செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா




தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா
========================================ருத்ரா இ பரமசிவன்.


மராஅத்த அடர்கான் விரிவெண் வீதூஉய்
படுத்த மன்றில் திங்களும் தோய்தர
வெண்கடல் ஆர்த்த வெள்ளிடைப் பறந்தலை
பொருள் வேட்டுனன் சென்றான் ஆங்கு
நெடிய ஊழும் ஊழ்த்தது மன்னே.
ஆறு ஊர்வழி மன்பதை உருட்டும்
அடு நனி வாழ்வின் முறைப்படுஊம்
நோன்பின் ஊடிழை நெட்டிழையாவும்
தேர்ந்தவன் அவனே பொருள்வயின்தேடி
பொல்லாக்கானம் பொறிகிளர் வேங்கை
உறுத்து விழித்தது மருட்டியும் அஞ்சா
தீவிழிக் காட்டில் கதழ்பரிக் கலிமா
விரைய ஓட்டிச்செல்லும் காலையும்
எந்தன் மைவிழி மீமிசை ஆரிடை
ஏகிட செய்யும் அவல் பரல் கடாஅத்து
அஃதே எந்தன் செவ்வரி மழைக்கண்
நம் அணிலாடு மூன்றில்  வெரூஉ செய்திட
மீட்டு இவண் சேர்க்கும் நம்
வெள்ளிய மன்று  வள்ளியில்  படர்ந்த
அகன் மனை ஈண்டு அறிவாய் தோழி.

======================================================
இது நான் எழுதிய ஒரு சங்கநாட்டைச் செய்யுள் கவிதை.

திங்கள், 29 ஏப்ரல், 2019

எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்...?

எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்...?
==========================================================ருத்ரா

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே...
என்று குதிரையைப்பிடித்துக்கொண்டு நடந்து
நாமக்கல் கவிஞரின் வரிகளை
சொடுக்கிவிட்டுப்போனாரே
அவரும் அரசுக்கட்டிலில் உட்கார்ந்து
ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார்.
ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களின் மீது
சினிமா காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

வறுமைக்கு மருந்து இது.
அறியாமையின் திறவுகோல் இது
விடுதலை மூச்சின் வெளிப்பாடு இது
இன்னும் என்னவெல்லாமோ பாடி ஆடி
எழுபது ஆண்டுகளுக்கும் மேல் தொலைத்துவிட்டோம்.

முதலில் ஒரு பெட்டியை வைத்தார்கள்.
அதில் பல வர்ணங்கள். பல சின்னங்கள்
எல்லாம் வைத்தார்கள்.
எல்லாவற்றிலும் இருந்தது "நான்கு வர்ணம்"

பொது மானிட நீதி  சித்தாந்தங்கள்
துளிர்த்தன.மலர்ந்தன..
ஆனாலும்
தறிகெட்ட தனிமை சுதந்திரமே
மக்களையெல்லாம்
ஒரு அபினிக்கடலில் தள்ளியது.
சாதி மதங்கள் அமிழ்த்தியதில்
மானிட நேயம் மறைந்தே போனது.

மனித உழைப்பை உறிஞ்சும்
அட்டைவர்க்கத்தினரே
ஆளும் வர்க்கம் ஆனார்கள்

சினிமா வந்தது.
புரிதலின் இமைகள் திறந்தன.
ஆனாலும்
பொருளாதார அடிப்படை சூத்திரம்
அடியில் போனது.
மனிதனை மனிதன்
சுரண்டுவது மட்டுமே
இங்கு சட்டம் ஆனது திட்டம் ஆனது
இன்னும் எல்லாம் ஆனது.

தொலைகாட்சிகள்
மனிதர்களை மாடுகள் போல்
வீடுகளின்
அந்த முற்றத்துத்தொழுவத் திலேயே
கட்டிப்போட்டன.
செல்ஃ போன்கள்  வந்தன.
ஆயிரங்கண் இந்திரன் போல
அதில் ஆயிரம் காமிராக்கள்
முளைத்திருந்தன.
அதனால்
இங்கு எங்கும் ஆபாசமே
சமுதாயக்"கண்"ணோட்டம் ஆகிப்போனது.

மனிதனை மலர்த்தும் அரசியல்
இங்கே தடம் மாறி
குப்பை ஆனது கூளம் ஆனது.
ஊழல் லஞ்சம் இங்கே
வாழ்க்கையின் முறைகள் ஆனது.

ஜனநாயகம் இங்கே
லஞ்ச நாயகம் ஆகிப்போனது.
அறிவியல் உயர்ந்தது என்று
கணினி ப்பெட்டிகள்
இவர்களை ஆள வந்தது.
ஓட்டுகள் இங்கே நோட்டுகள் ஆனதே
நம் விலையுயர்ந்த ஜனநாயகம்.

முடிவுகள் உமிழ
படுத்துத்தூங்கும் அந்த பெட்டிகளில்
எல்லாம்
மலடாகிப்போன
நம் கனவுகள் தூங்குகிறன.
மரத்துப்போன நம் சுதந்திர தாகங்களும் கூட
குறட்டைவிட்டுத் தூங்குகின்றனவே.

==================================================






ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

தேடிச்சோறு நிதம் தின்று....




தேடிச்சோறு நிதம் தின்று....

==========================================ருத்ரா இ பரமசிவன்





தினமும் செய்திகள் செய்திகள்

துணுக்குகள்

கவிதை மொக்கைகள்

பின் நவீனத்துவ‌

முன் நவீனத்துவ‌

மாயாவாதக் கனவுவாத‌

வார்த்தை ஆலாபனைகள்.



யாரோ ஒரு நடிகை

அங்கம் எல்லாம்

துண்டு துண்டாய் வெட்டப்பட்ட விவரிப்பும்

காவல் நாய்கள்

அந்த மாமிசத்தை மோப்பம் பிடிக்கும்

இராட்சத காமிரா காட்சியும்..

மயிர்குத்திட்டு நிற்கவைக்கும் எழுத்துகளும்...



ஒரு புது மாதிரி

தாடியோ

குல்லாவோ

வைத்துக்கொண்ட‌

சாமியாரின்

ஆன்மீகக்குடல் உருவிய‌

ஸ்லோக சங்கிலித்தொடர்

வாக்கியங்களும்.....



பங்கு மூலதனத்தில்

கரடியும் காளையும்

கட்டிப்புரண்டு

புழுதிகிளப்பியதில்

கருப்புப்பணங்கள் கூட‌

கை கட்டி வாய்பொத்தி

கும்பாபிஷேகம் பண்ணி

சம்ப்ரோக்ஷணம் செய்து

பொருளாதாரத்தை புள்ளி விவர‌

ஆணி அடித்து ஆணி அடித்து

ஆலவட்டம் போடும்

பத்தி பத்தியான கட்டுரைகளும்....



தேடிச்சோறு நிதம் நின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

சிந்தனைக்குள்

சிதறுகின்ற பாரதியின் எரிமலைகளையே கூட

அவித்துப் போடும்

அரட்டைக்கூளங்களும்....



எம்.எல் ஏ சீட்டு.

இல்லாவிட்டால்

எம்.பி சீட்டு

இல்லாவிட்டால்

ராஜ்ய சபா சீட்டு

இன்னும்

மெடிகல் சீட்டு

இஞ்சீனியரிங்க் சீட்டு

என்று

அரசியலின் சாயப்பட்டறைகள்

கழுவி கழுவி ஊற்றிய‌

வாய்க்கால் வரப்பு செய்திகளும்....



மணல் அள்ளிச்செல்லும்

கொள்ளைகளும்

ரோடுகளில் மக்கள்

மறியல் செய்து மறியல் செய்து

டிவிக்களில்

முகங்கள் மொய்த்த செய்திகளும்....



அணு உலை வேண்டாம் என்று

அடுக்கு அடுக்காய்

ஜனங்கள் குவித்து

தொட்டில்கட்டி குழந்தைகளுடன்

சுருண்டு கிடந்தும்

அணுவின் எலக்ட்ரானுக்குள்ளும்

பிளக்கமுடியாத‌

இனவாத மயிரிழை அரசியலும்

அது சார்ந்த‌

விஞ்ஞான அஞ்ஞான எடுத்துக்காட்டுகள்

குவிந்த செய்திகளும்.....



காவிரியும் முல்லையாரும்

இனி சங்கத்தமிழ் ஒலிக்காது

என்னும்

ஒப்பாரி முழக்கங்களும்

ஒரு சொட்டு கூட தர மாட்டோம்

எனும்

தேர்தல் பருவகால‌

நரம்பு புடைக்கும்

நாக்கு தெறிக்கும்

பேச்சுகளின் ஒளிபரப்பு செய்திகளும்...



கோவில் நடை திறப்பது போல்

நாடாளுமன்ற நடை திறக்கும் போதெல்லாம்

புறக்கணிப்போம் எனும்

ஜெண்டை மேள ஜால்ரா தட்டல்

ஒலிகளின் தலைநகர்ச்செய்திகளும்



உள்ளுக்குள்ளே

உயிரற்ற மைக்குகளுக்கு

கை கொடுக்கும்

மேசை தட்டல் மழையோசைகளும்...





இன்னும்

இன்னும்

பூனைமயிரில்

புதுக்கவிதைகள் செய்து

காதலின் ரத்த அணுக்களின்

சத்த மியூசிக்குகளில்

சரித்திரம் படைக்க கிளம்பிய‌

லேசர் அரங்க பட்டைகிளப்பும்

சினிமா கலைநிகழ்ச்சி செய்திகளும்..



மூச்சு முட்டுகிறது.

செய்திகள் தின்று தின்று..

பாவம்.

கொண்டுவாருங்கள்

யாராவது

ஆக்சிஜன் சிலிண்டரை

நம் ஜனநாயகத்துக்கு..



======================================================

4 ஆகஸ்டு 2013 ல் எழுதியது

சனி, 27 ஏப்ரல், 2019

வெள்ளைப்பூக்கள் விவேக்.

வெள்ளைப்பூக்கள் விவேக்.
==============================================ருத்ரா

வெள்ளைப்பூக்கள் "ருத்ரா"வுக்கு
இந்தக் கவிஞன் ருத்ராவின்
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
இரண்டு விவேக்குகளும்
இந்தப்படத்துக்கு ஒரு புதிய பரிமாணம்
சேர்த்திருக்கின்றனர்.
இந்திய கணிப்பொறியாளர்கள்
அமெரிக்காவில் டாலர்கள் குவித்து
அங்குள்ள இந்தியக்கோவில்களில்
ருத்ர ஹோமங்கள் நடத்தி
பஞ்சகச்ச பவ்யத்தில்
பயபக்தியுடன் சாமிகும்பிடும்
காட்சிகளைத்தான்
நான் லாஸ் எஞ்சல்ஸில் இருந்தபோது
கவனித்திருக்கிறேன்.
ஆனால் விவேக் இளங்கோ அவர்களின்
"வெள்ளைப்பூக்கள்"
இப்படியொரு "செல்லுலோஸ் ருத்ர யாக"த்தில்
புதிய சிந்தனைகளை புல்லரிக்க வைக்கிறது.

விவேக்கின் காமெடி இங்கே
கொஞ்சம் கையைக்கட்டிக்கொண்டு
இருந்தாலும்
அவர் வரும் காட்சியெல்லாம்
திகிலும் விறுவிறுப்பும்
போட்டி போட்டுக்கொண்டு
ஓடி வருகிறது.
1996 களில்
சீ ஆட்டில் "ஸ்பேஸ் நீடிலில்"
உட்கார்ந்து கொண்டு
பனிக்குளியலில் போர்த்திருக்கும்
அந்த நகரத்தைப்பார்த்திருக்கிறேன்.
இப்போது அந்த நிமிர்ந்த கட்டிடங்கள்
விவேக்குடனும் சார்லியுடனும்
கை கோர்த்துக்கொண்டு
நடிப்பது போல் இருக்கிறது.

ரஜனி அஜித் போல்
இந்த "சால்ட் பெப்பர்" கெட் அப்
விவேக் எனும் சூப்பர்ஸ்டாருக்கும்
கன கச்சிதம் தான்.
சண்டைகள் போட்டால் தான்
சூப்பர்ஸ்டாரா?
வெண்தாடி வேந்தரின்
சிந்தனைகளைக்கொண்டு
சிரிக்க வைத்து சிரிக்கவைத்து
சமுதாயப்போராட்டங்களை
அரங்கேற்றியிருக்கிறாரே
இந்த சூப்பர் சூப்பர்ஸ்டார்.
ஏதோ ஒரு படத்தில்
ஒரு மைல்கல்லுக்கு துணி சுற்றி
மஞ்சள் குங்குமம் எல்லாம் வைத்து
கன்னத்தில் போட்டுக்கொண்டிருப்பார்களே
அப்போது சொல்வார்
"டேய் ஒரு பெரியார் பத்தாதுடா.இன்னும்
நானூறு பெரியார்கள் வந்தாலும்
இப்படித்தான் இருப்பீங்க"
அந்த ஹிட் அடித்த கதாநாயகர்களின்
பஞ்ச் டையலாக்குகளை விட
ஆயிரம் மடங்கு
கூர்மையானது  செறிவானது
இவரது இந்த டைலாக்.

பழைய விவேக்குகளையெல்லாம்
உருட்டி திரட்டி நம் கருத்தில்
வைத்துக்கொண்டு தான்
இந்த வெள்ளைப்பூக்களின்
அமெரிக்க "செர்ரி"பூங்கொத்தைப்
பார்க்கிறோம்.
அவர் நடிப்பு புத்தகத்தில்
இன்னும் நாம் பார்க்காத
அத்தியாயங்களின்
இந்த முதல் அத்தியாயம்
பொன்னெழுத்துக்களில்
இங்கே பளிச்சிடுகிறது.
இந்தப்படத்தில்
கனமான குணச்சித்திரம்
இவரிடம்
அற்புதமாய் வெளிப்பட்டிருக்கிறது
அதுவும் ஒரு "லைட்டர் வெய்ன்"லுக்கில்
"திடுக்"நொடிகளோடு
இழைபின்னிக்கிடக்கிறது.
இவரோடு சார்லியின் பாத்திரம்
ஒன்றி நிற்கிறது.
மூச்சு இறைக்க இறைக்க
அந்த குகைபோன்ற
உயர்ந்த கட்டிடத்தில்
திகில் தருணங்களை நன்கு
தோலுரித்துக்காட்டியிருக்கின்றனர்.
துப்பறியும் அந்தக்காலத்து
வடுவூர் துரைசாமி அய்யங்கார்
நாவலும் கூட
இந்த "கேனான் டாயிலின் "
எழுத்து நிழல்களை ஏந்தியிருந்ததை
நாம் அறிவோம்.
ஷெர்லக் ஹோம் சூத்திரங்களின்
அந்த "சில்ஹவுட்"ஒளிக்கோடுகள்
இந்தப்படத்தில் வியக்கவைக்கும்
மாயத்திருப்புமுனைகளை
காட்டியிருக்கின்றன.
இயக்குனர்
நம்மை திகைக்க வைத்திருக்கிறார்.
விவேக் தொட்டிருக்கும் புதிய
"கிளிமஞ்சாரோ சிகரம்" இது.

===================================================











வெள்ளி, 26 ஏப்ரல், 2019

அங்கே ஓர் இடம் வேண்டும்.

அங்கே ஓர் இடம் வேண்டும்.

=====================================கல்லிடைப்பரணன்.


தமிழை ஒலித்தால்

காதுகளில் கம்பளிப்பூச்சிகள்.

தமிழ் பேசினால்

கசப்பு தான்.

தமிழ் எண்ணினால்

சோறில்லை.

தமிழ் எழுதினால்

இடமில்லை.

தமிழில் கவிதை

கொலவெரி தான்.

தமிழை மொழியென்றால்

நாடு கடத்து.

தமிழ் இனமென்றால்

தமிழனே

தமிழனுக்கு கல்லறை.

அது ஏன்?

தமிழ் வரலாறு

புழுக்களின் வரலாறு.

தமிழ் ஆத்திகம்

தமிழும் நாத்திகம்.

தமிழில் ஆங்கிலம்

தமிழே ஆங்கிலம்.

இனிக்கிறது என்று

தமிழில்

சொல்வதாகத்தான் சொன்னான்

இவன் பெயரை

வடமொழியில்!


கல் தோன்றி மண் தோன்றுமுன்

வந்தவன் என்று

நைந்து கிடக்கிறான்

கல் குவாரியிலும்

மண் குவாரியிலும்.



உலகம் தமிழில்

ஒரு நாள்

இமை உயர்த்தும் என்று

நம்புவோம்.


அந்த‌

"ஞாயிறு" தோன்றும் வரை

திங்கள் முதல்

சனி வரை

இந்த

பஞ்சாங்கத்தில்

படுத்துக்கிடப்போம்.


உறுமுவது மட்டும்

உரிமைகள் ஆகுமா?


தமிழை

உருவாக்கும் முன்னே

தமிழை

கருவறுக்கவோ

இங்கு

இத்தனைக்கூச்சல்?



உலகம் எல்லாம்

கப்பல் விட்டவன்

ஒரு தீவில்

பிணங்களாய் குவிந்தான்.


அது ஒரு தாகம் என‌

கவிதைகள் சொன்னான்.

தமிழில் கூட

குண்டுகள் உமிழ்ந்து

தமிழ் உயிர்கள்

குடித்திடும் கொடுமை

எப்படி வந்தது?

மூவேந்தர் என்று

வில்லும் அம்பும்

ரத்தம் தின்றபின்...தமிழ்ச்

சத்தம் மட்டுமே

இங்கு மிச்சம்.


"தண் தமிழ் வேலி தமிழ் நாட்ட கமெல்லாம்

நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது

குன்றுதல் உண்டோ....."




பரிபாடலில் எட்டாம் பாட்டு இது.

புலவனின் முகம் தெரியவில்லை.

முகவரியும் இல்லை.

ஆனால் "புறத்திரட்டு"எனும்

நூலில்  மட்டுமே

மேற்கோள்  காட்டப்பட்ட  பாடல்.

பாடலும் முழுமையில்லை.


இடிந்த கோட்டையின்

உருவகமாய்

தமிழின் புலம்பல் வரிகள்

கேளா இடமில்லை.




எங்கே தமிழ்?எது தான் தமிழ்?

அங்கே எனக்கு

ஓர் இடம் வேண்டும்!




=====================================================
கல்லிடைப்பரணன்....08/02/2016

விஜயசேதுபதிக்குள்ளிருந்து ஒரு "விஜயகாந்த்"?


விஜயசேதுபதிக்குள்ளிருந்து ஒரு "விஜயகாந்த்"?
==============================================================ருத்ரா


மதுரைக்கு வந்திருந்த‌
திரு விஜயசேதுபதி அவர்கள்
அரசியல் என்பது அறிவார்ந்த செயல்
நான் (இன்னும்) அறிவார்ந்தவன் இல்லை
அதனால் என்னிடம்
"அரசியலுக்கு வருவீர்களா?" என்று
கேட்கவேண்டாம்
என்று
ஒரு அறிவார்ந்த பதிலை
மிக அருமையாகச்சொல்லியிருக்கிறார்.
"நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோமே"
அவரிடம்
அந்த அரசியல் பக்கங்களை
எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்
என்று தெரியவில்லை.
"ஓட்டுக்கு பணம்  தவறு"
இது அவர் எடுக்கும் படத்தின்
ஒரு தலைப்பாகக்கூட இருக்கலாம்.
உண்மையில் சினிமாவில்
அவர் ஏறும் சிகரங்கள்
அவரை அழைத்துக்கொண்டே இருக்கின்றன.
சாதாரணமாக ஒரு லைட்பாய் அருகில் நின்று
வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துவிட்டு
போய்விடும்
அவர் படங்கள் எல்லாம்
நடிப்பின் கலைக்கு ஆவணங்களாய்
சேகரிக்கப்படவேண்டியவை
என்பதில் எந்த ஐயமும் இல்லை.
காதலித்து காதலித்து
ஒரு காதல் வலியை காட்டும்
அந்த அபூர்வ சினிமாக்கலையில்
காதலிக்காமல் காதலிக்கும்
ஒரு காதல் வலியைக்காட்டிய‌
அவருடைய "தொண்ணூத்தாறு"
காதல் ரோஜாக்களே பெருக்கெடுத்து ஓடும்
அக்கினி ஆறு.
அவரைப்போய்
அந்த "நாற்காலிகளின்" சிலந்திவலைக்குள்
தள்ளவேண்டாம்.
கமலிடம் இருந்த "சார்ம்ஸ்" எல்லாம்
அந்த "மய்யத்தில்" வறட்சி கண்டுவிட்டதே!
அரசியலுக்கு வருவேன் என்பவர்கள்
அரசியலுக்கு வராமலே போவதும்
வரமாட்டேன் என்பவர்கள்
வந்து பிடிவாதம் பிடிப்பதும்
சினிமா நடிகர்களின் "டிக்ஸனரி"தான்.
அந்த அர்த்தங்கள் தலைகீழானவை.
பட்டாம்பூச்சியின் "கோக்கூன்" போல‌
இவரும்
ஒரு விஜயகாந்தாக சிறகு படபடத்து
வந்து நிற்பாரோ?
என்ற அச்சமே நிலவுகிறது.
சினேகன் என்ற அருமைக்கவிஞன்
ஒரு நாள் நான் செங்கோல் பிடிப்பேன்
என்று
வளைய வளைய வரும்போது
விஜயசேதுபதிகளும் ஒரு நாள்
அந்த "திக் விஜயத்துக்கு"
தயார் ஆகி விடுவாரோ என்பதே
நம் பயம்.
அது சினிமா உலகுக்கு பேரிழப்பு
என்பது
நமக்கு இன்னொரு அச்சம்.

===============================================================







வியாழன், 25 ஏப்ரல், 2019

திராவிடம் என்பது...

திராவிடம் என்பது...
=================================================ருத்ரா

திராவிடம் என்பது
தமிழ் மொழியின் ஒரு
வரலாற்று வெளிச்சம்.
அது ஒன்றும் சமஸ்கிருத‌
வேர்ச்சொல் அல்ல.
திரை என்னும் கடல் அலை
கடந்து தன் சுடர் காட்டிய‌
தமிழனின் திறம் காட்டும்
சொல் அது.
சமஸ்கிருதம் என்ற சொல்லுக்குள்ளேயே
தமிழ் மொழிச்சாறு தான்
இறங்கியிருக்கிறது.
பல மொழி ஒலிப்புகளை
திரட்டிக்கொண்டுவந்தவன்
தமிழன்.
திரை கடலோடிக் கொணர்ந்த
அந்த பல் மொழிக்கு
சமமாக தமிழை அவன்
ஆக்கியிருப்பதே சமஸ்கிருதம்.
கரம் என்ற தமிழ்ச்சொல்
கையைக்குறிக்கிறது.
எல்லா செயல்களும்
கையின் வழியே வெளிப்படுவதே
கிருதம் எனப்படும்.
உலகம் சுற்றி அவன் கொணர்ந்த‌
பல ஒலிப்புகளையும்
தமிழ் இழையில் கோர்த்து
உருவாக்கியதே சமஸ்கிருதம்.
தமிழன் உருவாக்கிய இந்த மொழி
தமிழோடு ஒட்டாமல் நின்றது.
தமிழ் பேசிய‌
சேர சோழ பாண்டியர்களே
ஒருவருக்கொருவர்
வெட்டிச்சாய்த்துக்கொள்வதே
வீரம் மானம் என்று
போற்றப்பட்ட போது
தமிழன் ஆக்கிய அந்த "அயல் தமிழ்"
எப்படி தமிழோடு இழையும்.
தமிழ் மொழியில்
"ஆர்" என்ற சிறப்பு விகுதி
மற்றும் உயர் தனி உரிச்சொல்
அயல் தமிழுக்கு
ஆர் இயல் தமிழ் ஆகி
ஆரியத்தமிழ் ஆனது.
இப்போது பாருங்கள்
தமிழே
சமஸ்கிருதமாகி
"ஆர்க்கும் இனத்தவரின்
அதாவது ஆரிய இனத்தவரின்
மொழியாகி
தமிழை அழிக்க வெறிகொண்டு
வருகிறது.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின்
ஆராய்ச்சிப்பாதையில்
சென்றால்
தமிழிலிருந்து உருவானதே
சமஸ்கிருதம் என்பது
புலனாகும்.
திராவிடத்தின்
அதாவது "திரையிடத்தின்"
(கடலும் கடல் சார்ந்த இடமும்)
வரலாற்று வெளிச்சம் புரியும்.
நம் சங்கத்தமிழ் இந்த‌
நெய்தல் நிலத்தவனை
"பரதவன் அல்லது பரதன்"
என்று அழைக்கிறது.
பரவை என்ற சொல் கடலைக்குறிக்கும்.
பரதன் என்னும் சொல் அந்த‌
பரவையிலிடுந்து தான் வந்திருக்கும்.
நம் இந்தியாவே "பரதகண்டம்" தான்.
வியாசர் எனும் பரதவரே
மகாபாரதம் எழுதினார்.
சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும்
பிறந்தவன் தானே பரதன்
என்பீர்கள்!
ஆனால் சகுந்தலையின் ஞாபகமே
துஷ்யந்தனுக்கு தொலைந்து போன போது
ஒரு செம்படவன் (பரதன்)
பிடித்த மீன் வயிற்று மோதிரம் தானே
சகுந்தலையையும் துஷ்யந்தனையும்
சேர்த்தது.
ஒரு பரத(வ)ன் உதவியால்
பிறந்த குழந்தைக்கு
"பரதன்" என்று அவர்கள்
பெயர் சூட்டியிருக்கலாம்.

அதனால் இப்போது
இந்தியாவின்(பரதா கண்டத்தின்)
தேசிய மொழி
என்னும் செம்மொழி
நம் தமிழ் மொழி தான்
என்று உரிமைக்குரல்கள்
எழுப்பும் நேரம் வந்து விட்டது.
மொழி ஆராய்ச்சியாளர்களே
உங்கள்
சிண்டைப்பிய்த்துக்கொள்ளும்
நேரமும் வந்து விட்டது.

====================================================

என்ன இப்படியெல்லாம் எழுதுகிறீர்களே
என்று கேட்கிறீர்களா?
சிவன் தன் மூத்த  புதல்வனின்
தலை வெட்டப்பட்டுவிட்டபோது
யானைத்தலையை ஒட்டவைத்து
"பிளாஸ்டிக் சர்ஜரி" செய்தார் என்று
"விஞ்ஞான  பூர்வமான புராணம்"
அவர்கள் எழுதத்துவங்கி விட்ட போது
நாம் நம் தமிழின் ஆராய்ச் சியை
இப்படியெல்லாம் தான் எழுதவேண்டும்.

========================================================


புதன், 24 ஏப்ரல், 2019

கடவுளே!




கடவுளே!
======================================================ருத்ரா

கடவுளே!
என்ன கொடூரம் இது.
உன்னை வழிபடும் இடத்தில்
ஏன் இந்த கொலைவெறி?
பழிக்குப்பழியா?
எங்கோ நடந்ததற்கு
இங்கே பதிலடியா?
எச்சரிக்கை வந்தது.
அலட்சியமாக இருந்ததற்கு
மன்னித்து விடுங்கள்
என்று
அந்த அரசு அறிக்கை விடுகிறது.
அநியாய யுத்தம் செய்து
லட்சம் பேர்களை படுகொலை செய்த‌
முன்னாள் ஆட்சியாளர்
உடனே அரசை கலை என்கிறார்.
நம் இந்திய அரசாங்கம்
அங்கே அமைதிப்படுத்த‌
எல்லா உதவிகளையும்
செய்யத்தயார் என்கிறது.
உலக நாடுகளும்
உதவ ஓடோடி வருகின்றன.
மரணங்களின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறதைப்பார்த்தால்
நம் வயிறு கலங்குகிறது.
அச்சம் மிகுகின்றது.
புத்தம் சரணம் கச்சாமி
ஒலிக்கிற தேசத்தில்
பச்சைப்படுகொலைகள்
நம்மை பதற வைக்கின்றன.

கடவுளர்களே!
நீங்கள் நடத்துகின்ற‌
பட்டி மன்றத்தில்
உயிர்ப்பலிகள் தான்
தீர்ப்புகளா?
உங்கள் பக்தர்கள்
உங்களை உயரத்தில்
வைக்க‌
மனித உயிர்களைக்கொண்டு தான்
படிக்கட்டுகள்
கட்டவேண்டுமா?
சிந்தனை அற்ற‌
வெறும் கபாலங்களைக்கொண்ட‌
மிருகங்களா
இங்கே மனித உரு கொண்டன?
என் மதம் தான் இங்கே செல்லும்
என்று
வெடிகுண்டுகள் இங்கே
பிரசங்கம் செய்து கொண்டிருக்கின்றன.
மரண மழை பொழிந்து
ரத்தக்காடுகள் தான்
இங்கே செழித்துக்கொண்டிருக்கின்றன.
கடவுளர்களின்
மல்யுத்தப்போட்டியா?
இல்லை
கொல்யுத்தப்போட்டியா?
கடவுளர்களே!
உங்களை உரத்தக்குரலில் அழைக்கின்றோம்.
ஆனால்
எங்கள் குரல் உங்களுக்கு கேட்கப்போவதில்லை.
ஏனெனில்
நீங்கள் தானே
இங்கே சவக்குவியல்களாய் கிடக்கிறீர்கள்.
மதம் என்று இறக்கிறதோ
அன்று தான்
முதல் மனிதன் பிறக்கிறான்.

=======================================================







செவ்வாய், 23 ஏப்ரல், 2019

காலம்

காலம்
=====================================ருத்ரா

எங்கே அது?
கருப்பு சிவப்பா
கண்ணுக்கு தெரியவில்லை.
விடியலும் அந்தியும் தான்
நம்மோடு வரும்
அதன் மைல்கற்கள்..
அதன்
நீளம் அகலம் ஆழம்
யாருக்குத் தெரியும்?
அன்றொரு நாள்
அகல விழியில்
பேருந்தின் பிதுங்கி வழியும்
கூட்டத்தில்
ஒரு மின்னற்பூவைக் கண்டேன்.
என்னை நோக்கி
அனிச்சத்தில்
அம்புப்பார்வை ஒன்று
அவள்
எய்து விட்டாள்
அன்று முதல்
அதே பேருந்தில்
அதே தடத்தில்
அதே பேருந்து நிறுத்தத்தில்
அதே பிதுங்கி வழியும்
வியர்வை நாற்றத்து
காடுகளிடையேயும்
அந்த ஆழமான
விழிகளைத்தேடுகிறேன்.
ஆம் இன்னும் தேடுகிறேன்.
அந்தக் காலப்பரிமாணம்
களவு போனது.
வருடங்கள் நெல்லிக்காய்
மூட்டையாய்
சிதறுண்டு போனது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து
அம்பது சொச்சம் ..
இரண்டாயிரத்து சொச்சம் என்று.

வாழ்க்கை என்பது
"பொக்கிஷப்பெட்டி" என்றால்
"பழம் நினைவுகளே" பொக்கிஷம்.
பழையதை தூக்கியெறி என்றால்
அந்த காலிப்பெட்டியை
சுமப்பதே பெரும் சுமை.

தி.ஜானகிராமன் நாவல் போல‌
உள்ளம் பிசையும் எழுத்துகள்
உள்ளே அடைத்த தலையணைகளில்
தூக்கம் கூட‌
எரிமலைகுழம்பின்
இலவம் பஞ்சுச்சதையில்
புரண்டு புரண்டு போக்கு காட்டுகிறது.

கனத்த வாழ்க்கை.
நரைத்த வாழ்க்கை.
புஷ்டியான குடும்பசந்தோஷத்துக்கு
குறைச்சல் இல்லை.

அடிவானத்தில்
வெட்கமில்லாமல்
சூரியனும் கடலோடு
குடைந்து குடைந்து
ஒளியை வைத்து கண் பொத்தி
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான்.
காலம்
அர்த்தமற்றதாய்
தன்  அசிங்கமான
பாம்புச்சட்டைகளை
உரித்துப்போட்டு
சென்று கொண்டிருந்தது,
செத்தபாம்பாய்
அந்த  மின்னல் பூச்சரமும்
அடித்து நசுக்கப்பட்டு கிடந்தது.
அந்த விழிகள் மட்டும்
என்னைத்தீண்டிக்கொண்டே இருந்தது.
காலமாம் காலம்!
அது பொத்தலாய்க் கிடந்தது.

==========================================
22.08.2017

சனி, 20 ஏப்ரல், 2019

மண்புழுவே ! மண்புழுவே!


மண்புழுவே ! மண்புழுவே!
==================================================ருத்ரா

இரண்டாவது சுதந்திரப்போராட்டம் இது.
வெளியே இருந்து நம்மைத்தாக்கும்
வெள்ளைப்பூதங்கள் ஏதும் இல்லை.
காலனி ஆதிக்கம் என்றொரு பெயரில்
கடல் கடந்து வந்து நம்மை
கப்பம் கட்டச்சொல்லும் செங்கோல்
ஏதும் இங்கு நீளவில்லை.

நம்மிடம் ஆழ வேரூன்றி
நமக்கே நச்சுப் பெருமரமாய்
நிழல்கள் தந்தது போல் காட்டி
நம்மை அரித்து தின்னுகின்ற‌
கரையான்களை நாம் அறியவில்லை.
சாதி மதம் சனாதனம் என‌
சாஸ்திரங்கள் ஆக்கிவிட்டார்.
நம்மை அடியில் அமிழ்த்திவிட‌
ஆயிரம் சடங்குகள் இயற்றிவைத்தார்.

அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது தெரிந்து கொள்வாய் என
ஆன்ற தமிழர் சொன்னது எல்லாம்
மறைத்துக்காட்டி "மறைகள்" செய்தார்.
பிறவி பாவம்.ஐம்பொறி பாவம் என‌
மாபெரும் மனித வாழ்க்கையை எல்லாம்
பாவம் பாவம் என்றே ஓதினார்.
இந்த மண்ணை அறிதல் பாவம்.
இந்த விண்ணை அளத்தல் பாவம்.
மனதும் பாவம்.சிந்தனை பாவம்.
அதுவும் பாவம் இதுவும் பாவம்
எதுவும் எங்கணும் பாவம் தான்.
"மண் புழுக்களே! மண்புழுக்களே!
மண்ணும் கூட உன் சொந்தமில்லை.
விண்ணும் கூட உனக்கில்லை.
வானமே உனக்கு இல்லையெனில்
"விடியல் ஏது? வெளிச்சமும் எது?
இருட்டே உன் கூடு.
உனக்கு
எங்கள் மந்திர இரைச்சல்
மட்டுமே கேட்கும்.
சமஸ்கிருதம் என்று உன்னால்
உச்சரிக்க கூட  முடியாது.
அதுவே உன் தெய்வம்.
அதுவே உன் மோட்சம்.
"தமிழ் கிமிழ் என்றெல்லாம்
உளறும் உன் ஆபாசம்
உன் மோட்சம் தடுக்கும்
பாவம் தான்
அறிவாய் அறிவாய் மண்புழுவே!

 பாவம் தீர மந்திரம் உண்டு.
பிராமணர் அவர் தான் பாவமே அற்றவர்.
அவரிடம் மந்திரஒலிகள் கேட்டு
மடங்கிக்கிடப்பாய்..சுருண்டுகிடப்பாய்.
பூமியில் நீ வெறும் மண்புழு தான்.
உழந்து உழந்து நீ உருவாக்கும்
செல்வம் எல்லாம் அவர் காலடியில்...அந்த‌
"காலடி" மந்திரம் அறிந்திட வேண்டும்.
பன்றியும் பகவானும் ஒன்றே தான்.
அதனால்
நீ பன்றியாகவே இருந்திடுவாய்.
பகவான் அந்த பிராமணரே உனக்கு
மோட்சம் எல்லாம் போதிப்பார்.

உலகம் எல்லாம் மனித உயிரின்
வேரற்று கிளையற்று விதையற்று
வீழ்வது தான் மோட்சமா?
மனிதன் இன்றி சிந்தனை இல்லை.
சிந்தனை இன்றி பிரம்மமும் இல்லை.

மனிதர்களே இப்போதாவது நம்புங்கள்
கடவுள்   இல்லை என்று
கடவுளே சொல்கின்றார்!
கேளுங்கள்.
"கடவுள் என்று
நீ சங்கல்பம் கொண்டிருந்தால்
கடவுள் வெறும் சங்கல்பம் தானா?
என்று
மீண்டும் ஒரு எதிர் சங்கல்பம் கொள்கிறாய்.
இது விகல்பம.
சரி ..அறிவு தோன்றும் முன் அது அறிவா?
இல்லை அது அறிவின்மையா?
அது போல் தான்
சிந்தனையின் அசைவுகள்
தொடர்கின்றன.
கடவுளுக்கு முன் அது
கடவுளா? கடவுளின்மையா?
சங்கல்பங்களின் சங்கல்பங்கள்
நீங்குவதே
அதாவது நிர்விகல்பமே
மோட்சம் ஆகும்.
இந்த "நிர்விகல்ப சமாதி"எனும்
சவப்பெட்டிக்குள்
என்னை அடைத்து ஆணி அடிப்பதே
மோட்சம் என்று நீ
இப்போதாவது அறிந்து கொண்டாயா?"

கடவுளே பேசும் நாத்திகம் இது.
அறிவின் வெளிச்சத்திற்கு
முற்றும் என்று எழுதி
மூடி ஊற்றுவது "வேதாந்தம்" அல்ல.
வேதம் எனும் அறிவுக்கு
அந்தம் எனும் "முடிவு"
இல்லவே இல்லை.

=================================================




வெள்ளி, 19 ஏப்ரல், 2019

"கபர்தார் " ரஜனியின் அடுத்த படம்.

"கபர்தார் " ரஜனியின் அடுத்த படம்.
==================================================ருத்ரா.

திரை இயக்கசிற்பி
திரு  முருகதாஸ் அவர்களே !
சர்கார்  தர்பார் வரிசையில்
அடுத்து உங்கள் படம்
"கபர் தார்."
அதுவும் ரஜனியை வைத்தே தான்.
கதை ரெடி!
அலைகள் ஓய்ந்தது என்று
இங்கே சிலர்
கொட்டாவி விட்ட நேரத்தில்
"கபர்தார்" ...அதாவது
"எச்சரிக்கை"!
என்கிறார் ரஜனி!
சட்டமன்ற தேர்தலை சந்திப்பேன்
என்கிறார்.
இங்கே சட்டமன்ற இடைத்தேர்தலில்
என்ன நடக்கும் என்று
"பட்சி" ஏதாவது சொல்லியிருக்கிறதா?
தெரியவில்லை.
"கபர்தார்"
படமும் அது தான்.
"பஞ்ச்"டைலாக்கும் அது தான்.
மற்ற படங்கள் மாதிரியெல்லாம்
மயிர் கூச்செறியம் சண்டைகள்
எல்லாம் இருக்காது.
எம்.ஜி.ஆர் மாதிரி
சாட்டையை சொடுக்கி
"நான் ஆணையிட்டால் " என்று
பொருள் படும்படி
"கபர்தார்" என்பார்.
அவ்வளவு தான்
எல்லாம் அங்கே
"கப்சிப்"
வில்லன்கள் தூள் தூளாகிடுவார்கள்.
டிவி மிக்சி எல்லாம் போட்டு
உடைக்கவேண்டாம்.
ஜிகினா வில்லன்கள் சொன்னபடி
கேட்பார்கள்.
ஆனால்
இந்த ஜனநாயக வில்லன்களை
இவரால் என்ன செய்யமுடியும்?
பார்ப்போம்
அந்த "பாபா மந்திரம்"
ஹதம் கதம் போல்
இந்த "கபர்தாரும்"
சூ மந்திரக்காளி போல்
நதிகளையெல்லாம் இணைத்து விடுமா ?
என்று.
அப்போதும்
தமிழ் நாட்டுக்கு மாத்திரம்
ஒரு சொட்டு தண்ணீர் கூட
வரவிடாமல் பார்த்துக்கொள்ள
சில "பெரிய தலைவர்கள்" எல்லாம்
திட்டங்கள் வகுத்துவிடுவார்களே !
என்ன செய்வது?
கபர் தார்!
தமிழர்களே !தமிழர்களே !
எச்சரிக்கை! எச்சரிக்கை!!

===================================================







வியாழன், 18 ஏப்ரல், 2019

கணினிக்காடுகள்

கணினிக்காடுகள்
===================================================ருத்ரா

அந்த கணினிக்காடுகள்
நம் கனவுகளைச்சுருட்டி வைத்திருக்கும்
"ஒரு விரற்"காடுகள்.
அந்த விரல்கள் அங்கே தான்
கிடக்கின்றன.
மை மட்டும் நம்மிடம்.
அந்த இருட்டு "மை"
இன்னும் சில நாட்களில்
நம் வெளிச்சமாக சிறகு விரித்து
வரும் வரை
விரல்கள் மட்டும் இன்றி
நம் உள்ளம் உணர்ச்சி அறிவு எல்லாம்
அங்கே தான் விறைத்துக்கிடக்கும்.
அவர்கள்
வாக்குறுதி தந்தார்களா?
இல்லை
மங்களகரமாய்
கரன்சிகள் எனும் இந்த "இலட்சுமிகளை"த்தந்தார்களா?
என்பதெல்லாம்
இங்கு பொருட்டே இல்லை.
ஆயிரம் சட்டத்திருத்தங்கள் வந்தாலும்
"குபேரன்" எங்கள் வீட்டுக்குள் வந்து
கும்பமேளா நடத்துவதை
தடுப்பதில் என்ன பயன்?
தரித்திர நாராயணனின் தேசம் தானே இது.
ஆனால் இதன் அர்த்தம் இந்துத்வா அல்ல.
அதற்கு அவர்களின் அர்த்தமே வேறு.
சாதாரண உப்பு புளி மிளகாய் வாழ்க்கையில்
ஆன்மா என்றும் அடுத்த பிறவி என்றும்
இன்னும் கர்மா என்றும்
நான்கு வர்ணம் அஞ்சுவர்ணம்
என்றும்
சாதிகளை பீதிகளாக்கி
மதத்தை மரண பீடமாக்கி
ஆட்சி எந்திரத்தை
சுகவாசிகளின் எந்திரமாக்க
மனித நீதியை கசாப்பு செய்யும்
அந்த அனர்த்தங்கள் எங்களுக்குத்  தேவையில்லை.
அது நம்   வாழ்க்கை அல்ல.

"கருமாதி" "ஸ்ரார்த்தம்"மற்றும்
"பிறவிகளே இல்லாத ஆத்மா " என்றும்
"மானிடத்தின் பிறவிச்  சங்கிலியை அறு" என்றும்
இன்னும் வித வித
அச்சங்களை ஆவிகளாக்கி அதையும்
அரசியல் அமைப்புச்சட்டமாக்கி
எதிர்ப்போரை
சிரச்சேதம் கூட செய்யத்தயங்காதது
அல்லவா அவர்கள் சொல்வது.

அதை "ஃபாசிஸம்" என்று
சொன்னால் கூட புரியாமல்
அது என்ன "சாமி " என்றும்
அந்த "குலசாமி"க்கும்
பொங்கல் வைத்து கெடா வெட்ட‌
தயார் என்று
கிளம்பிடும் நிலையில் தானே
நாம் இருக்கிறோம்?

நாளை இந்தக்கணிப்பொறிகள்
நம் தெளிவைக்காட்டுமா?
நம் அசிங்கத்தைக்காட்டுமா?

எத்தனை தடவை தட்டினாலும்
உருவம் விழவே இல்லை என்றும்
எதைத்தட்டினாலும்
அது தான் விழுகிறது என்றும்
காட்சி துவங்கி நீண்ட நேரம் ஆகியும்
தேர்தல் திரைப்படம்
ஓடவே இல்லை என்றும்
ஒரே இருட்டு என்றெல்லாம்
சொல்கிறார்கள்.

கணினி எந்திரம் என்றால் இதெல்லாம்
சகஜமப்பா
என்று ஒரு சாக்கு சொல்பவர்களே.

அது எப்படி எங்கோ ஒரு விண்வெளியில்
குறி பார்த்து
"சர்ஜிகல் ஸ்ட்ரைக்" செய்து
அந்த இலக்கு ஏவுகணையை
தூள் தூள் ஆக்குகிறது
இந்த ஏவுகணை?
அது மட்டும் கணினி.
இது என்ன "கட்டையா?"
இப்படியும் கேட்கத்தானே செய்வார்கள்?

எதைக்காட்டினாலும் சரி
நம் இருட்டை நாமே தின்போம்.
இல்லை
வெளிச்சம் கண்டு
புது யுகம் ஒன்று படைப்போம்.


=====================================================












அந்த‌ வ‌லி

அந்த‌ வ‌லி
===========================================ருத்ரா

"அம்மா!"
வீறிட்ட‌
அந்த வலி
கசக்கிப் போட்ட காகிதத்தில்
வந்த கவிதை நான்.

அந்த துடிப்பில்
ஒரு துண்டாய்
துள்ளி விழுந்தவன் நான்.

அறுபடாத நூல்
எனும்
வம்சத்தை
நூற்றுக்கொள்ள
உன் ரத்த நாளங்களை
அல்லவா
நூற்றுக்கொடுத்தாய்.

இந்த
நூல்க‌ண்டு சிக்க‌லுக்குள்ளும்
க‌ல்க‌ண்டு இனிப்பு.
நான்
உனக்கு.

இந்தப் பிள்ளைக்கனி யமுது
எந்த பாற்கடலைக்கடைந்தும்
கிடைப்பதில்லை.

இந்த உயிர் இனிப்பில்
பிரம்மாக்கள்
பாடம் எடுத்துக்கொள்ள
படையெடுத்து வருகிறார்கள்.

அதோ பார்.
இந்த‌ இனிப்புக்கு
மொய்க்க‌வ‌ரும் எறும்புக‌ள்
யுக‌ம் நீண்ட பாதையில்
ஆயிரம் ஆயிரமாய்..

அவைக‌ளுக்கு
நாங்க‌ள் வைத்த பெய‌ர்
"கட‌வுள்க‌ள்"

=============================================
20.03.2014

திங்கள், 15 ஏப்ரல், 2019

கல்லைக்கண்டால் நாயைக்காணோம் ........

கல்லைக்கண்டால் நாயைக்காணோம் ........
=========================================================ருத்ரா


கல்லும் இல்லை
நாயும் இல்லை இங்கு.
முன்னது பொருள் முதல் வாதம்.
பின்னது கருத்து முதல் வாதம்.
இதைதான்
ஒரு சித்தன் பாடினான்
நட்டக்கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே...
என்று.
நாமும் தான்
அந்த நள்ளிரவு முதல்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
வெள்ளையன் இருந்தான்
கருப்பன் இல்லை..
அதாவது
காலனி ஆதிக்கம் மட்டுமே இருந்தது.
மக்கள் இல்லை.
சாதிகளாய் மதங்களாய்
தெருப்புழுதியாய்
கிடந்தனர்
ஒரு வழியாய் கருப்பன் கையில்
ஓட்டு வந்தது.
எண்ணி முடித்தபின்
எப்படி அந்த
உள் நாட்டு வெள்ளையன் வந்தான்?
கடவுளின் புத்திரன் என்று
அவனே மணியடித்துக்கொண்டான்.
மூவர்ணத்தில்
நான்கு வர்ணம் இருந்தது.
இன்னும் மண்ணின் அடியில்
பஞ்ச(ம) வர்ணம்...
மனிதனின் புத்திரர்கள்
மீண்டும் மண் புழுக்களாய்....
ஆம்..
கல்லைக்கண்டால்
நாயைக்காணோம் ..
"மரத்தில் மறைந்தது மாமத யானை.
"மதத்தில் மறைந்தது மாமத யானை."
பலம்பொருந்திய ஜனநாயக யானை
காகிதச்சீட்டில் மறைந்தது.
கணினிபொறிக்குள் மறைந்தது.

====================================================









ஒரு குழந்தை பிறக்கிறது..

ஒரு குழந்தை பிறக்கிறது..

====================================ருத்ரா இ.பரமசிவன்.





தாய் வயிறு கிழிந்து

இப்போது தான் வந்தேன்.

அவள் மூச்சுகள் எனும்

வைரக்கம்பிகள்

வைத்து நெய்த சன்னல் பார்த்து

கனவுகள் கோர்த்தபின்

அவள் அடிவயிற்றுப்

பொன்னின் நீழிதழ்

அவிழ்ந்த கிழிசலில்

வந்து விட்டேன் வெளியே!



நீல வானம் கண்டு வியப்புகள் இல்லை.

சூரியசெப்புகளும் கொண்டு

விளையாட மனம் வரவில்லை.

வண்ணத்துப்பூச்சிகள்

சிமிட்டும் சிறகில்

வண்ணங்கள் ஏதும் உதிர்ந்திட வில்லை.

பூக்கள் எனக்கு

புன்னகை சொல்ல

வந்தன என்றார்.

புன்னகைக்குள் ஒரு

இருண்ட நீள் குகை

எப்படி வந்தது?

மான் குட்டிகள் மந்தை மந்தையாய்

மனதை அள்ளும் என்றார்.

மண்பொம்மைகளாய் அவை

யாவும் கரைந்து மறைந்தே போயின.

அடி வான விளிம்போரம்

தொடு வான இதழோரம்

சன்னமாய் ஒரு கேவல் ஒலியின்

கீற்று என்னை அறுப்பது

உணர்ந்தேன்.

என் தாயின் இதயச்சுவர்களில்

பாயும் குருதியில்

வலியின் குதிரைகள்

விறைத்து எகிறும்

காட்சிகள் கண்டேன்.

அழகாய் பூத்த அவள்

தாமரைச்சிரிப்பிலும்

மறைந்த ஓர் மெல்லிழை

கோடி கோடி உலகங்களின்

கனங்கொண்ட சோகமாய்

அழுகையின் லாவா

அடங்கித்தேய்ந்து

அவள் கருப்பைக்குள்ளேயே

கருங்கடலாய் உறைவது உணர்ந்தேன்.

பிரம்ம வாசலில்

பெண் ஒரு கேவலம்!

அவள் கதவு திறந்து

வெளிச்சம் காட்டும் உயிரொளி கூட‌

கேவலம் கேவலம்.

முக்தியும் நாசம் அதன்

பக்தியும் நாசம்

என்றொரு

மூளிக்குரல் மூள எரியும்

பிணத்தீ மூட்டிய‌

வேள்விகள் கொண்டா..ஞானக்

கேள்விகள் வளர்த்தீர்!

வெற்றுச்சுவடிகள் எரியட்டும்!

பெண்மை எனும் தாய்மையின்

தங்கமுலாம் பூசிக்கொண்டு தான்

இனி நான் பிறப்பேன்.

மானிட நேய ஊற்றாய் தான்

வருவேன்.

அப்படி நான் பிறக்கும்போது

என் விடியல் அங்கு பூக்கட்டும்!

அப்போதே நான் ஒரு பூம்புயலாய்

புறப்பட்டு வருவேன்

புதிய தோர் காலம் படைத்திடுவேன்.



==========================================
மீள்பதிவு.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வைர ஊசி

வைர ஊசி
======================================ருத்ரா

வைக்கோல் படப்பில்
வைர ஊசி ஒன்று
விழுந்ததாய்
ஒரு நாள் நள்ளிரவில்
கொடியேற்றிச்சொன்னார்கள்.
அப்போது முதல்
தேடும் படலம் தான்.
வைக்கோல் படப்பை
கலைத்து கலைத்து தேடினோம்.
மீண்டும் கட்டிவைத்தோம்.
மீண்டும் கலைத்தோம்.
மீண்டும் மீண்டும்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
தேடும்போது
கிடைத்தவை இவை தான்.
கட்சிகள்.
சித்தாந்தங்கள்.
ஊழல்கள்.
எரிந்து போன மனிதத்தின்
மிச்சங்களாய்
சாதி மதங்கள்.
வெள்ளை வெள்ளையாய்
பூணூல் போட்டுக்கொண்டு
அவதாரங்கள்.
சிங்க முக மனித வடிவில்
அதர்மத்தின் குடல் கிழிப்பதாய்
நடந்த புராணக்காட்சியிலும்
அந்த சிங்கத்தலை மனித மார்பிலும்
குறுக்காய் ஒரு பூணூல்.
இந்த கும்பமேளாக்கும்பல்களின்
கால் தடங்களிலும்
காணவில்லை
அந்த வைர‌ ஊசியை.

============================================

பல்வரி நறைக்காய்





பல்வரி நறைக்காய்
=============================================



தலவியின் பிரிவாற்றாமைத் துன்பம் கண்டு
தலைவன் மீண்டு தோழி வருமாறு பாடியதை
நான் சங்கநடைச்செய்யுட்கவிதையாய் இங்கே
எழுதியிருக்கிறேன்



பல்வரி நறைக்காய்
=============================================ருத்ரா இ.பரமசிவன்

பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம்
மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல்
களித்து ஆர்த்த கழிநெடு கங்குல்
மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை.
என்னென் கழறும் என்னறியும் தடம் கொல்.
இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும்
வெம்புலியன்ன ஊண் மறுக்கும்
கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும்
எனவாங்கு
தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌
நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ.
நன்மா தொன்மா நனிமா இலங்கை
நல்லியக்கோடன் யாழிய இசையின்
நலம் கெட செய்தனை எற்று எற்று
இவள் உள் உள் முரலும் இன்சிறைத்தும்பி
உயிர்விடும் காட்சி ஒக்குமோ ஓராய்.
இலஞ்சிக் கண்கள் ஈரம் சுரப்ப‌
சிறு புள்ளும் பெருகக்களிக்கும்
சீறிலைச் சிறு கான் வளைக்கும் குன்ற!
கடுகொள் மரப்பு நீங்கியே மீள்வாய்.
இருசீர்ப் பாணி கனைகுரல் விரிப்ப‌
படுமணி நடுங்க கதழ்பரி கலிமா
நெடுந்தேர் விரைபு ஆறு கடந்து ஏகி
மெல்லுடல் நைந்த‌ பீலிஇறையவள்
பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே.

================================================


விளக்கவுரை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________

"வரிகள் மிக்க நறுமணக்காய் (சாதிக்காய்) தின்றாய் போலிருக்கிறது.அதனால் உன் தொண்டைவழியே வரும் அச்சொற்கள் இனிமையாய் இருந்தன.அந்த சொற்கூட்டங்களோடு நாம்  இருவரும் படுத்து  களித்த நீண்ட இரவுகள் மறந்தாயோ?மீண்டும் மீண்டும் நீ வராது நின்றதேன்?எதை நான் சொல்ல? இதன் காரணத்தின் வழி எனக்கு விளங்க வில்லையே!கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே.அது போல்மன உறுதி கொண்டவள் நான்.உண்ணப்போவதில்லை.காற்று உண்டு கூட  வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்"
என்று தலைவி கூறிக்கொண்டே போக தோழியும் சொல்லலுற்றாள்.

பல்துளைவழியே (நஞ்சு பாய்ச்சும்) பாம்பு கடித்தது போல் வலியுற்று துடிக்கிறாளோ? நல்ல பெரிய மற்றும் தொன்மை மிக்க பெரிய அந்த‌
இலங்கை (இப்போதைய திண்டிவனம்) நாட்டு "ந‌ல்லியக்கோடன்" யாழ் கொண்டு இசைத்து எல்லோரையும் மகிழ்விக்கும் அந்த நல்ல இயல்பை கெடுக்க வந்தவன் போல் இப்படி வராமல் இவளுக்கு துன்பம் செய்வது ஏன்? ஏன்? இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள் கொண்ட தும்பி போன்றது.அந்த இதயம் நின்று உயிர் நீங்கும் காட்சி காண சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்! அங்கங்கே காணும் இடங்கள் எல்லாம் சுனைகள் மிகுந்து (இலஞ்சிக்கண்கள்) நீர் வழிய சின்ன சின்னப்பறவைகள் கூட அதில் நனைந்து பெரு மகிழ்ச்சி கொள்ள சிற்றிலை மரங்களின் காடுகள் சூழும் குன்று நாட்டவனே! ஏதோ கடுமையான மறதி எனும் நச்சால் மரப்பு நோய் உற்றவனே!தெளிந்து எழுவாய்.உன் நெடுந்தேர் மணியின் நடுங்கும் ஒலி "கணீர் கணீர்"என்று இரட்டை தாள அலைவுகளோடு (இரு சீர்ப்பாணி கனைகுரல் விரிப்ப) வர பல வழிகள் கடந்து இங்கு வருவாயாக.இந்த மெல்லிய உடலாள் முன்கையில் இன்னும் மெல்லிதாய் "மயிற்பீலியின் வளையல்கள்"கூட பிணியுற்றது. ("பீலி இறையவள் பிணி").
அந்நோய் நீக்க விரைந்து நீ வருவாய்.


=============================================ருத்ரா இ.பரமசிவன்
31.01.2016


சனி, 13 ஏப்ரல், 2019

சச்சிதானந்தம்

சச்சிதானந்தம்
============================================ருத்ரா

மனிதா!
நீ பிறக்காதே
பிறந்தால்
நீ இறக்கவேண்டும்.
பிறவிகளை
களைந்து விட்டால்
இறவிகளையும்
களைந்து விடலாம்.

துன்பம் ஏது?
இன்பம் ஏது?

சரி சாமி!

துன்பமும் இன்பமும்
அற்ற அந்த
மூளி நிலையை
தாங்கி
இந்த உலகில்
உலவும்
அல்லது
தங்கும்
நிலை எது?

அது தான்
சச்சிதானந்த நிலை.

இந்த சத் சித் ஆனந்தம்
என்று முக்கூடல்
எங்கே இருக்கும்?
எதில் இருக்கும்?

அது தான் ஆத்மா.
அது தான் ப்ரம்மா.

ஒண்ணும் புரியலையே சாமி.
பிறவிண்ணு
ஒண்ணு இருந்தா தானே
இந்த ஆனந்தம்
இந்த அறிவு
இந்த உண்மை
எல்லாம் இருக்கும்.

உடல் அற்ற‌
உயிர் அற்ற‌
நிலையில்
அறிவு இல்லை.
ஆனந்தம் இல்லை.
உண்மை இல்லை.

எனவே
சச்சிதானந்தமே இல்லையே
அப்புறம்
ஆத்மா ஏது?
பிரம்மம் ஏது?

என்ன சாமி!
ஆத்திகம்
சொல்ல வந்து விட்டு
இல்லை
இல்லை
இல்லை
என்று
நாத்திகம் சொல்லுகிறீர்களே.

"அறிவு சொல்கிறது.
துகள் எனும் பிண்டம்
இன்னொரு பிண்டத்தை
கவர்ந்து
உள்ளே உறிஞ்சிக்க்கொள்கிறது.
கடந்து உள்ளே
செல்வது விசை.

விசையின் விசையாக‌
உயிர் தோன்றுகிறது.
அது உடல் உருவாக்குகிறது.
அதனுள்
மூளை தோன்றுகிறது.
அதன் விசையின்
கதிர்வீச்சில் தான்
கடவுளே பிறக்கிறார்.
ஒட்டு மொத்த
விசைப்பொட்டலமாக இருக்கும்
மனிதனால்
கடவுள் பிறக்கிறார்.
ஆனால் இந்த கடவுள்
மனிதனை மறுக்கிறார்.
இயற்கை ஓட்டமே
மனிதன்.
இதன் அலைகளே
இன்ப துன்பங்கள்.
நன்மை தீமைகள்.
இவையே
மனிதனை அழித்துவிடும்
என்ற‌
அச்சம் இங்கே
கடவுள் எனும் விதையாக‌
தூவப்படுகிறது.
உயிர் அற்ற பிண்டமும் விசையுமே
உயிர் உள்ள பிண்டங்களை
தோற்றுவிக்கிறது.
இதன் விளைவுகளில்
உணர்வும் ஒரு விசை.
அதில்
அச்சம் என்ற உணர்வு
அது எல்லாவற்றையும் அழிக்கும்
முனைப்போடு
மனிதனுள் புகுந்து
மனிதனையே அழித்து
இந்த பிரபஞ்சத்தில்
உயிர் வாடையே இல்லாமல்
செய்ய
ஒரு வைரஸ் போல் இயங்குகிறது.
பூமியைத்தவிர‌
இந்த மனித உயிருக்கு
உற்ற தோழனாக
இன்னொரு மனிதன்
இந்த பிரபஞ்சத்தில்
இருக்கிறானா என்ற கேள்வியையே
அறிவாக்கி
ஆயுதமாக்கி
மனிதம் மேலும் மேலும்
ஒரு புதிய பரிணாமம் நோக்கி
வளர்கிறது.
பிரபஞ்சம் எனும் அந்த பிரம்மாவையே
ஒரு பொமரேனியன் ஆக்கி
அதை தன் அறிவு சங்கிலியில் கட்டி
உலா வரத்துடிக்கும்
மனிதத்தின் உள் விசையில்..
அந்த சங்கிலிக்குள் இன்னொரு சங்கிலியாக‌
இருக்கும் டி என் ஏ, ஆர் ஏன் ஏ எனும்
உயிர்விசையையும் இழைவித்து
அறிவு பெருவெள்ளமாய் பாய்கிறது.
இதை அழிப்பதே அச்சம்.
அச்சம் என்பதே மதம்.
மதம் என்பதே கடவுள்.
மனிதன் மனிதனையே
அழித்துக்கொள்ள‌
மனிதம் "தற்கொலை" செய்து கொள்ள‌
மனிதனில் தோன்றிய‌
வைரஸே கடவுள்."

சச்சிதானந்தம் என்று
உச்சரித்த சாமி
ஓடியே போய்விட்டார்.

=====================================================


ஓடிக்கொண்டிருக்கிறேன்.

ஓடிக்கொண்டிருக்கிறேன்.
=======================================ருத்ரா



அந்த ஜன்னல் வழியே

கண்களை துருவவிட்டேன்.

அந்த இரும்புக்கம்பிகள்

கரும்புக்கம்பிகளாய் இனித்தன‌

வயது பதினாறில்.

இன்றும்

அப்படித்தான்

பார்வைகளின் நாக்குகள்

கம்பிகளை வளைத்து

நக்கிக்கொண்டிருந்தன.

அன்று அந்த விநாடிப்பிஞ்சில்

கண்ணின் பார்வையில்

அவள்

ஒரு அரை சதவீதத்தைக்கூட‌

என் மீது வீசவில்லையே.

அந்த மின்னல் கயிறு அன்றோடு

அறுந்தே போனது.

அப்புறம் நான்

சமஸ்கிருதத்தில்

மாங்கல்யம் தந்துநானே என்று சொல்லி

ஆண்டுகளின் அச்சு எந்திரத்தில்

நசுங்கிய கரப்பான் பூச்சியாய்

அச்சிடப்பட்டு விட்டேன்.

ஆம்.அது என் திருமணம்.

இந்த கேடு கெட்ட அந்துப்பூச்சிக்கும்

அழகாய் அமைந்தாள் ஒருத்தி

ஒரு குடும்ப விளக்காய்.

என் குடும்பம் ..என் மக்கள் என்று

என் தேசம் விரிவடைந்தது.

அந்த அன்புப் பிரவாகத்தில்

திணறிபோய் விட்டேன்.



அந்த சன்னல் பக்கம்

என்னவோ

ஒரு இரும்புத்திரை

விழுந்து விட்டது.



நரைவனம் புகுந்தும்

சன்னல் கம்பிகளில்

அந்த நிழற்சுவடுகள்

ஊமைத்தனமாய் "ஷாக்"அடித்தன.

என்றோ ஒரு நாள்

அந்த மூளிமேகங்களிடையே

மூண்டு எரிந்த

இனிப்புச்சுவாலை

இன்னும் மூட்டிக்கொண்டிருக்கிறது

சிதைத்தீயை.

காதலுக்கு இறப்பு நேர்ந்ததும்

அதற்கும் வாழ்க்கை கொண்டு

வரட்டிகள் அடுக்கத்தானே வேண்டும்.

இருப்பினும்

வாழ்க்கைக்கு வசந்தம் காட்டும்

தூங்குமூஞ்சி மரங்களின்

அந்த பஞ்சுமிட்டாய்ப்பூக்களின்

மென் சாமரங்களைக்கொண்டு

நான் காற்று வாங்கிக்கொள்ளப்

பழகிக்கொண்டேன்.

பூ புல் புள் வானம் என்று

வெறுமையின் கரைசலில்

காணாமல் போய்விட்டேன்.



வயதுகள்

என் இடுப்பில் முட்சங்கிலி கட்டி

இழுத்துக்கொண்டு ஓடுகிறது.

எங்கோ ஒரு கணத்தில்

விழுந்துவிட்ட அந்த முற்றுப்புள்ளியை

மைல்கணக்கில் நீட்டி

பொற்சங்கிலியாய் தட்டி தட்டி

தடம் பதித்து

ஓடிக்கொண்டிருக்கிறேன்.


==============================================================

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

குரல்கள்





குரல்கள்
========================================ருத்ரா

இந்த தென்னை மரங்கள்
என்ன சொல்கின்றன ?
தாகம் என்று துடித்தீர்களே
மண்ணுக்குள்ளிருந்து
வந்த லாவா
என்று
கோப்பையை நீட்டியது.
என்
வேர்த்தூவிகளில் கூட
தமிழனின் ரத்தம் தான்.
அடியில்
புழுக்களால் தின்னப்படமுடியாத
அந்த எலும்பு மஜ்ஜைகளுக்குள்ளும்
தமிழ் எழுத்துக்கள்
இன்னும்
சூரியனைத்தான்
பிழிந்து குடித்துக்கொண்டிருக்கின்றன.
இந்த பச்சைக்கீற்றுகளின் குரல்கள்
உங்களுக்கு கேட்கவில்லையா ?
அவற்றின் சிவப்பு வானக்கீறல்கள்
இந்த இருட்டைக்கிழிக்கும் வரை
தமிழின் இந்த
குரல்களே எங்கள் தாகங்கள்.

============================================
18.05.2015


"இன்று போய் நாளை வா"

"இன்று போய் நாளை வா"
=========================================ருத்ரா.


ராமன் கோதண்டத்தை
கையில் எடுத்து விட்டான்.
அவனுக்கு
கோபம் கொப்பளித்து விட்டது?

"இன்று போய் நாளை வா
என்று
நான் சொல்ல வேண்டியதை
அவன் சொல்லிவிட்டானே."

"பிரபு என்ன சொல்கிறீர்கள்?"

"இன்னும்
என்ன சொல்லவேண்டியிருக்கிறது?"

"மகாப்பிரம்மமே!
சொல்வது விளங்கவில்லையே "

"பக்கத்து நாட்டு ராவணன் சொல்லிவிட்டானே
இன்று போய் நாளையும்
நீயே வா என்று "

இப்போது தான் ராம பக்தர்களுக்கு  புரிந்தது.

பல்லைக்கடித்துக்கொண்டார்கள்.
மூக்கைத்தடவி கொண்டார்கள்.

அதெல்லாம் தேசவிரோதிகளின் சதி  பிரபோ!

எது சதி?
நம் நாட்டு ஹெச் ஏ  எல்  தயாரிக்கும்
புஷ்பக விமானங்களே போதும்.
அதை விட்டு அயல் நாட்டு விமானங்களுக்கு
ஒப்பந்தம் போட்டீர்களே
அது சதியில்லையா?

என்ன இது?
யார் அங்கே?
இவன்  ராமன்  தானா?
இல்லை
வேடம்போட்ட எதிர்க்கட்சிக்காரனா?
..........
"என் ராமின்" ராமனா?

என்னது ..உங்கள் ராமனா?

"புரிய வில்லை என்றால்
போய் பஜனை பண்ணுங்கள்."

"எந்த ராமன்?
தெரியவில்லையே !"


"தெரியும் வரை
பிடித்துப்போடுங்கள் சிறையில்."

"ராமனின் தத்துவம் புரியாத
இந்த மூளிக்கூட்டத்தை
வைத்துக்கொண்டு என்ன செய்வது?"

ராமனின் நெற்றியில் கூட
சுருக்கங்கள் தெரிந்தன.

"உலகத்திலேயே விலை உயர்ந்த
சலவைக்கற்கள் கொண்டு
ராமனுக்கு
கோயில் அல்லவா
கட்டிக்கொண்டிருக்கிறோம்."

ஒரு பக்தர் நெக்குருகினார்.

"அதற்கென்ன?
மக்களுக்கு காட்டவேண்டியது
ராமர் கோயில் தான்.
ராமர் அல்ல!"

இதைக்கேட்ட
அந்த சலவைக்கல்
ராமர் சிலைக்கு ரத்தம் கொதித்தது.
சிலை இன்னும் நிறுத்தப்படவில்லை.
அதற்குள் ராமன் மீதே பாணமா?

"நீங்கள் என்ன
எனக்கு கோயில் கட்டுவது ?"

ராமர் விஸ்வரூபம்  எடுத்தார்.
ஐந்தரை  கோடி ஒளியாண்டு
உயரத்துக்கு.

நாஸா  காரன் அங்கே பார்த்த
"மெஸ்ஸியர் 87 காலக்ஸி"யின்
"கருந்துளையில்"
அவருக்கு "கற்பூரம்" காட்டினான்.

ஆத்திகத்தின் உயரம் போக போக
அது நாத்திகம் தானே.

ராமரும் சிரித்தார்
நாஸா கண்ட
கருந்துளையும் சிரித்தது.

கீழே சனாதனிகள்
பல்லை நற நறத்தனர்.


==========================================================

Main event: the image of the black hole at the 









https://physicsworld.com/a/first-images-of-a-black-hole-unveiled-by-astronomers-in-landmark-discovery/

===================================================================
மேற்கண்ட லிங்க் மற்றும் புகைப்படத்துக்கு நன்றி !





வியாழன், 11 ஏப்ரல், 2019

ரஜனியின் "தர்பார்"

ரஜனியின் "தர்பார்"

=======================================ருத்ரா



ரஜனியின் இந்தப்படத்திற்கு

"தர்பார்" என்று

பெயர் வைத்திருப்பதை விட

"காவல் காரன்"அல்லது "காவலன்" என்று

பெயர் வைத்திருக்கலாம்.

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு

எம்.ஜி.ஆர் என்று

பெயர் வைத்த கையோடு

ரூம் போடாமலேயே

அந்த விமான இருக்கைகளிலிருந்தே

யோசித்திருப்பார் போலிருக்கிறது

நமது "மோடிஜி".

பிறகு டெல்லி போனவுடன்

எம் ஜி ஆர் படங்களையெல்லாம்

ஒரு ஓட்டு ஓட்டச்சொல்லி

ஓட்டுக்கு அதில் ஏதாவது கிடைக்குமா

என்று

பார்த்திருப்பார் போலும்.



"அட ங்கொப்புராண சாத்தியமா

நான் காவல்காரன்..."

என்ற பாட்டு பிடித்துப்போய்

இப்போது "சவுக்கிதார்" என்று

இந்தியாவின் மூலை முடுக்கிலெல்லாம்

அந்த எம் ஜி ஆர் பாட்டுக்கு

டான்ஸ் ஆடாத குறை தான்.

ரஜனி அவர்களே

பார்த்தீர்களா

உங்கள் மானசீகத்தலைவரின்

நிழல் விசுவரூபத்தை!

எம் ஜி ஆர் அவர்கள்

படத்தில்

தன் மனைவியின் மணி வயிற்றிலிருந்து

"குவா குவா" சத்தம் கேட்கவேண்டும் என்று

கண்ணும் கருத்துமாய்

காவல் காத்தார்.

இவரோ "கார்ப்பரேட்டுகளின்"

அசுர குஞ்சுகளை இடும்

அந்த மூலதன முட்டைகளை அல்லவா

அடைகாத்துக்கொண்டிருக்கிறார்.

நீங்களும்

அவரைப்போல

ஒரு "லாட்டி சுழற்றும்" கான்ஸ்டபிளாகத்தான்

களம் இறங்கப்போகிறீர்கள் போலிருக்கிறது.

இருப்பினும்

சினிமாவின் கச்சாபிலிம் கதைக்களத்தில்

உங்கள் வில்லன்களின்

ஜிகினாக்கோட்டைகளையெல்லாம்

தவிடு பொடி ஆக்குவதில்

அந்த வீரமும் நுட்பமும் செறிந்த‌

பாத்திரத்தை அப்படியே முழுதாக‌

சிந்தாமல் சிதறாமல் ....ஆனால்

அந்த செல்லுலோஸ் அதர்மத்தை அநீதியை

அடித்து நொறுக்குவதில்

நம்பர் ஒண்ணாக இந்த உலகம் எல்லாம்

வலம் வருவீர்கள் என்பதற்கு

எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

இந்த பாரதமண்ணின் குருக்ஷேத்திரத்தில்

இன்னும்

எத்தனை நாளைக்குத்தான்

இந்த சகுனிகளின் கைப்பகடைகளாக‌

உருட்டப்படப்போகிறீர்கள் என்பதே

எங்கள் கவலை.

உங்கள் படப்பிடிப்புகளில்

அந்த காமிராக்களில்

எங்கள் மனங்களே அதிகம்

"பிடிக்கப்"படுகின்றன.

இந்தியாவின் மண்ணுக்குள் வேர்பிடித்த‌

அந்த மானிடம்

எந்த மதங்களாலும் பீடிக்கப்படும்

நோய்களிலிருந்து

விடுதலை பெறும் தாகத்தில் தான்

இங்கே தழல் வீசுகிறது.

அந்த மானிடம் வெற்றி பெற‌

உங்கள் "தர்பார்"

செங்கோல் ஏந்தட்டும்.

வாழ்த்துக்கள்!


===============================================================


.




நான் ஒரு பிராமணன்?

நான் ஒரு பிராமணன்?
=========================================ருத்ரா

ஆம்.
நானும் ஒரு பிராமணன் தான்.
உச்சிக்குடுமி வைத்திருக்கவில்லை.
பஞ்சக்கச்சம் உடுத்த வில்லை.
பூணூல் போடவில்லை.
கோத்திரம் இல்லாத ஒரு கோத்திரம்
எனக்கு உண்டு.
கோவில்களில்
யாகம் நடத்தி
அதி ருத்ர ஹோமங்களுக்காக‌
ஸ்ரீ ருத்ரம் சமகம் சொல்லி
பூர்ண ஆகுதிக்கு
அந்த நீண்ட மர அகப்பையில்
எல்லாவற்றையும்
பொசுக்கப்போகிறேன் என்று
அடையாளமாய்
சில தானியங்களையும்
தனங்களையும்
தீயின் நாக்குகளுக்கு
கொடுக்க வில்லை தான்.
ஆனாலும் நான் பிராமணன் தான்.
பண்ணிக்குட்டிகளை மேய்ப்பவன் நான்.
பிணங்களைச் சுடுகிறவன் நான்.
ஆனாலும் நானும் ஒரு பிராமணன் தான்.
மும்மலங்களை கழுவுவதற்கு முன்
நான்காவது ஐந்தாவது ஆறாவது...
இன்னும் இன்னும்
மலங்களை அள்ளி சுத்தப்படுத்துபவன் நான்.
ஆனாலும் நானும் பிராமணன் தான்.

பிராமணத்துவம் என்பது
எல்லா உயிர்களிடமும்
எல்லா கல் மண் கட்டைகளிடமும்
தன் பிராணத்தைக் கரைத்து ஊற்றி
பிரமன் எனும் அந்த சூன்யனையும்
துரத்திப்பிடித்து
அவன் வாய்க்குள்ளும்
உன் பிராணனச்செலுத்தி
அவனை நீயாகவும்
உன்னை அவனாகவும் உணர்வது.
சமம் ஆதி எனும்
சமாதியை
கல் மண் புழு பூச்சி மனுஷன்
ஆகிய எல்லாவற்றுள்ளும் (ஆதி)
சமம் அடைவதே ஆகும்.
இதை அடைந்த பிராமணன்
ஒருவர் கூட இல்லை.
ஏன்?
பூமியில் அவதரிக்கும் பிரமன் கூட‌
இந்த சமாதியை அடைய இயலாது.
ஏனெனில்
அவன் தானே இந்த சமாதி.
சமாதிக்குள் சமாதியை தேடுவது
விதர்க்கம் ஆகும் குதர்க்கம் ஆகும்.
ஆம் முரண்பாடுகளை
சூத்திரபடுத்தியிருக்கிறார்கள்
நமக்கு முன் வந்தவர்கள்.
ஒவ்வொரு தீக்குச்சியாய் கொளுத்துகிறார்கள்.
எரிந்ததும் அணைந்து விடுகிற‌
அந்த மின்மினிபூச்சிகளை
பிடித்துப்பார்ப்போமா?

அதஹ யோகாநுசாசனம்.

யோகம் சித்த விருத்தி நிரோதஹ‌

ததா த்ரஷ்டும் ஸ்வரூபே அவஸ்தானம்

விருத்தி ஸாரூப்ய மிதரத்ர

விருத்தயம் பஞ்சதயம க்லிஷ்டா(அ)க்லிஷ்டா

ப்ராமண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌

ப்ரத்யக்ஷானு மானாகமா ப்ரமாணானி

விபர்யயோ மித்யாக்ஞானமதத் ரூபப்ரதிஷ்டம்

சப்தக்ஞானானுபாதீ வஸ்து சூன்யோ விகல்ப‌

அபாவ ப்ரத்யயாலம்பனா விருத்தி நித்ரா

அனா பூதவிஷயா(அ) ஸம்ப்ரோமோஷஹ ஸ்ம்ருதி

யோகம் என்றால்
சித்த விருத்தி நிரோதம் என்றும்
அந்த விருத்தி அஞ்சு வகைப்படும் என்றும்
அவை
ப்ராமண வ்பர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய‌
என்றும்
அவற்றின் முகங்கள்  இவை என்றும்
அடுக்குகிறார்
இவை அந்த பொருளில்லாத பொருளுக்கு
பொய்மெய்ப்பொருளின்
அல்லது
"ஏதோ ஒன்றான பொருண்மை"யின்
(அப்சொல்யூடிஸம்)
முகமூடிகளை
ஒவ்வொன்றாய் கழற்றி எறிகிறார் பதஞ்சலி!
சமாதி...சாதனா...விபூதி...கைவல்யம்

சாதனா என்பது
சமாதி அடைவதற்கான வினைப்பாடுகள்.
விபூதி என்பது
முன்சொன்னவற்றின் பலன்கள் எனும் சித்திகள்
கைவல்யம் என்பதே விடுதலை.
எதிலிருந்து எதன் விடுதலை?
புருஷத்தை பற்றியிருக்கும் ப்ரகிருதியிலிருந்து
புருஷமே விடுதலை.
இதுவே "அப்சொல்யூட்"முனையம்.
சூத்திரங்கள் புரிந்தனவா?

இதைப்பாருங்கள்
இதுவும் ஒரு சூத்திரமே!


"எஸ்
இஸ் ஈக்குவல் டு ஹெச் க்ராஸ்
டிவைடெட் பை
2 எம் ஐ
மல்டிப்லைடு பை ஹோல் இன் ப்ரேக்கெட்
ப்சை டு தி பவர் ஆஃப் ஸ்டார்
இண்டு
இன்வெர்டெட் ட்ரையாங்கிள்
ப்ஸை மைனஸ்
ப்ஸை இன்வெர்டெட் ட்ரையாங்கிள்
ப்ஸை டு தி பவர் ஆஃப் ஸ்டார்"

இது உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

இது "ஹெய்ஸன்பர்க் அன்செர்டன்டி ப்ரின்சிபிள்"படி
எஸ் எனும் ப்ராபலிடி ஸ்ட்ரீம் டென்சிடிக்கு
குவாண்டம் மெகானிக்ஸ் கொடுக்கும் சூத்திரம்.

இந்த சூத்திரங்கள் எல்லாம்
சூத்திரன்களுக்கு புரியும்போது
எந்த சூத்திரமும் எல்லா சூத்திரன்களுக்கும்
புரிந்து விடுமே
எனவே பதஞ்சலியையும்
இப்படி பல்லைப்பிடித்துப் பார்த்தால்
ஒன்றும் குடிமுழுகிப்போவதில்லை.

இருந்தாலும்
பதஞ்சலி மன ஆகாயத்தையே
அக்கு வேறு ஆணி வேறு
பிரித்துப்போட்டிருக்கிறார்.
மனத்தையே பூராவும் தோண்டியெடுத்து
அந்த புழுக்கூட்டில்
ஒரு மின்னல் பிழம்பை ஊற்றுகிறார்.

சமாதி என்று விறைத்த கட்டையாய்
பார்த்தபின்
பிராமணன் பிராமணன் அல்லாதவன்
என்பதும்
விறைத்துப்போன உறைந்து போன‌
தத்துவ சாரமே.

உள்ளத்தூய்மை
பல்லுயிர் நேயம்
பிரபஞ்ச நேயம் எனும்
ஹொலோகிராஃபிக் காஸ்மாலஜியை
பிரியமாக அணுகுவது
இவை மட்டும் போதும்.
மற்ற அடையாளங்கள் தேவையில்லை.
இனி வரிசையை தலைகீழாகவும்
நாம் வைத்துக்கொள்ளலாம்.
முதலில் சூத்திரன்.
அவன் தானே தன் வியர்வையால்
எல்லாவற்றையும் படைக்கிறான்.
அப்புறம் தலைகீழாய் மற்ற வர்ணங்கள்.
அடியில் நசுங்கிக்கிடப்பதே
பிராமணன்.

இந்த அடையாளங்களை
பிடுங்கியெறியுங்கள்.
நான் பிராமணன் அல்லது
நான் பிராமணன் இல்லை
என்பதெல்லாம் ஒன்றே தான்.
மனிதன் எனும்
ஒரே வர்ணம் தான் இனி.
வர்ணப்புருசுகள் கொண்டு வரவேண்டாம்.
ஆம்.
சமஸ்கிருதமும் வேண்டாம்.
அதன் மதமும் வேண்டாம்.



============================================================

புதன், 10 ஏப்ரல், 2019

கேள்விகள் நட்பை முறிக்கும்...ரஜனி

கேள்விகள் நட்பை முறிக்கும்...ரஜனி
====================================================ருத்ரா


கடன் அன்பை முறிக்கும்
என்று டீக்கடைகளில் எழுதி
மாட்டியிருப்பார்கள்.
அன்பு முறியும்போது
கைகலப்பு ஏற்பட்டு அது
எலும்பை முறித்துவிடும்.
இதை அழகாய் வள்ளுவத்தமிழில்
கடன் "என்பை" முறிக்கும்
என்றும் எழுதி மாட்டியிருப்பார்கள்.

சினிமா நட்பு வேறு.
அரசியலின்
சித்தாந்த நட்பு வேறு.
மோடிக்கட்சியின்
தேர்தல் அறிக்கையில் உள்ள‌
நதி நீர் இணைப்பை
இரையாக்கி
ரஜனி தனக்கே
தூண்டில் வீசிக்கொண்டு
அவர்கள் மீன் கூடையில்
போய் விழுந்து கொண்டார்.
நமக்கு ஒரு "விண்மீன்" அல்லவா
கிடைத்திருக்கிறாது
என்று
சங்க பரிவாரம்
மகிழ்ச்சி ஆரவாரம்
செய்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்
கமலுக்கு ஆதரவு உண்டா?
என்ற‌
செய்தியாளர்களின் கேள்வி
ரஜனிக்கு  மேற்படி
டீக்கடை போர்டு மாதிரிதானே.
டீக்கடை அரசியலுக்குள்ளிருந்து
இந்த தேசத்து "லகானையே"
பிடிக்க முடிந்த பெருந்தலவர்..
நீட்டிய‌
அந்த "சங்கல்ப்ப பத்ர " என்பது
ஆங்கிலத்தில்
ஒரு சர்ரண்டர் பத்ர என்று
இவர் காதில் விழுந்திருக்கலாம்.

இந்தக்கேள்வி
கேட்கப்படாமல் இருந்தால் தான்
கமலும் ரஜனியும்
அப்படி சினிமாத்தனமாய்
கை குலுக்கிச் சிரித்துக்கொண்டே
இருக்கமுடியும்.
அந்த நட்பின் பூங்கொத்தை
பிய்த்து விடாதீர்கள்
என் அன்பான பத்திரிகையாளர்களே
என்று
அன்று அப்போது அப்படி
சூப்பர் ஸ்டார் நழுவியதே
சூப்பரிலும் சூப்பரான
"ஆக் ஷன் த்ரில்லர்"

=====================================================



அழிவுக்கு மற்றொரு பெயர் ஆன்மீகமா?









அழிவுக்கு மற்றொரு பெயர் ஆன்மீகமா?
===========================================================ருத்ரா


இந்த தலைப்பை படித்தபின்
உண்மையான‌
ஆன்மீகவாதிகளுக்கு
ஒரு பொறி தட்டும்.
உடலிலிருந்து
உயிரிலிருந்து
அதன் உணர்வுகளிலிருந்து
உணர்வுகள் அறியும்
அதன் உறுப்புகளிலிருந்து
ஏன்
ஜனன மரண நிழல்களிலிருந்து கூட‌
எல்லாவற்றைறையும்
அழித்துவிட்டு
நில்
அறி
உணர்
....
அதுவே ஆன்மா.
நான் யார் என்று
எல்லாத்தோலையும்
உரித்துவிட்டு
"நான்" என்பதற்கு
இலக்கணக்குறிப்பை
மட்டும் பார்.
அது "தன்மை" ஆகும்.
தன்மையை
வடமொழியில் ஆத்மா என்கின்றனர்.
இந்த உலகின்
ஒட்டுமொத்த ஆத்மா என்பது
இந்த உலகமே நான் எனும்
ஒரு பேருர்ணவு.
இதுவே இந்த உலகத்தை
இன்று வரை இயக்கிக்கொண்டிருக்கிறது.
அந்த ஆத்மா மறைந்து போதல்தான்
"மோட்சம்" என்று
இந்து மதம் கொண்டாடுகிறது.
மறு பிறவி கிடையாது!
இனி மனிதப்பிறவியே கூடாது!
பிறவிச்சங்கிலி அறுக்கப்பட வேண்டும்.
என்று
மொத்தமாய் ஒரு "பெரிய சங்கு"
ஊதுவதே "மோட்சம்" ஆகும்.
இந்த உலகம் முழுதும்
ஒரு மயானம் ஆகி விடுதல்
எனும் நிகழ்வு தான் இது.
பிறப்பை நிறுத்து.
பிறப்புக்கு காரணமான‌
கர்ப்பம் தாங்கும்
பெண்மீது மோகம் கொள்ளாதே.
பெண் தான்
உன் மோட்சத்திற்கு
தடைக்கல் என்று உணர்.
உயிர்கள் அற்ற உலகம் தான்
மோட்சம் என்று ஆகிறது.
ஓம் என்பது
அகரம் உகரம் மகரம்
என்ற மூன்று ஒலிப்புகளின்
சேர்க்கை.
புறநிலை (ஜாக்ரதம்)
அகநிலை (ஸ்வப்னம்)
புறமும் அகமும் கலந்த நிலை.("ஸுஷுப்தி")
இந்த மூன்றில்
நம் வாழ்க்கை
நம் நம்பிக்கை மற்றும் கற்பனைகள்
நம் வாழ்க்கையிலேயே
வாழ்க்கையை வெறுக்கும் நிலையும்
கலந்த நிலை
ஆகியவை அடங்கும்.
இந்த மூன்று நிலைகளையும்
கழற்றியெறிந்த
துரியம் எனும் நான்காவது நிலைக்கு
நீ பாய்ச்சல் செய்யவேண்டும்.
அந்த சமாதி எனும் விறைத்த நிலையில்
ஆத்மா என்பதும் பிரம்மம் என்பதும்
ஒன்றாகி விடுகிறது.
அங்கு
உயிர் இல்லை
உடல் இல்லை
உணர்வுகள் இல்லை.
அறிவு இல்லை..
ஜீவாத்மா இல்லை
பரமாத்மா இல்லை.
கடவுளே இல்லை.

அது என்ன?
அட போங்கடா !


அது தான் ஆயிரம் ஆயிரம்
ஹிரோஷிமா நாகசாகிகளின்
பேரழிவு நிலை.
நம் பிரபஞ்சத்தில்
கோடி கோடி விண்மீன் மண்டலங்கள்
உள்ளன.
அந்தகோடி கோடி கோடி..கோடி
துளியிலும் துளியாய் உள்ள‌
இந்த பூமியில் தான்
உயிர் இருக்கிறது.
இதையும் சுடுகாடு ஆக்கிவிடு
என்று
ஒரு மதம் போதிக்குமானால்......
அதன் அழிவு ஆயுதமாக‌
ஆயிரம் ஆயிரம் டன்களின்
அணுகுண்டு போன்ற ஒரு
சொல்லாக
அந்த "ஆன்மீக மோட்சம்"
இருக்குமானால்.........
இந்து மதம் அதில் தான்
ஆணி அடித்துக்கொண்டிருக்கிறது
என்பதும்
போதிக்கப்படுமானால்.........
.................
..................
உங்கள் அழிவிலிருந்து
உங்களைக்காத்துக்கொள்ள‌
தேவைப்படுகிறது
ஒரு அறிவு.
ஆம்..
அழிவை போதிக்கும்
மதங்கள் தேவையில்லை
என்ற ஒரு அறிவு.
எல்லா மனித உயிர்களையும்
இப்படி பலி வாங்குபவர்
கடவுள் இல்லை.
மனிதனே இப்படி தன்னைத்தானே
அச்சுறுத்திக்கொள்ள
தன் கற்பனையில் படைத்துக்கொள்ளும்
அந்தக்
கடவுள் இல்லவே இல்லை.
........
கடவுள்
இல்லவே இல்லை.
இல்லவே இல்லை
இல்லவே இல்லை.
...............
இதோ அறிவு சுடர் வீசுகிறது

=======================================================



செவ்வாய், 9 ஏப்ரல், 2019

பாய்
















பாய்

=========================================================

ருத்ரா  இ பரமசிவன்





என் உள்ளே

வெங்காயக்குகை.

உரித்தேன்

ஆயிரம் ஆயிரம் வானம்.

சந்திர மண்டலத்து சதை பிய்ந்து இருந்தது.

ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால் நகம் பட்டு.

பழனி போகரும்

அங்கிருந்து மண் எடுத்து நெய்து

ஞானப்பழத்துச் சின்னப்பயலுக்கு

கோவணம் கட்டினார்.

"ஃபான்டாஸ்டிக் வாயேஜ்" நாவல் மாதிரி

என் சிறுகுடலுக்குள் சென்றேன்.

நுரையீரல் பூங்கொத்துகளில்

பிருந்தாவன் நந்தகுமாரன்களை

மயில்பீலி கிரீடத்துடன்

நடமாட விட்டேன்.

மூளையின் ஆப்லாங்காட்டா

அப்புறம் நியூரான் சினாப்டிக் ஜங்ஷன்

பர்கிஞ்சே செல்களோடு

கிசு கிசுத்து என் முந்தைய‌

ஐயாயிரத்து ஒன்பதாம் ஜன்மாவில்

திளைத்துக்களித்தேன்.

கடைசியாய்

குண்டலினியின் பிரம்மரந்த்ரத்தின்

நுனிக்கொம்பர் ஏறி

"அஃது இறந்து ஊக்கி..."



"போதும் எழுந்திருங்கள்.

ட்ரான்செண்டென்டல் தியானம் முடிந்தது.

போகும்போது

ஃபீஸ் பாக்கி இல்லாமல் கட்டி விட்டுப்போங்கள்.

மகரிஷி ஹோலோகிராம் போட்ட‌

ரசீது வாங்கிக்கொள்ளுங்கள்"



நான் அந்த‌

குட்டிச்சதுரப்பாயை

சுருட்டி கக்கத்தில்

வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.



===================================================
28.08.2016









ரஜனியின் "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்"

ரஜனியின் "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்"
=================================================ருத்ரா


அன்று
எப்போதோ
ஒரு கோபத்தில்
ரஜனி அவர்கள்
சொன்னதால் தான்
அந்த வெற்றிக்கூட்டணி
ஆட்சியைப்பிடித்தது
என்று
"அந்த வாய்ஸ்" பற்றி
இன்றும்
அது போல் இது என்று
"வாய்ஸ்" புராணங்களை
ஊடகங்கள்
ஊற்றி ஊற்றி
கழுவிக்கொண்டிருக்கின்றன.

அந்த வாய்ஸ் நான் கொடுத்ததே
தப்பு என்றும்
ஒரு வாய்ஸ் வந்ததே.
அப்போது தான் தெரிந்தது
அவர் குரலுக்குள் ஒரு குரலாய்
அவருக்கு ஒருவர்
"டப்பிங்" கொடுக்கப்போகிறார்
என்று.

ஆம்.
இது வெறும் "ஹெச் எம் வி" எனும்
"ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" தான்.
பஜகவின் நதி நீர் இணைப்பு ஆணயம்
வந்து விட்டால்
இந்தியாவின் பாதி வறுமைப் பிரச்னை
தீர்ந்து விடும்.
அதனால் அதை நான் வரவேற்கிறேன்
என்று
"ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" ஒலித்தட்டு
ஓட்டுகளுக்காக‌
சந்து பொந்துகள் எல்லாம்
ஒலிக்கப்போகிறது.
இன்றைய ஆட்சியில் இவர்கள்
காவிரியை தமிழ்நாட்டுக்கு தரவிடாமல்
எப்படியெல்லாம்
"பகீரத"ப்பிரயத்தனங்கள்
செய்தார்கள் என்பதை மறந்து
மீண்டும் "பகீரத் யோஜனா" பற்றி
"புராணத்தனமாய்"
"வாய்ஸ்" கொடுக்கப்பட்டிருக்கிறதே.
அப்படியென்றால்
அது "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" தானே.
தொலைக்காட்சி ஊடகங்களே!
இன்றே கட்டம் கட்டி
நாலு பேரை உட்காரவைத்து
அந்த "சங்கல்ப பத்திர"த்தை
எதிர்ப்பது போல் எதிர்த்து
ஒரு மகா மகா விளம்பர வியூகத்தை
நிகழ்த்துவீர்கள்.

என்ன செய்வது?
"பிள்ளைப்பூச்சியை மடியில் கட்டிக்கொண்டு
புராணம் கேட்பது" போல்
என்று "குலதெய்வம்" படத்தில்
எஸ் எஸ் ஆர் ஒரு பிரபலமான‌
பாட்டு பாடியிருக்கிறார்.
அது போல் இந்த தேர்தல்
நம்மையெல்லாம்
"புரணாங்களை மடியில் கட்டிவைத்துக்கொண்டு"
ஜனநாயகத்தை"
தூக்கி நிறுத்தும் நிலைக்கு
கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
அந்த "பத்திரம்"
"மக்களின் ரிஜிஸ்தர் ஆஃபீசில்"
பதிவு செய்யப்படுமா?
இல்லை
"பத்திரமாக" அவர்கள்
கையில் மட்டும் தான் இருக்குமா?
என்ற கேள்விதான்
நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக‌
இருக்கிறது.
அதற்கு போணி பண்ணவே
இந்த "வாய்ஸ்"கள் ஒலிபரப்பப்படும்
கூத்துகள்
நடந்து கொண்டிருக்கின்றன.

===========================================================






திங்கள், 8 ஏப்ரல், 2019

வாயில்லாப்பூச்சி




வாயில்லாப்பூச்சி
====================================ருத்ரா

உன்னை
வானவில் என்றால்
பச்சோந்தியா நான்
என்பாய்?
பட்டாம்பூச்சி என்றால்
பட்டுப்போனவளா என்பாய்?
பவள மல்லி என்றால்
அவளா உனக்கு
சொல்லிக்கொடுத்தாள்
என்பாய்?
மென்மையின் உருவமே !
அனிச்சமே என்றேன்.
அன்னியத்தனமாய்
இருக்கிறது என்கிறாய்.
எதுவும் சொல்லமாட்டேன்
என்று
நின்று கொண்டேஇருந்தேன். 
வாயில்லாபூச்சி
எனக்கு வேண்டாம்
என்று போய் விட்டாயே!

=========================================


வாழ்க்கை வாழ்வதற்கே !



வாழ்க்கை வாழ்வதற்கே !

==============================ருத்ரா இ பரமசிவன்





வாழ்க்கை என்பது

முருங்கை மரத்து வேதாளம் என்று

வெட்டி வெட்டி எறிந்தாலும்

நம் தோள்மீது அது

ஏறிக்கொண்டே தான் இருக்கும்.

வாழ்க்கையை வெறுப்பது என்பது தான்

அந்த வேதாளம்.

வாழ்க்கையை நோக்கி

வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு

எல்லா வேதாளங்களும்

அணுக முடியாமல்

ஓடியே போய்விடும்.

இப்போது எந்த‌ வேதாளங்களும்

உன் காலடியில்.



====================================
28.09.2016



பட்டன் தட்டுதல்

பட்டன் தட்டுதல்
=============================================ருத்ரா
 (ஒரு நெட்டைக்கனவு)


இது
தேர்தல்
கணிப்பொறியில்
பட்டன் தட்டுதல்  எனும்
உற்சவம் .

இந்த சடங்கு
சம்பிரதாயங்கள்
ஒரு பத்து நாளில்
துவங்கி விடும்.

யார்கண்டது?
அந்த வரிசையில்
பிரம்மாவும்
நாரதரும் கூட‌
நின்று கொண்டிருப்பார்கள்.

நாரதர் கேட்பார்
பிரம்மனிடம்.
ஏங்காணும்
உமக்கும் கூட‌
த‌லையெழுத்தா?

ஆம்.நாரதா.
எல்லாவற்றுக்கும்
நான் தான்
குடும்பத்தலைவனாம்.

சிஸ்டத்தில்
ஏற்றிவிட்டார்கள்.
நானும் கீழே
இறங்கி வந்துட்டேன்.

ஆம்
வரிசையும்
துவங்கி விட்டது.
நாரதரும்
பிரம்மாவும்
நிற்கிறார்கள்.

பிரம்மா
கிசு கிசுக்கிறார்.
"நாரதா அங்கே பார்"
அங்கே
பார்த்தால்
எருமைக்கொம்பு
கிரீடத்தில்
மினு மினு என்று
ஒருவர்
பாசக்கயிற்றுடன்.

நாரதருக்கு
ஆச்சரியம்
"என்ன சாமிகளே
ஒண்ணும்
புரியலையே ."

பிரம்மா
மறுபடியும்
நாரதர் காதை
கடித்தார்
நாரதர் முகத்தில்
மில்லியன் வாட்ஸ்
பல்பு வெளிச்சம்.
என்ன
அப்படியா
என்றார்.

வாக்காளர்கள்
வரிசை
நகர்ந்து கொண்டே
இருந்தது.
சதவீத கணக்கில்
பார்த்தால்
அது
ஆயிரம் பத்தாயிரம்
சதவீதம் போல்
இருக்கும்.
ஊடகங்கள்
வியப்பின் உச்சியில்
உடைந்து நொறுங்கி
தூளாகிக்
கூழாகின.

என்ன நடக்கிறது?
என்ன நடந்தது?
என்ன நடக்கும்?

மயில் பீலி
கிரீடம் ஆட
புல்லாங்குழலும்  ஆட
கிருஷ்ணன்
சிரித்தான்.

எல்லாரும்
கன்னத்தில்
போட்டுக்கொண்டார்கள்.
..........
............
தேர்தல் முடிவு?
என்ன?
தெரியவில்லை.
அரசியல் சட்டம்
வளைந்து நெளிந்து
கிடக்கிறது.

உச்சநீதி மன்றம்
மொத்த  நீதிபதிகளையும்
சேர்த்து
பெஞ்சாக்கி
தீர்ப்பு சொல்வதற்குள்
விழி பிதுங்கி விட்டது.


"ரிசல்ட்
எல்லா பூத் களிலும்
ஜீரோ என்று
முட்டை முட்டையாய்
குவிந்து காட்டுகிறது.
ஒருவருமே
ஓட்டு போடவில்லை.
நோட்டாவும்  கூட
"முட்டையோ முட்டை"
என்ன இது?
எப்படி இப்படி?

"நீதி மன்றம்
தீர்ப்பு அளித்து விட்டது.
இது குழப்பத்தையும்
அராஜகத்தையும்
கொண்டு வந்து விடும்.
ஆம் ..
இது ஜீரோ ரூல்.
இது நம் தேசத்துக்கு ஆபத்து.
என்ன செய்வது?"

.....(தொடரும்)








ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

நீ அல்லது நான்.









நீ அல்லது நான்.

=============================================ருத்ரா


உனக்கு

ஒரு கவிதை எழுத வேண்டும்

அதற்கு

எதுகை மோனைகள்

உவமானங்கள் உருவகங்கள்

இவையெல்லாம் வேண்டும்.

புதுக்கவிதை என்றால்

அர்த்தமே இல்லாத

அர்த்தங்கள் கொண்ட

சங்கிலித்தொடர்

வாக்கியங்கள் வேண்டும்.

ஆரம்பித்து விட்டேன்.



" புன்சிரிப்பே!

உயிரே!

இரண்டும் கலந்தால்

நீ

அல்லது

நான்! "



=============================================

சனி, 6 ஏப்ரல், 2019

சங்கிக்கும் சொங்கிக்கும் நடுவே ஒரு.....கமல்

சங்கிக்கும் சொங்கிக்கும் நடுவே ஒரு.....கமல்
=========================================================ருத்ரா


இஞ்சி தின்று
தேள் கொட்டி
கள்ளும் குடித்து
நிலைகொள்ளாமல்
தவிக்குமே
அதன் நிலை தான்
இன்று கமல் அவர்களின் நிலை.

மதவெறிக்கும்பலை
அவர் சங்கி என்கிறார்.
அதை எதிர்ப்பவர்களை
சொங்கி என்கிறார்.

ட்விட்டரில் அவர் கூறியது
இன்று (07.04.2019) மதுரை "தினமலரில்"
வெளியாகி உள்ளது.

சங்கி எதிர்ப்பாளர்களை
சொங்கி என்று சொல்லி
சங்கிக்கு மகுடம் சூட்டுகிறார்.

எம் ஜி ஆர் சவுக்கு தூக்கினார் என்று
இவரும் சவுக்கு சுழற்றுகிறார்
மாரியம்மன் கோயில் சாமியாடி
தன் மீதே சவுக்கு அடித்துக்கொள்ளுவது போல்.

என்னுள் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்
என்று
நூல் (பூணூல்) விட்டார்.
அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்
கமல் அப்படி நூல் மாட்டிக்கொள்ளும்
டைப் இல்லை என்பீர்கள்

கருப்புச்சட்டை போட்டார்.
திராவிடம் பேசினார்.
தமிழ் உயிர் என்றார்.
இப்போது கேட்டால்
அதுக்கும் எதுகை மோனையாய்
ஏதாவது சொல்வார்.

இப்போது
சங்கிகளுக்கு எதிரானவர்களை
களவாணிகள் என்கிறார்.
அப்படியென்றால்
இப்படி முதல் களவாணித்தனம் செய்த‌
மூதறிஞர் ராஜாஜி அவர்களை
என்ன சொல்வார்?
எதுவும் சொல்வார்.
விஸ்வரூபத்தில் கறி சாப்பிட்டு
புரட்சி படைத்தாரே.
இது கைபர் கணவாய் வழி தந்திரங்கள்.

இந்த சொங்கிகள்
கையில் இருப்பது
மதவெறி மல்லப்பாக்களுக்கு
மரண அடி கொடுக்கும்
"மக்களின் திராவிட இயக்கம்" எனும்
சுத்தியல்கள்.

கமல்
சினிமா ஜிகினாக்கனவுகளின்
நூலாம்படையிலிருந்து
மீண்டு வருவது
சாத்தியமே இல்லை.

திமுகவை கழட்டிக்கொண்டு வாருங்கள்
காங்கிரஸ் காரர்களே என்றார்.
பிறகு
கிராம பஞ்சாயத்துக்கூட்ட‌ தத்துவத்திற்கு
அவருக்குத்தான்
பட்டயம் இருக்கிறது என்று
கட்டப்பஞ்சாயத்து கணக்காய்
பாடாய் படுத்தினார்.

சங்கிகள் "தாமரை தாமரை" என்கிறார்கள்.
அந்த தூயதமிழ் அவர்கள் வாய்ப்பட்டு
ஆபாசம் ஆகிப்போனது.
அவர்களது தேவபாடையில்
அதை "புண்டரீகம்"என்று அல்லவா
அழைக்க வேண்டும்.
இருப்பினும் செம்மொழித்தமிழில்
அவர்கள் சொல்வது
நம் தமிழுக்கே பெருமை தான்.

இவர் இன்னும் கிராமசபைக்கூட்டத்தை
தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு
தனக்கே சொந்தமானது என்று
அழிச்சாட்டியம் பண்ணுகிறார்.


இவர் தான் சங்கி சொங்கி
என்று சொல்லி நடுவில்
"ஆப்பை அசைத்து அசைத்து எடுத்து
மரப்பலகை இடுக்கில் மாட்டிக்கொண்ட‌
அது மாதிரி"
ஆகிவிட்டார்.
அவரையே கேட்டால் இதை
இப்படித்தான் சொல்லியிருப்பார்.
"சங்கிக்கும் சொங்கிக்கும் நடுவே ...ஒரு மங்கி!

=============================================================

உடுக்கு அடிப்பவர்களே



உடுக்கு அடிப்பவர்களே!
========================================================ருத்ரா


இந்திராகாந்தியின் மரணத்தின் போது
அந்த எரியூட்டு நிகழ்வே
அவர் இஸ்லாமியர் இல்லை
என்று நிரூபித்திருக்கிறது.
இருப்பினும் விடாப்பிடியாய்
பாருங்கள்
ராஜிவ் காந்தி வழி படும் முறையை.
ஃபெரோஷ் காந்தி ஒரு பார்சி.
பார்சிக்கள் முஸ்லீம்கள் என்று
இந்த சங்கிகள் சாதிக்கின்றனர்.
அதனால் அவரும் அவர் மகன்களும்
முஸ்லீம்கள் தான்
என்று தமுக்கு அடிக்கின்றனர்.

இப்போது அடிப்படையான
ஒரு கேள்விக்கு வருவோம்.

பார்ஸி முஸ்லீம் என்றால்
பார்சியின்
அவெஸ்தா மொழிப்பாடல் தான்
ரிக் வேதமாயிற்று.
இது தான் உங்கள் இந்துத்துவாவுக்கு
மூலம் என்றால்
நீங்களே அந்த‌
"அடிப்படை இஸ்லாமிய" வாதிகள் தானே.
நீங்கள் நமஹ என்கிறீர்கள்
அவர்கள் நமாஸ் சொல்கிறார்கள்.
மதவெறியை கொண்டு
உடுக்கு அடிப்பவர்களே
உங்கள் துடுக்குத்தனத்தையெல்லாம்
தூர வைத்து விட்டு
"தமஸோ மாம் ஜோதிர் கமய"
என்ற‌
ஒரு மானிட வெளிச்சத்துக்கு வாருங்கள்.
இருண்டகாலம் நோக்கி ஓடும்
உங்கள் அறியாமையை அகற்ற‌
வழி தேடுங்கள்.
உலகப்பொது மானிடம் எனும்
சிவப்பு ரத்தத்தை
உங்களுக்குள் பாய்ச்சிக்கொண்டு
குறுகிய உணர்வுகளின்
கருப்பு ரத்தத்தை
வெளியேற்றிக்கொள்ளுங்கள்.

ஓம்! ஷாந்தி..ஷாந்தி ஷாந்தி ஹி..

===================================================

கடவுளே தான்.





கடவுளே தான்.

===========================================ருத்ரா



கட உள்.

கடந்து உள்ளே செல்.

இந்த முகமூடிகளையும் கூச்சல்களையும்

கழற்றி வைத்து விட்டு செல்.

அறிவு வெளிச்சம் நோக்கி செல்லுவதற்கும்

ஒரு சிறு வெளிச்சம் வேண்டும்.

தீக்குச்சி கிழித்து

இந்த இருட்டுத்திரை கிழித்தால்

சூரியனையும் நீ கைகுலுக்கும்

ஒளிப்பிழம்பு உன்னிடம் இருப்பதை

நீ அறிவாய்.

அந்த கீற்று வெளிச்சம் உன்

அறிவுத்தேடல் மட்டுமே!

கடவுள் என்றொரு

கனமான முற்றுப்புள்ளியை

உன் முதுகில் சுமந்து கொண்டபிறகு

எதைத்தேடி உன் பயணம்?

உன் கடவு சொல் சாவி கொண்டு

இந்த கடவுளைத்திறக்க

மதத்தையா நீ கையில் எடுப்பது?

மதாமதம் =மதம்+அமதம்

என்று ஸ்லோகம் சொல்கிறது.

மதத்தை மதமற்றதாக ஆக்கும் அறிவே

சிறந்த அறிவு.

கடந்து உள் செல்.

அது குகை அல்ல.

எல்லைகள் உடைந்த அறிவு வெளி அது.

வெளியே போவதைத்தான்

உள்ளே செல் என்கிறோம்.

அதுவே

கட உள் !

நாம ரூப வர்ணங்களால்

எச்சில் படுத்தாதே!

கடவுளை மறுக்கும்

ஒரு விஞ்ஞானம் கொண்டு

கடவுளை நீ கண்டுபிடித்தால் கூட‌ போதும்

அதை அப்படியே வாங்கி அறிந்து கொள்ள‌

உன் பின்னே

ஓடி ஓடி வருவது யார்?

கடவுளே தான்.

====================================================

17.10.2016.

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

காஃபிக்கோப்பைஆறுகிறது






காஃபிக்கோப்பைஆறுகிறது
=============================================ருத்ரா இ.பரமசிவன்

டேபிளில்
காஃபிக்கோப்பை ஆறுகிறது
பத்திரிகை பக்கங்கள் படபடக்கின்றன.
அவன் அவசரம் அவசரமாய்
பத்திரிகைப்பக்கங்களை தேடுகிறான்.
ஆம்.
அவன் படத்துடன்
கட்டத்துள் செய்தியுடன்
மூக்குக்கண்ணாடியையும்
பிதுங்கி வழிய பார்த்துக்கொண்டிருந்தான்.
இது போதும்.
அவன் படுக்கையில் போய்
விறைத்துக்கொண்டான்.
சூரியன் ஒளியை துப்பிக்கொண்டு
எழுந்திருந்தான்.
அந்த வீட்டின் அந்த படுக்கை அறையிலிருந்து
கூக்குரல்கள் ஓலங்கள்
வெளிக்கிளம்பின!
கண்ணீர் அஞ்சலியுடன்
அந்தப்படத்தில்
அருமையாய் விழுதிருந்தான்
ஒரு முற்றுப்புள்ளியாய்!

 ========================================================
27.09.2015

ஒரு "ஓட்டின்" அனாடமி






ஒரு "ஓட்டின்" அனாடமி
========================================ருத்ரா

இது என்ன பரிசோதனைச்சாலைத்
தவளையா?
பப்பரக்கா என்று மல்லாத்திப்போட்டு
அறுத்துப்பார்க்க?
இந்திய ஜனநாயகத்தின்
அதன் ரத்தத்தின்
துளியிலும் துளி இது.
மைக்ரோஸ்கோப்பில்
வைத்துப்பார்த்த போது
சந்திரமண்டலத்து பாலைவனம் போலவும்
செவ்வாய் கிரகத்துச் சிவந்த‌
மண்பாளங்கள் போலவும்
என்னவெல்லாமோ தெரிந்தது.
இதை வைத்து
இந்த தேசத்து புத்திரர்கள்
புராணங்கள் சொன்னார்கள்.
ஆவென்று வரிசையாக
ரம்பப்பற்களைக்காட்டிய
முதலை போன்ற ஒன்றிற்கு
பூமாலை சூட்டி
மஞ்சள் குங்குமம் வைத்து
பஜனை செய்தார்கள்.
அந்த பற்களில் கொத்து கொத்தாக‌
மனித உயிர்கள்.
இது என்ன கிராஃபிக்ஸ் போன்ற‌
குழப்ப சித்திரங்கள்?
இருக்கிற ஜன்மத்தையே
முழுதாக வாழ வாய்ப்பு தராத‌
இந்த சமூகம்
மதம் எனும் ஓட்டைவழியே
மறுஜென்மம் ஆவி பேய் பிசாசு
எனும் அறிவின்மைக்கசடுகளை
ஒழுக விட்டதில்
மானுடமே இங்கு செத்துப்போனது.
போதாது என்று
சினிமா டிவி என்னும் அலம்பல்கள்
மானுட சாரத்தை
காசு பண விளம்பரங்களின்
சாக்கடை ஆக்கி இருக்கிறது.
சட்டம் இயற்றவேண்டிய மூளைச்செதில்கள்
மூச்சடங்கிக்கிடக்கின்றன.

"போதும்..
ஆராய்ச்சியை முடி.
இந்த ஒட்டு என்பது தான் என்ன?"

மைக்ரோஸ்கோப்
அறிக்கை தயார் செய்தது.

"இது ஒரு பாக்டீரியா..
ஆனால்
தன் செல்லையே
அழித்துக்கொள்ளப்போகும்
ஒரு "வைரஸ்" இனமாக‌
மெடமோர்ஃபாசிஸ் ஆகும்
நிலைக்கு வேகமாக
வந்து கொண்டிருக்கிறது"

"சரி சரி..
ஆணையத்துக்கு அனுப்பி
வைத்துவிடு."

====================================================




உன்னை அறி