சனி, 20 ஏப்ரல், 2019

மண்புழுவே ! மண்புழுவே!


மண்புழுவே ! மண்புழுவே!
==================================================ருத்ரா

இரண்டாவது சுதந்திரப்போராட்டம் இது.
வெளியே இருந்து நம்மைத்தாக்கும்
வெள்ளைப்பூதங்கள் ஏதும் இல்லை.
காலனி ஆதிக்கம் என்றொரு பெயரில்
கடல் கடந்து வந்து நம்மை
கப்பம் கட்டச்சொல்லும் செங்கோல்
ஏதும் இங்கு நீளவில்லை.

நம்மிடம் ஆழ வேரூன்றி
நமக்கே நச்சுப் பெருமரமாய்
நிழல்கள் தந்தது போல் காட்டி
நம்மை அரித்து தின்னுகின்ற‌
கரையான்களை நாம் அறியவில்லை.
சாதி மதம் சனாதனம் என‌
சாஸ்திரங்கள் ஆக்கிவிட்டார்.
நம்மை அடியில் அமிழ்த்திவிட‌
ஆயிரம் சடங்குகள் இயற்றிவைத்தார்.

அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது தெரிந்து கொள்வாய் என
ஆன்ற தமிழர் சொன்னது எல்லாம்
மறைத்துக்காட்டி "மறைகள்" செய்தார்.
பிறவி பாவம்.ஐம்பொறி பாவம் என‌
மாபெரும் மனித வாழ்க்கையை எல்லாம்
பாவம் பாவம் என்றே ஓதினார்.
இந்த மண்ணை அறிதல் பாவம்.
இந்த விண்ணை அளத்தல் பாவம்.
மனதும் பாவம்.சிந்தனை பாவம்.
அதுவும் பாவம் இதுவும் பாவம்
எதுவும் எங்கணும் பாவம் தான்.
"மண் புழுக்களே! மண்புழுக்களே!
மண்ணும் கூட உன் சொந்தமில்லை.
விண்ணும் கூட உனக்கில்லை.
வானமே உனக்கு இல்லையெனில்
"விடியல் ஏது? வெளிச்சமும் எது?
இருட்டே உன் கூடு.
உனக்கு
எங்கள் மந்திர இரைச்சல்
மட்டுமே கேட்கும்.
சமஸ்கிருதம் என்று உன்னால்
உச்சரிக்க கூட  முடியாது.
அதுவே உன் தெய்வம்.
அதுவே உன் மோட்சம்.
"தமிழ் கிமிழ் என்றெல்லாம்
உளறும் உன் ஆபாசம்
உன் மோட்சம் தடுக்கும்
பாவம் தான்
அறிவாய் அறிவாய் மண்புழுவே!

 பாவம் தீர மந்திரம் உண்டு.
பிராமணர் அவர் தான் பாவமே அற்றவர்.
அவரிடம் மந்திரஒலிகள் கேட்டு
மடங்கிக்கிடப்பாய்..சுருண்டுகிடப்பாய்.
பூமியில் நீ வெறும் மண்புழு தான்.
உழந்து உழந்து நீ உருவாக்கும்
செல்வம் எல்லாம் அவர் காலடியில்...அந்த‌
"காலடி" மந்திரம் அறிந்திட வேண்டும்.
பன்றியும் பகவானும் ஒன்றே தான்.
அதனால்
நீ பன்றியாகவே இருந்திடுவாய்.
பகவான் அந்த பிராமணரே உனக்கு
மோட்சம் எல்லாம் போதிப்பார்.

உலகம் எல்லாம் மனித உயிரின்
வேரற்று கிளையற்று விதையற்று
வீழ்வது தான் மோட்சமா?
மனிதன் இன்றி சிந்தனை இல்லை.
சிந்தனை இன்றி பிரம்மமும் இல்லை.

மனிதர்களே இப்போதாவது நம்புங்கள்
கடவுள்   இல்லை என்று
கடவுளே சொல்கின்றார்!
கேளுங்கள்.
"கடவுள் என்று
நீ சங்கல்பம் கொண்டிருந்தால்
கடவுள் வெறும் சங்கல்பம் தானா?
என்று
மீண்டும் ஒரு எதிர் சங்கல்பம் கொள்கிறாய்.
இது விகல்பம.
சரி ..அறிவு தோன்றும் முன் அது அறிவா?
இல்லை அது அறிவின்மையா?
அது போல் தான்
சிந்தனையின் அசைவுகள்
தொடர்கின்றன.
கடவுளுக்கு முன் அது
கடவுளா? கடவுளின்மையா?
சங்கல்பங்களின் சங்கல்பங்கள்
நீங்குவதே
அதாவது நிர்விகல்பமே
மோட்சம் ஆகும்.
இந்த "நிர்விகல்ப சமாதி"எனும்
சவப்பெட்டிக்குள்
என்னை அடைத்து ஆணி அடிப்பதே
மோட்சம் என்று நீ
இப்போதாவது அறிந்து கொண்டாயா?"

கடவுளே பேசும் நாத்திகம் இது.
அறிவின் வெளிச்சத்திற்கு
முற்றும் என்று எழுதி
மூடி ஊற்றுவது "வேதாந்தம்" அல்ல.
வேதம் எனும் அறிவுக்கு
அந்தம் எனும் "முடிவு"
இல்லவே இல்லை.

=================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக