வியாழன், 4 ஏப்ரல், 2019

கமலின் "சதி" லீலாவதி

கமலின் "சதி" லீலாவதி
=========================================ருத்ரா

கமல் திரையைவிட்டு வெளியேறி
நாட்டின் தலைவர்களையெல்லாம்
சந்தித்தார்.
அப்போதே தன் நடிப்பையெல்லாம்
உதறிவிட்டு
சமூத யதார்த்தங்களையும்
அரசியல் சித்தாந்தத்தின்
அகப்புற சித்திரங்களையும்
நன்கு உள்வாங்கிய
ஒரு அறிவு ஜீவி என்றார்.
கருப்பு சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு
திராவிடம் என்பது
தமிழனின் சிந்துவெளியிலிருந்து
காற்சுவடுகளை பதிக்கிறது
என்றெல்லாம்
சொற்களை செதுக்கி செதுக்கிப்
பேசினார்.
ஆனால்
இப்போது அவர் மேடையில்
பேசுவதைப்பார்க்கும் போது
ஜிகினாவும் அரிதாரமும்
அப்படியே இருக்கிறது
என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
சட்டமன்றமும்
நாடாளுமன்றமும்
ஏதோ தியேட்டர்கள் போலவும்
அதில் தன் சினிமாப்படத்தை
வியாபாரம் பண்ணியே ஆகவேண்டும்
என்றும்
ஏரியாக்கள் எல்லாம்
விற்றுத்தீர்த்துவிட வேண்டும்
என்றும்
பரபரப்புகளையும் பதற்றங்களையும்
அள்ளி அள்ளி வீசுகிறார்.
"தோழர்கள்" அவர் பக்கம் இல்லையெனத்
தெரிந்ததும்
ஹிட்லரின் கோயபல்கதைகளை
தன் ஜோல்னாப்பையிலிருந்து
எடுத்து வீசுகிறார்.
தோழர் லீலாவதியின் கொலைவழக்கு
பற்றி எல்லாத்தோழர்களும் அறிவார்கள்.
அவர்கள் சித்தாந்தம்
அந்த ரத்தச்சுவடுகளுக்கு காரணமான‌
உட்சுவடுகளை அழிப்பதை மட்டுமே
குறிவைக்கிறது.
சுரண்டல் வாதமும் மத வெறி வாதமும்
பின்னிப்பிணைந்திருக்கும்
இந்த சமுதாயச்சிதைவுகளை
அழிக்கும் போராட்டத்தில்
அவர்களது தியாகம் யாராலும்
கொச்சைப்படுத்தப்பட முடியாதது.
அவர்களிடம்
தோழர் லீலாவதிக்காக வடிக்கும்
கமலின் நீலிக்கண்ணீர்
எப்படிப்பட்டது என்று எல்லோரும்
அறிவார்கள்.
தன் இதயநாயகன் "காந்தியடிகள்"
என்று
அந்த உலக நாயகன் ஒருமுறை
பிரகடனப்படுத்தியிருந்தாரே.
ராம் என்ற திரைப்படத்திலும்
அந்த காந்தித்தாத்தா மேக்கப்பில் வந்து
அசத்தினாரே!
அவர் இன்று அந்த‌
"கோட்சே"க்காரர்களின் கூட்டணிக்கட்சிக்கு
மறைமுகமாய் ஓட்டு சேகரிக்கும்
ஒரு நாடகத்தை அல்லவா
அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.
இப்போது நடைபெறுவதும்
அவருக்கே உரித்தான‌
"சதி"லீலாவதி" நாடகம் தான்.
மதுரையில் "தோழர்"களின் ஓட்டுக்களை
பிடுங்கி அந்த கோட்ஸே கும்பல் கூட்டணிக்கு
கொடுத்துவிடலாம் என்று
அவர் நினைக்க
தோழர்கள் ஒன்றும்
அவர்  "பிக் பாஸ்" சீடர்கள் அல்ல.
மதுரை மக்கள் அவர்  நினைப்பது போல்
ஆட்டுத்தோலில் அழகர் மீது
தண்ணீர் பீய்ச்சி அடித்து
திருவிழா கொண்டாடுபவர்கள் மட்டும் அல்ல.
அவர்கள் சீற்றத்தை
எங்கே பீய்ச்சி அடிக்கவேண்டும்
என்று "ஓட்டுகளில்"
காண்பிக்கவும் தெரிந்தவர்கள் தான்.

====================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக