சனி, 13 ஏப்ரல், 2019

சச்சிதானந்தம்

சச்சிதானந்தம்
============================================ருத்ரா

மனிதா!
நீ பிறக்காதே
பிறந்தால்
நீ இறக்கவேண்டும்.
பிறவிகளை
களைந்து விட்டால்
இறவிகளையும்
களைந்து விடலாம்.

துன்பம் ஏது?
இன்பம் ஏது?

சரி சாமி!

துன்பமும் இன்பமும்
அற்ற அந்த
மூளி நிலையை
தாங்கி
இந்த உலகில்
உலவும்
அல்லது
தங்கும்
நிலை எது?

அது தான்
சச்சிதானந்த நிலை.

இந்த சத் சித் ஆனந்தம்
என்று முக்கூடல்
எங்கே இருக்கும்?
எதில் இருக்கும்?

அது தான் ஆத்மா.
அது தான் ப்ரம்மா.

ஒண்ணும் புரியலையே சாமி.
பிறவிண்ணு
ஒண்ணு இருந்தா தானே
இந்த ஆனந்தம்
இந்த அறிவு
இந்த உண்மை
எல்லாம் இருக்கும்.

உடல் அற்ற‌
உயிர் அற்ற‌
நிலையில்
அறிவு இல்லை.
ஆனந்தம் இல்லை.
உண்மை இல்லை.

எனவே
சச்சிதானந்தமே இல்லையே
அப்புறம்
ஆத்மா ஏது?
பிரம்மம் ஏது?

என்ன சாமி!
ஆத்திகம்
சொல்ல வந்து விட்டு
இல்லை
இல்லை
இல்லை
என்று
நாத்திகம் சொல்லுகிறீர்களே.

"அறிவு சொல்கிறது.
துகள் எனும் பிண்டம்
இன்னொரு பிண்டத்தை
கவர்ந்து
உள்ளே உறிஞ்சிக்க்கொள்கிறது.
கடந்து உள்ளே
செல்வது விசை.

விசையின் விசையாக‌
உயிர் தோன்றுகிறது.
அது உடல் உருவாக்குகிறது.
அதனுள்
மூளை தோன்றுகிறது.
அதன் விசையின்
கதிர்வீச்சில் தான்
கடவுளே பிறக்கிறார்.
ஒட்டு மொத்த
விசைப்பொட்டலமாக இருக்கும்
மனிதனால்
கடவுள் பிறக்கிறார்.
ஆனால் இந்த கடவுள்
மனிதனை மறுக்கிறார்.
இயற்கை ஓட்டமே
மனிதன்.
இதன் அலைகளே
இன்ப துன்பங்கள்.
நன்மை தீமைகள்.
இவையே
மனிதனை அழித்துவிடும்
என்ற‌
அச்சம் இங்கே
கடவுள் எனும் விதையாக‌
தூவப்படுகிறது.
உயிர் அற்ற பிண்டமும் விசையுமே
உயிர் உள்ள பிண்டங்களை
தோற்றுவிக்கிறது.
இதன் விளைவுகளில்
உணர்வும் ஒரு விசை.
அதில்
அச்சம் என்ற உணர்வு
அது எல்லாவற்றையும் அழிக்கும்
முனைப்போடு
மனிதனுள் புகுந்து
மனிதனையே அழித்து
இந்த பிரபஞ்சத்தில்
உயிர் வாடையே இல்லாமல்
செய்ய
ஒரு வைரஸ் போல் இயங்குகிறது.
பூமியைத்தவிர‌
இந்த மனித உயிருக்கு
உற்ற தோழனாக
இன்னொரு மனிதன்
இந்த பிரபஞ்சத்தில்
இருக்கிறானா என்ற கேள்வியையே
அறிவாக்கி
ஆயுதமாக்கி
மனிதம் மேலும் மேலும்
ஒரு புதிய பரிணாமம் நோக்கி
வளர்கிறது.
பிரபஞ்சம் எனும் அந்த பிரம்மாவையே
ஒரு பொமரேனியன் ஆக்கி
அதை தன் அறிவு சங்கிலியில் கட்டி
உலா வரத்துடிக்கும்
மனிதத்தின் உள் விசையில்..
அந்த சங்கிலிக்குள் இன்னொரு சங்கிலியாக‌
இருக்கும் டி என் ஏ, ஆர் ஏன் ஏ எனும்
உயிர்விசையையும் இழைவித்து
அறிவு பெருவெள்ளமாய் பாய்கிறது.
இதை அழிப்பதே அச்சம்.
அச்சம் என்பதே மதம்.
மதம் என்பதே கடவுள்.
மனிதன் மனிதனையே
அழித்துக்கொள்ள‌
மனிதம் "தற்கொலை" செய்து கொள்ள‌
மனிதனில் தோன்றிய‌
வைரஸே கடவுள்."

சச்சிதானந்தம் என்று
உச்சரித்த சாமி
ஓடியே போய்விட்டார்.

=====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக