
அவலங்களில் தான்.
சொற்போருக்கு பஞசமில்லை.
சோற்றுக்குத் தான் பஞ்சம்.
"தேர்தல் எங்கே நடந்தால் என்ன?
தேர்தல் தேர்தல் தான். மக்கள் மக்கள் தான். ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதினான். அது ஒரு கட்டுரையாக‌ எஸ் எஸ் எல் சி ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இருந்தது "அன் எலக்ஷன் இஸ் டிஸ்க்ரைப்டு" என்று. எங்கும் எப்போதும் அதன் குறுக்குவெட்டுத்தோற்றம் ஒன்றே தான். ஏதாவது கொடுக்க வேண்டும். அந்த கட்சி ஜெயித்து விடலாம். ஆனால் மக்கள் எப்போதும் தோற்றுக்கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. நமக்கு கடவுள் இருக்கிறார். கோவில் இருக்கிறது விழா இருக்கிறது மதம் இருக்கிறது. பசிக்கு சோறு கிடைத்தவுடன் அப்புறமும் இப்படித்தான் பசி வறுமை பிணி என்ற சக்கரத்தைச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் பகவான் சக்கரமும் இந்த கேள்வியை மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும். தீர்வு எனும் சிந்தனை பற்றி சிந்திக்கவே முடியாது. இடைத்தேர்தல் நமக்கு விடை தெரியா இடைவெளியா? தலைகள் "எண்ண"வேண்டும். தலைகளை எண்ணவா ஜனநாயகம்? பாதி வரை மயிலிறகு தான். பாதிக்கு மேல் ஒன்று வந்தாலே போதும். பட்டாக்கத்தி ஆகி விடும். சாதாரண மக்கள் சதா ரணமாகும் அவலங்களில் தான். சொற்போருக்கு பஞசமில்லை. சோற்றுக்குத் தான் பஞ்சம். "எல்லாருக்கும் எல்லாமும்" எப்போது கிடைக்கும்? ஏ ஐ களைக்கொண்டு குவித்தாலும் "பங்கு"சந்தையே இங்கு சங்கு சக்கரம். தரித்திரத்தின் சரித்திரத்தில் பொற்காலம் என்பது கண்ணீர் மழையில் தான். குருதிகள் கொட்டி எழுதிய‌ குருட்சேத்திரம் என்றாலும் சூழ்ச்சியே சூழ்ந்து நிற்கும். ____________________________________________________ சொற்கீரன்

 

ய சாங் புக்!

 

ய சாங் புக்

_______________________________


ஆங்கில இசையின் 

இதயமே இந்த "சாங்க்" தான்.

அப்போ இது "பொயட்ரி" இல்லையா

என்ற கேட்பதில் 

எந்த அர்த்தமும் இல்லை.

ஆம்

அர்த்தங்கள் இல்லாதவற்றில்

அர்த்தங்களை தேடி

அல்லது

அர்த்தங்களில்

அர்த்தம் இல்லாத நிழல்களைத்

தேடி

துடிக்கும் இதயங்களின்

இசையே

"ஆல்பம்"ஆகிறது.

நள்ளிரவு வானத்தை

லேசர்களால் 

சுவையான கொத்து பரோட்டா

வெளிச்சங்கள் ஆக்கி

தோல் கருவிகளும்

நரம்புக்கருவிகளும்

மின்காந்தப் பேராற்றில் 

அழகிய அழகிய அலைகளாய்

நம் மனக்கரையை

வருடிக்கொடுக்கும்.

மனிதனின் ஏக்கங்களுக்குள்

இத்தனை மில்லியன் மெகாவாட்டுகளா?

புல்லரித்துப்போனதில்

ஜேம்ஸ்வெப் காலக்ஸி சித்திரங்கள்

எத்தனை? எத்தனை?

இசையின் அர்த்தமே இந்த‌

ஆல்பங்களில் தான்

அகராதிகளாய் இழைந்து

கிடக்கின்றன!

________________________________________

சொற்கீரன்