புதன், 24 ஏப்ரல், 2019

கடவுளே!




கடவுளே!
======================================================ருத்ரா

கடவுளே!
என்ன கொடூரம் இது.
உன்னை வழிபடும் இடத்தில்
ஏன் இந்த கொலைவெறி?
பழிக்குப்பழியா?
எங்கோ நடந்ததற்கு
இங்கே பதிலடியா?
எச்சரிக்கை வந்தது.
அலட்சியமாக இருந்ததற்கு
மன்னித்து விடுங்கள்
என்று
அந்த அரசு அறிக்கை விடுகிறது.
அநியாய யுத்தம் செய்து
லட்சம் பேர்களை படுகொலை செய்த‌
முன்னாள் ஆட்சியாளர்
உடனே அரசை கலை என்கிறார்.
நம் இந்திய அரசாங்கம்
அங்கே அமைதிப்படுத்த‌
எல்லா உதவிகளையும்
செய்யத்தயார் என்கிறது.
உலக நாடுகளும்
உதவ ஓடோடி வருகின்றன.
மரணங்களின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறதைப்பார்த்தால்
நம் வயிறு கலங்குகிறது.
அச்சம் மிகுகின்றது.
புத்தம் சரணம் கச்சாமி
ஒலிக்கிற தேசத்தில்
பச்சைப்படுகொலைகள்
நம்மை பதற வைக்கின்றன.

கடவுளர்களே!
நீங்கள் நடத்துகின்ற‌
பட்டி மன்றத்தில்
உயிர்ப்பலிகள் தான்
தீர்ப்புகளா?
உங்கள் பக்தர்கள்
உங்களை உயரத்தில்
வைக்க‌
மனித உயிர்களைக்கொண்டு தான்
படிக்கட்டுகள்
கட்டவேண்டுமா?
சிந்தனை அற்ற‌
வெறும் கபாலங்களைக்கொண்ட‌
மிருகங்களா
இங்கே மனித உரு கொண்டன?
என் மதம் தான் இங்கே செல்லும்
என்று
வெடிகுண்டுகள் இங்கே
பிரசங்கம் செய்து கொண்டிருக்கின்றன.
மரண மழை பொழிந்து
ரத்தக்காடுகள் தான்
இங்கே செழித்துக்கொண்டிருக்கின்றன.
கடவுளர்களின்
மல்யுத்தப்போட்டியா?
இல்லை
கொல்யுத்தப்போட்டியா?
கடவுளர்களே!
உங்களை உரத்தக்குரலில் அழைக்கின்றோம்.
ஆனால்
எங்கள் குரல் உங்களுக்கு கேட்கப்போவதில்லை.
ஏனெனில்
நீங்கள் தானே
இங்கே சவக்குவியல்களாய் கிடக்கிறீர்கள்.
மதம் என்று இறக்கிறதோ
அன்று தான்
முதல் மனிதன் பிறக்கிறான்.

=======================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக