வெள்ளி, 19 அக்டோபர், 2018

வீணை

வீணை
======================================ருத்ரா

ராகமழையில்
உள்ளம் குளிர்ந்தன.
ஜன்ய ராகங்களும்
மேள கர்த்தாக்களும்
கணக்கற்ற ஒலிவடிவங்களில்
இன்னிசை பெய்தன.
இந்தியக்குழந்தைகள்
ஒவ்வொன்றும்
இந்தியாவின் இந்த யாழ்நரம்பில்
எப்போது
சுருதி கூட்டப்போகின்றன?
சோற்றுப்பஞ்சச் சித்தாந்தங்கள்
சொக்கப்பனையாய்
கொளுந்து விட்டு எரிந்தபோதும்
இந்தியன் என்னும் உள்ளொலியில்
இந்த இசை ஒளியே
நம் மண்ணின் ஒளி.
மொழியற்ற இந்த அமுத ஒலியிலும்
நான்கு வர்ண சுருதிபேதம்
நாராசமாய்க்கேட்கிறது.
சேரி ஜனங்களுக்கு வீணை இசையா?
சேற்றுக்கைக்குள்  இசை
ஊற்றுக்கண்களா?
என தள்ளுபடி செய்ததில்
கலைமகள் எல்லாம்
தெருவில் தான்  கிடக்கிறாள்.
பிறப்பொக்கும்எவ்வுயிர்க்கும்.
பண் என்பதே பள்ளு ஆயிற்று.
பறை எனும் தாளக்கருவி
அதனோடு இயைவது ஆயிற்று.
சிவன்களின் ஆட்டமும் அதன் வழி ஆனது.
ஆனால்
இந்த தொன்மைக்குடிகள் மட்டும்
குப்பைத்தொட்டிக்கு
போனது எப்படி?
பாயிரம் எத்தனை பாடி என்ன?
ஆயிரம் ஆண்டுகள் சூழ்ச்சி இது!
தமிழ்ப் பண்ணும் யாழ்வழி பிறந்ததே.
அந்த வரலாறுகள் திரும்பிட வேண்டும்.
அன்று நம் பத்துப்பாட்டுள் ஒன்றான‌
பட்டினப்பாலை
"பாலை" எனும் பண்(ராகம்)ணில்
பாடப்பட்டது அல்லவா?
தமிழ்த்தாய்க்கு
காங்கிரீட் கட்டிடங்களில்
சில பல கோடிகளைக்
கொட்டிக்கவிழ்ப்பதில்
என்ன பயன் கண்டீர்?
பழந்தமிழ் இனிக்கும்
அந்த "பாலை யாழின்"நரம்பு ஒலியையும்
தோண்டி ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும்
முனைப்பு வேண்டும் இந்த தமிழனுக்கு!
முன்னுக்கு பின்னாய்
மேலுக்கு கீழாய் முரண்பட்ட‌
இந்த வர்ணத்து நீதிகள்
தொலைந்திட வேண்டும்.
கருப்புக்கைகள் விறகு பிளக்க‌
வெள்ளைக்கைகள் மட்டுமே வீணை ஏந்த‌
"வெள்ளைத்தாமரை மகள்" எண்ணவேயில்லை.
வெள்ளைமனத்தவள்
இருட்டை நிரப்பியா இசையின்
விடியல் தந்தாள்?
கருப்பு வைரங்கள் மேலை நாட்டில்
இசையில் மகுடம் சூட்டுதல் அறியீரோ?
பாழாய்ப்போன அரசியல் வக்கிரம் நம்
பாதையை மறித்துக்கிடப்பதே
நம் உயிர்கொல்லி நோய்.
நோய் நாடி நோய் முதல் நாடி
அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்
ஆற்றும் நாளே
நமக்கு ஒரு நன்னாள்!

==============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக