புதன், 3 ஏப்ரல், 2019

ஊசிக்குருவிகள்



ஊசிக்குருவிகள்

==================================ருத்ரா இ.பரமசிவன்



செம்பரத்தம் பூக்கள்

இலைகொத்துகளிடையே

உதடுகளாய்..

சிரிப்பை இறைக்கின்றன.

மௌனத்தை பேசி சிலிர்க்கின்றன.

நெருப்பைக்கொட்டும் சூரியனோடு

மல்லுக்கு நின்று

ரத்தம் வழிய விடுகின்றன.

செடியின் சொற்ப நிழலில்

அமர்ந்தேன்.

அண்ணாந்து பார்த்ததில்

வான நீலம் ஊடுருவி

மனத்துள் இற‌ங்கி சலவை செய்தது.

பட்டாம்பூச்சி ஒன்று

சிறகுகள் ஒட்டி வெகு நேரமாய்

ஒரு பூ அடுக்கில்

மான் தோல் விரித்து

குண்டலினி ஊசியை

தனக்குள் செருகிக்கொண்டு

கழுவில் ஏறிய சித்தன் போல்

தவம் செய்தது.

பட படப்பு இல்லை!

சிறகுத்துடிப்பு இல்லை!

அதன் வெளி வர்ணங்கள்

சிரிக்காமல் சிரிக்கும்

"மோனாலிசா"வாய்

கன்னம் குழியாமல் குழித்து

இமை சிமிட்டியது.

பிக்காசோ பிய்த்துப்போட்ட‌

கோடுகளில் வட்டங்களில் கூட‌

பிரபஞ்சங்களின் சாந்தி முகூர்த்தம்.

வடிகட்டிய பிறகு பார்த்தபோது

"நான்" காணவில்லை.

ரமணர்

எங்கு வேண்டுமானாலும்

படுத்து இருப்பார் போலிருக்கிறது.

அந்த இலைக்காட்டில்

பூவுக்குள் கோவணம் தரித்துக்கொண்டு...

மனம் பாதாளக்கரண்டியாய்

சமுத்திரங்களையெல்லாம்

அள்ளி எறிகிறது.

மண்வெட்டியால்

கீழ் நோக்கி வெட்டினேன்.

"ஃப்ராய்டிஸ" பிறாண்டல்களால்

மண்ணில் வண்ண வண்ணமாய்க் கீறல்கள்.

அது எப்படி மேலே

வானவில்லில் கூரை ஆனது?

செம்பரத்தம்பூக்கள் அசைகின்றன!

ஊசிக்குருவிகள்

அந்த மகரந்தத்தூள்களில்

தூளி கட்டிக்கொள்ள‌

துடிக்கின்றன.

செம்பரத்தம்பூக்கள் அசைகின்றன!




=====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக