வியாழன், 11 ஏப்ரல், 2019

ரஜனியின் "தர்பார்"

ரஜனியின் "தர்பார்"

=======================================ருத்ரா



ரஜனியின் இந்தப்படத்திற்கு

"தர்பார்" என்று

பெயர் வைத்திருப்பதை விட

"காவல் காரன்"அல்லது "காவலன்" என்று

பெயர் வைத்திருக்கலாம்.

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு

எம்.ஜி.ஆர் என்று

பெயர் வைத்த கையோடு

ரூம் போடாமலேயே

அந்த விமான இருக்கைகளிலிருந்தே

யோசித்திருப்பார் போலிருக்கிறது

நமது "மோடிஜி".

பிறகு டெல்லி போனவுடன்

எம் ஜி ஆர் படங்களையெல்லாம்

ஒரு ஓட்டு ஓட்டச்சொல்லி

ஓட்டுக்கு அதில் ஏதாவது கிடைக்குமா

என்று

பார்த்திருப்பார் போலும்.



"அட ங்கொப்புராண சாத்தியமா

நான் காவல்காரன்..."

என்ற பாட்டு பிடித்துப்போய்

இப்போது "சவுக்கிதார்" என்று

இந்தியாவின் மூலை முடுக்கிலெல்லாம்

அந்த எம் ஜி ஆர் பாட்டுக்கு

டான்ஸ் ஆடாத குறை தான்.

ரஜனி அவர்களே

பார்த்தீர்களா

உங்கள் மானசீகத்தலைவரின்

நிழல் விசுவரூபத்தை!

எம் ஜி ஆர் அவர்கள்

படத்தில்

தன் மனைவியின் மணி வயிற்றிலிருந்து

"குவா குவா" சத்தம் கேட்கவேண்டும் என்று

கண்ணும் கருத்துமாய்

காவல் காத்தார்.

இவரோ "கார்ப்பரேட்டுகளின்"

அசுர குஞ்சுகளை இடும்

அந்த மூலதன முட்டைகளை அல்லவா

அடைகாத்துக்கொண்டிருக்கிறார்.

நீங்களும்

அவரைப்போல

ஒரு "லாட்டி சுழற்றும்" கான்ஸ்டபிளாகத்தான்

களம் இறங்கப்போகிறீர்கள் போலிருக்கிறது.

இருப்பினும்

சினிமாவின் கச்சாபிலிம் கதைக்களத்தில்

உங்கள் வில்லன்களின்

ஜிகினாக்கோட்டைகளையெல்லாம்

தவிடு பொடி ஆக்குவதில்

அந்த வீரமும் நுட்பமும் செறிந்த‌

பாத்திரத்தை அப்படியே முழுதாக‌

சிந்தாமல் சிதறாமல் ....ஆனால்

அந்த செல்லுலோஸ் அதர்மத்தை அநீதியை

அடித்து நொறுக்குவதில்

நம்பர் ஒண்ணாக இந்த உலகம் எல்லாம்

வலம் வருவீர்கள் என்பதற்கு

எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

இந்த பாரதமண்ணின் குருக்ஷேத்திரத்தில்

இன்னும்

எத்தனை நாளைக்குத்தான்

இந்த சகுனிகளின் கைப்பகடைகளாக‌

உருட்டப்படப்போகிறீர்கள் என்பதே

எங்கள் கவலை.

உங்கள் படப்பிடிப்புகளில்

அந்த காமிராக்களில்

எங்கள் மனங்களே அதிகம்

"பிடிக்கப்"படுகின்றன.

இந்தியாவின் மண்ணுக்குள் வேர்பிடித்த‌

அந்த மானிடம்

எந்த மதங்களாலும் பீடிக்கப்படும்

நோய்களிலிருந்து

விடுதலை பெறும் தாகத்தில் தான்

இங்கே தழல் வீசுகிறது.

அந்த மானிடம் வெற்றி பெற‌

உங்கள் "தர்பார்"

செங்கோல் ஏந்தட்டும்.

வாழ்த்துக்கள்!


===============================================================


.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக