வியாழன், 25 அக்டோபர், 2018

கடவுள் கடவுள் என்று...

கடவுள் கடவுள் என்று...
=======================================ருத்ரா இ பரமசிவன்.

கடவுள் கடவுள் என்று
செக்கு மாட்டைப்போல‌
மனிதன் முனை மழுங்கக்கூடாது.
கடவுள் தான் படைத்தார்
கடவுள் தான் இந்த ஏணியை வைத்தார்
என்று
நீங்கள் படியேறுங்கள்.
ஆட்சேபணையில்லை.
ஏறி ஏறி நின்று
எதை நீங்கள் உற்றுநோக்குகிறீர்களோ
அது நிச்சயமாக கடவுள் இல்லை.
அது கடவுள் இல்லை
என்று
அந்த கடவுளுக்கே கூட தெரியும்.
அதற்கு மேலும் உள்ள வெளிச்சத்தை
நீங்கள் அறியவேண்டும்
என்பதே அவர் விருப்பம்.
அதைப்பற்றிய அறிவை
உலகம் எல்லாம் பரப்பவேண்டும்
என்பதும் அவர் நோக்கம்.
அதன் மூலம்
அந்த "படைப்பாளி"
தன் முகத்தையே கண்ணாடியில்
பிம்பம் பார்த்துக்கொள்கிறாரா
அல்லது
அதையும் கடந்து உள்ளே (கடவுள்)
போகப்போகிறாரா
என்பது
நீ காட்டும்
உன் அறிவுப்படலத்தைப்பொறுத்தது.
மனிதனின் அறிவு பிம்பப்படுவது இல்லை.
புதிய புதிய அறிவின் ஊற்றுக்கண்
மனிதனே.
கடவுள் அதைப்பார்த்து தான்
தன்னையே படைத்துக்கொள்கிறார்.
அவரை தரிசனம் செய்யும்போதெல்லாம்
அவர் உங்களுக்கு சொல்வது
"மாற்றி யோசி".
ஆனால் நீங்கள் அவரையே
ஜபமாலை ஆக்கி உருட்டிக்கொண்டே
இருக்கிறீர்கள்.
கடவுளின் அறிவுப்பசியை
புரிந்து கொள்ளாமல்
சுண்டலும் அப்பமும் சாப்பிடுவதற்காக‌
அவரையே
இம்போசிஷன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
அவர் வைத்த பரீட்சையில்
இன்னும் உங்களால்
எதுவும் எழுதவே முடியவில்லை.
"கடவுளே நீ யார்?
கடவுளே நீ எது?
என்றாவது நீ என்னிடம் கேள்.
அதை விட ஒரு சொல் உன்னிடம்
கேட்க காத்து நிற்கிறேன்
என்கிறார்.
கடவுள் என்று எதுவும் நீ
"இல்லை" என்பதே அது.
அது தான் இந்த மொத்தப்பிரபஞ்சத்தையும்
திறந்து காட்டும் சாவி
என்று
அவர் சொல்லாமல் சொல்லும்
ஒரு மௌனத்தை தான்
உன் முன் நிறுத்தியிருக்கிறார்.

அதை விட்டு
மீண்டும் மீண்டும்
கடவுள் என்று கன்னத்தில் போட்டு
தரையில் மண்டியிடச்சொல்லவில்லையே.

விஞ்ஞானத்தைக்காட்டி
மேலும் ஒரு அஞ்ஞானத்தில் விழு
என்று
அவர் சொல்லவில்லையே.
கடவுள் ஒரு விஞ்ஞானம் என்று
அவரிடமே நீ
சூத்திரங்கள் சொல்லி
விஞ்ஞானத்தை அஞ்ஞானம் ஆக்கும்
"பாவத்தை"
கண்டிப்பாக நீ செய்யாதே
என்று
அந்த "மௌனம்" முணுமுணுப்பதை
கடவுள் விஞ்ஞானிகளே
எப்போது புரிந்துக்கொள்ளப்போகிறீர்கள்?

=================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக