புதன், 3 ஏப்ரல், 2019

நெல்லிக்காய் மூட்டையல்ல நாங்கள்





நெல்லிக்காய் மூட்டையல்ல நாங்கள்
======================================================ருத்ரா

அவிழ்த்து விட்டால் போதும்
இவர்களுக்கு.
வரிசையில் நிற்கும் வியாதியும்
தூங்கிக்கொண்டே நடக்கும் வியாதியும்
அப்படியே தூங்கிக்கொண்டே
கணிப்பொறியில் பட்டன் தட்டும் வியாதியும்
இருக்கிறது
என்று தானே
இத்தனை காலமாக‌
நீங்கள் நாற்காலிகளைப்பிடித்துக்கொண்டு
இவர்களை
இந்த தூசிகளில் புரளவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

இவர்கள் விழித்துக்கொண்டார்கள்.
அக்ரிக் எமல்ஷன் பெயிண்டில்
இந்த மண்ணாங்கட்டிகளுக்கு
நான்கு வர்ணம் பூசி
நாடகம் நடத்தும் உங்கள்
சாதி மத தந்திரங்கள்
ஒரு முடிவுக்கு வந்துவிடும் நாள்
இந்த ஓட்டுத்திருவிழா தான்.

இதோ அந்த குரல்களின் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.

"எங்களை
இலவசங்களால் எப்படிக்குளிப்பாட்டினாலும்
எங்கள் ஓட்டு ஒவ்வொன்றும்
எங்களுக்குள் ஒட்டிக்கிடக்கும்
மன அழுக்குகளை
கழுவி விடப்போகும் நாள்
இதோ வந்து விட்டது.

சுதந்திரம் ஜனநாயகம்
என்பவற்றின் கனபரிமாணங்கள் எல்லாம்
இந்த கரன்சிகள் தான் என்று
போக்கு காட்டும் உங்கள்
சூழ்ச்சிகள் எல்லாம்
தவிடு பொடியாகி
ஒரு புதிய பாடம் உங்களுக்கு
புகட்டப்போகும் நாள் இதோ
வெகு அருகில்.

உணவு கேட்டால்
கடவுளைக்காட்டுகிறீர்கள்.
வேலை இல்லையே என்றால்
பக்கடாப்பொட்டலங்கள் போடுங்கள்
என்கிறீர்கள்.
வங்கிகள் எனும் நிதியின் வாய்க்கால்கள்
சில தனியார் அமைப்புகளின்
நீச்சல் குளங்கள் ஆகிப்போனதால்
மக்களின் தாகம் தீரவில்லை.
பணமூட்டைகளே மேலும் மேலும்
கோட்டைகள் கட்ட அனுமதிக்கும்
உங்கள் பொருளாதார புத்தகங்களையெல்லாம்
இனி எங்கள்
போகிப்பண்டிகையின் தீ நாக்குகளுக்கு
இரையாகக்கொடுப்போம்.
அதைத் தான்
எங்கள் ஓட்டுகள் இனி
உங்களுக்கு எழுதிக்காட்டப்போகின்றன.

தை மாதமா?
சித்திரை மாதமா?
எந்த மாதத்தில்
எங்கள் தமிழ்ப்புத்தாண்டு
என்ற கேள்வி வலைகளில் சிக்குண்டு
இனி மயங்கபோவதில்லை
ஒரு நாளும்.
தமிழின் விடியல்
எங்கள் மொழியில் பூக்கும்.
தமிழ் மொழியே
எங்கள் பார்வைக்கு இனி பாதைகள் போடும்.
"எட்டுத்தொகை"த் தமிழர்கள் நாங்கள்.
"துட்டுத்தொகை" அடிக்கும் உங்கள்
எட்டுவழிச்சாலை என்பது
பயங்கரமாய்
பசுமைக்கிராமங்களையெல்லாம்
விழுங்கிக்கொண்டு ஓடுகின்ற
அசுரத்தனமான மலைப்பாம்பு அல்லவா?
நாட்டின் வறுமையை தீர்க்கும் இது
என்று
லாபம் சுரக்கும் கம்பெனிகளுக்கு
"சாலப்பரிந்து பாலூட்டும்"
உங்கள் "பரம பத " விளையாட்டைப்
புரிந்து கொண்டோம்.
அவர்களுக்கு எப்போதுமே ஏணிகள்.
எங்களுக்கு எப்போதுமே
அந்த நச்சுப்பாம்புகள் தான்.
தந்திரமாய் "சோழிகள்" குலுக்கும்
உங்கள் சகுனிகளின் வேடங்களை
கலைக்கப்போகும்
ஓட்டு இது!"


ஒதுங்கி ஓடுங்கள் வேடதாரிகளே!
இதுவும் கூட ஒருவகையில்
உங்களால்
பெயரிடப்பட முடியாத புயல்.
விவசாயிகள் எனும்
மண்புழுக்கள்
சீற்றம் கொள்ளும் "டிராகன்களாய் "
பரிணாமம் அடைந்துவிட்ட
ஒரு வரலாற்றின் புயல்.
இதோ
எங்கள் ஓட்டுகளே
அது கருக்கொள்ளும் இடம்!

==================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக