ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ட்ராகுலா ரைசஸ் ஃப்ரம் தி க்ரேவ்

ட்ராகுலா ரைசஸ் ஃப்ரம் தி க்ரேவ்
===============================================ருத்ரா

அது ஆளரவம் அடங்கிப்போன‌
ஒரு மயானம்.
அலறும் பறவையின் குரல் கூட‌
அமுக்கப்பட்டிருக்கும்
ஒரு அசாதாரண அமைதி அங்கே.
ஏன் என்று
அந்த இடத்தில்...
அண்டை அயலார் இடத்தில்.....
கூட..
கேட்க நாதியில்லை.
உலகம்
அந்த மரண அமைதியை
வேடிக்கை பார்த்தது.
விட்டால் அந்த டிராகுலாவுக்கு  கூட‌
அமைதிக்கு
ஒரு நோபல் பரிசு கொடுத்து
அகமகிழ்ந்து விடும்.
மற்ற இடத்தில்
ரெண்டு நாய்கள் சண்டைபோட்டு
குரைத்துக்கொண்டால் கூட‌
"மூச்" சத்தம் போடாதே
உலக அமைதி கெட்டுவிடும் என்று
அந்த நீதி மேசையை
தட்டி தட்டி
குரலெழுப்பும் அந்த உலகம்
அந்த மரணப்பிரளயத்தின் போது
பாப்கார்ன் கொறித்துக்கொண்டிருந்தது.
ஒரு ரத்தவெறி
சுநாமியாய் கிளர்ந்தெழுந்து
நியாயங்களின் குரல் வளையை
குதறத் துடிக்கும்
ஆர்ப்பாட்டத்துடன்
அந்த ட்ராகுலா
சவக்குழியை பிளந்து கொண்டு
கோரைப்பல் எல்லாம் ரத்தம் ஒழுக‌
எழுந்து கொண்டு விட்டது.
அதையும் கூட ஒரு நரசிம்ம அவதாரமாய்
அர்ச்சிக்கும்
அதர்மங்களின் மேகங்கள்
சூழ்ந்த இந்த தேசத்து
சில நரித்தனமான புன்னகைகள்
இளித்து இளித்துக்களிக்கின்றன.

அப்புறம் அந்த ட்ராகுலா
தன் வெறிபடர்ந்த விழிகளை
உருட்டிக்கொண்டு.....
தன் நீண்ட கருப்புக்கோட்டை
பேய்க்காற்றில்
அலைய விட்டுக்கொண்டு...
அந்த கூரிய பற்களைக்கொண்டு
எல்லா ஆட்டுக்குட்டிகளின்
ரத்தம் குடிக்கும் தாகத்தோடு....

......................
"அப்புறம் அப்புறம்.."

ஏண்டா! "பர"தேசி..
நான் என்ன கதையா சொல்றேன்..
ராஜபக்ஷே பிரதமர் ஆயிட்டார்டா.

=====================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக