வியாழன், 4 ஏப்ரல், 2019

உலகநாயகனா? உள்ளூர் நாயகனா? கமல்?

உலகநாயகனா? உள்ளூர் நாயகனா? கமல்?
==========================================================ருத்ரா

தேர்தல் பரப்புரையில்
தீவிரமாக இறங்கிவிட்டார்
கமல் அவர்கள்.
ஒரு மய்யம் நோக்கி
வில் வளைக்க ஆரம்பித்து விட்டார்.
ஆனால் அவர் அம்பின் குறி தான்
மய்யம் இழந்து நிற்கிறது.
எந்த மய்யத்தை வீழ்த்தவேண்டுமோ
அதை சுற்றி வளைத்துக்கொண்டு
உள்ளூர் தமிழனையும்
திராவிடனையும்
வதம் செய்யக்கிளம்பி விட்டார்.
எம்.ஜி.ஆர் கூட்டத்தை
நெருப்பு செருப்பு என்று
எதுகை மோனையோடு பேசி
திராவிடநீதி காக்கும் தமிழன் மீது
திராவகம் கொப்பளிக்கிறார்.
அவர் சாட்டையை சுழற்றி
"நான் ஆணையிட்டால்" பாணியில்
நடைபோட நினைக்கிறார்.
திராவிட விதை ஊன்றக்காரணமாய்
இருந்த எம்ஜிஆர்
அதே திராவிடத்தின் வேரறுக்கும்
அரசியலுக்கும் காரணமாய் இருந்த
மர்ம முடிச்சு அந்த "மர்மயோகிக்கு"த்தான்
தெரியும்.
மக்கள் செல்வாக்கு எனும்
குடை நிழலில்
அவரது தொப்பியும் கண்ணாடியுமே
தெய்வங்கள் ஆகிப்போயின.
கமலுக்கும் எம்.ஜி.ஆர் ஆகும்
ஆசை வந்ததில் தவறில்லை.
அதற்கு "அந்த செருப்பு"வேண்டுமா?

காங்கிரஸ் ரத்தம் என்றார்களே.
மதவெறியை சாதுவாய்
மடித்து வைத்துக்கொண்டு
வாக்குறுதிகள் அளக்கும்
சனாதனிகள் பக்கம் ஓட்டுக்கள்
விழுந்தாலும் கவலையில்லை
என்று அவர்களின்
பி டீம் முத்திரையை
தன்மேல் குத்திக்கொள்ளத் தான்
இவ்வளவு ஆவேசமா?
தசாவதாரத்தில்
அமெரிக்கர்  புஷ்ஷின் வேடத்திலும்
தலை நீட்டியவர் ஆயிற்றே.
தசாவதாரம் தாண்டிய பதினொன்றாவது
அவதாரத்துக்கு
மோடிஜியின் மேக் அப்புக்குள்ளும்
வலம் வர அவர் துடிக்கும் துடிப்பு தான்
இந்த பரப்புரைப்பேச்சுக்களில்
ஒரு பதற்றத்தைக்காட்டுகிறதோ ?
அரசியலுக்குள் அரசியலாக
அவருக்கு நெருங்கிய சிலரை
வைத்து ஒரு இப்படி
"பிக் பாஸ்" ஷோ நடத்துவது
வெறும் சின்னத்திரை விளையாட்டு.

திராவிடம் வரலாறுகளின் காட்டாறு.
அதைக்கொச்சைப்படுத்தும்
குள்ளநரி விளையாட்டு
அவர் அரசியலுக்கே
குழி வெட்டிக்கொள்வதற்கு சமம்.

=====================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக