விஜயசேதுபதிக்குள்ளிருந்து ஒரு "விஜயகாந்த்"?
==============================================================ருத்ரா
மதுரைக்கு வந்திருந்த
திரு விஜயசேதுபதி அவர்கள்
அரசியல் என்பது அறிவார்ந்த செயல்
நான் (இன்னும்) அறிவார்ந்தவன் இல்லை
அதனால் என்னிடம்
"அரசியலுக்கு வருவீர்களா?" என்று
கேட்கவேண்டாம்
என்று
ஒரு அறிவார்ந்த பதிலை
மிக அருமையாகச்சொல்லியிருக்கிறார்.
"நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோமே"
அவரிடம்
அந்த அரசியல் பக்கங்களை
எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்
என்று தெரியவில்லை.
"ஓட்டுக்கு பணம் தவறு"
இது அவர் எடுக்கும் படத்தின்
ஒரு தலைப்பாகக்கூட இருக்கலாம்.
உண்மையில் சினிமாவில்
அவர் ஏறும் சிகரங்கள்
அவரை அழைத்துக்கொண்டே இருக்கின்றன.
சாதாரணமாக ஒரு லைட்பாய் அருகில் நின்று
வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துவிட்டு
போய்விடும்
அவர் படங்கள் எல்லாம்
நடிப்பின் கலைக்கு ஆவணங்களாய்
சேகரிக்கப்படவேண்டியவை
என்பதில் எந்த ஐயமும் இல்லை.
காதலித்து காதலித்து
ஒரு காதல் வலியை காட்டும்
அந்த அபூர்வ சினிமாக்கலையில்
காதலிக்காமல் காதலிக்கும்
ஒரு காதல் வலியைக்காட்டிய
அவருடைய "தொண்ணூத்தாறு"
காதல் ரோஜாக்களே பெருக்கெடுத்து ஓடும்
அக்கினி ஆறு.
அவரைப்போய்
அந்த "நாற்காலிகளின்" சிலந்திவலைக்குள்
தள்ளவேண்டாம்.
கமலிடம் இருந்த "சார்ம்ஸ்" எல்லாம்
அந்த "மய்யத்தில்" வறட்சி கண்டுவிட்டதே!
அரசியலுக்கு வருவேன் என்பவர்கள்
அரசியலுக்கு வராமலே போவதும்
வரமாட்டேன் என்பவர்கள்
வந்து பிடிவாதம் பிடிப்பதும்
சினிமா நடிகர்களின் "டிக்ஸனரி"தான்.
அந்த அர்த்தங்கள் தலைகீழானவை.
பட்டாம்பூச்சியின் "கோக்கூன்" போல
இவரும்
ஒரு விஜயகாந்தாக சிறகு படபடத்து
வந்து நிற்பாரோ?
என்ற அச்சமே நிலவுகிறது.
சினேகன் என்ற அருமைக்கவிஞன்
ஒரு நாள் நான் செங்கோல் பிடிப்பேன்
என்று
வளைய வளைய வரும்போது
விஜயசேதுபதிகளும் ஒரு நாள்
அந்த "திக் விஜயத்துக்கு"
தயார் ஆகி விடுவாரோ என்பதே
நம் பயம்.
அது சினிமா உலகுக்கு பேரிழப்பு
என்பது
நமக்கு இன்னொரு அச்சம்.
===============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக