வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஒரு "ஓட்டின்" அனாடமி






ஒரு "ஓட்டின்" அனாடமி
========================================ருத்ரா

இது என்ன பரிசோதனைச்சாலைத்
தவளையா?
பப்பரக்கா என்று மல்லாத்திப்போட்டு
அறுத்துப்பார்க்க?
இந்திய ஜனநாயகத்தின்
அதன் ரத்தத்தின்
துளியிலும் துளி இது.
மைக்ரோஸ்கோப்பில்
வைத்துப்பார்த்த போது
சந்திரமண்டலத்து பாலைவனம் போலவும்
செவ்வாய் கிரகத்துச் சிவந்த‌
மண்பாளங்கள் போலவும்
என்னவெல்லாமோ தெரிந்தது.
இதை வைத்து
இந்த தேசத்து புத்திரர்கள்
புராணங்கள் சொன்னார்கள்.
ஆவென்று வரிசையாக
ரம்பப்பற்களைக்காட்டிய
முதலை போன்ற ஒன்றிற்கு
பூமாலை சூட்டி
மஞ்சள் குங்குமம் வைத்து
பஜனை செய்தார்கள்.
அந்த பற்களில் கொத்து கொத்தாக‌
மனித உயிர்கள்.
இது என்ன கிராஃபிக்ஸ் போன்ற‌
குழப்ப சித்திரங்கள்?
இருக்கிற ஜன்மத்தையே
முழுதாக வாழ வாய்ப்பு தராத‌
இந்த சமூகம்
மதம் எனும் ஓட்டைவழியே
மறுஜென்மம் ஆவி பேய் பிசாசு
எனும் அறிவின்மைக்கசடுகளை
ஒழுக விட்டதில்
மானுடமே இங்கு செத்துப்போனது.
போதாது என்று
சினிமா டிவி என்னும் அலம்பல்கள்
மானுட சாரத்தை
காசு பண விளம்பரங்களின்
சாக்கடை ஆக்கி இருக்கிறது.
சட்டம் இயற்றவேண்டிய மூளைச்செதில்கள்
மூச்சடங்கிக்கிடக்கின்றன.

"போதும்..
ஆராய்ச்சியை முடி.
இந்த ஒட்டு என்பது தான் என்ன?"

மைக்ரோஸ்கோப்
அறிக்கை தயார் செய்தது.

"இது ஒரு பாக்டீரியா..
ஆனால்
தன் செல்லையே
அழித்துக்கொள்ளப்போகும்
ஒரு "வைரஸ்" இனமாக‌
மெடமோர்ஃபாசிஸ் ஆகும்
நிலைக்கு வேகமாக
வந்து கொண்டிருக்கிறது"

"சரி சரி..
ஆணையத்துக்கு அனுப்பி
வைத்துவிடு."

====================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக