வியாழன், 18 ஏப்ரல், 2019

கணினிக்காடுகள்

கணினிக்காடுகள்
===================================================ருத்ரா

அந்த கணினிக்காடுகள்
நம் கனவுகளைச்சுருட்டி வைத்திருக்கும்
"ஒரு விரற்"காடுகள்.
அந்த விரல்கள் அங்கே தான்
கிடக்கின்றன.
மை மட்டும் நம்மிடம்.
அந்த இருட்டு "மை"
இன்னும் சில நாட்களில்
நம் வெளிச்சமாக சிறகு விரித்து
வரும் வரை
விரல்கள் மட்டும் இன்றி
நம் உள்ளம் உணர்ச்சி அறிவு எல்லாம்
அங்கே தான் விறைத்துக்கிடக்கும்.
அவர்கள்
வாக்குறுதி தந்தார்களா?
இல்லை
மங்களகரமாய்
கரன்சிகள் எனும் இந்த "இலட்சுமிகளை"த்தந்தார்களா?
என்பதெல்லாம்
இங்கு பொருட்டே இல்லை.
ஆயிரம் சட்டத்திருத்தங்கள் வந்தாலும்
"குபேரன்" எங்கள் வீட்டுக்குள் வந்து
கும்பமேளா நடத்துவதை
தடுப்பதில் என்ன பயன்?
தரித்திர நாராயணனின் தேசம் தானே இது.
ஆனால் இதன் அர்த்தம் இந்துத்வா அல்ல.
அதற்கு அவர்களின் அர்த்தமே வேறு.
சாதாரண உப்பு புளி மிளகாய் வாழ்க்கையில்
ஆன்மா என்றும் அடுத்த பிறவி என்றும்
இன்னும் கர்மா என்றும்
நான்கு வர்ணம் அஞ்சுவர்ணம்
என்றும்
சாதிகளை பீதிகளாக்கி
மதத்தை மரண பீடமாக்கி
ஆட்சி எந்திரத்தை
சுகவாசிகளின் எந்திரமாக்க
மனித நீதியை கசாப்பு செய்யும்
அந்த அனர்த்தங்கள் எங்களுக்குத்  தேவையில்லை.
அது நம்   வாழ்க்கை அல்ல.

"கருமாதி" "ஸ்ரார்த்தம்"மற்றும்
"பிறவிகளே இல்லாத ஆத்மா " என்றும்
"மானிடத்தின் பிறவிச்  சங்கிலியை அறு" என்றும்
இன்னும் வித வித
அச்சங்களை ஆவிகளாக்கி அதையும்
அரசியல் அமைப்புச்சட்டமாக்கி
எதிர்ப்போரை
சிரச்சேதம் கூட செய்யத்தயங்காதது
அல்லவா அவர்கள் சொல்வது.

அதை "ஃபாசிஸம்" என்று
சொன்னால் கூட புரியாமல்
அது என்ன "சாமி " என்றும்
அந்த "குலசாமி"க்கும்
பொங்கல் வைத்து கெடா வெட்ட‌
தயார் என்று
கிளம்பிடும் நிலையில் தானே
நாம் இருக்கிறோம்?

நாளை இந்தக்கணிப்பொறிகள்
நம் தெளிவைக்காட்டுமா?
நம் அசிங்கத்தைக்காட்டுமா?

எத்தனை தடவை தட்டினாலும்
உருவம் விழவே இல்லை என்றும்
எதைத்தட்டினாலும்
அது தான் விழுகிறது என்றும்
காட்சி துவங்கி நீண்ட நேரம் ஆகியும்
தேர்தல் திரைப்படம்
ஓடவே இல்லை என்றும்
ஒரே இருட்டு என்றெல்லாம்
சொல்கிறார்கள்.

கணினி எந்திரம் என்றால் இதெல்லாம்
சகஜமப்பா
என்று ஒரு சாக்கு சொல்பவர்களே.

அது எப்படி எங்கோ ஒரு விண்வெளியில்
குறி பார்த்து
"சர்ஜிகல் ஸ்ட்ரைக்" செய்து
அந்த இலக்கு ஏவுகணையை
தூள் தூள் ஆக்குகிறது
இந்த ஏவுகணை?
அது மட்டும் கணினி.
இது என்ன "கட்டையா?"
இப்படியும் கேட்கத்தானே செய்வார்கள்?

எதைக்காட்டினாலும் சரி
நம் இருட்டை நாமே தின்போம்.
இல்லை
வெளிச்சம் கண்டு
புது யுகம் ஒன்று படைப்போம்.


=====================================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக