செவ்வாய், 2 அக்டோபர், 2018

"மான்தேர் மைக்கண்"

"மான்தேர் மைக்கண்" 
============================================ருத்ரா இ.பரமசிவன்


தண்ணுமை நடுவண் மண்ணார்
மான்தேர் மைக்கண் அதிர்வன்ன‌
கண்ணில் காட்டி விண்தோய் உறீஇ
பொம்மல் ஓதி ஐம்பால் குலைய‌
இருங்கழி இடத்து சில்நீர் தூஉய்
அரிகுரல் நாரை எக்கர் அடைத்தன்ன‌
மென்கை முளிதரு முகம் பொதி செய்து
வரூஉம் வரூஉம் என்றுழி மரூஉம்.
மழைக்கண் பனிப்ப மாவின் நெடுவேல்
நடுக்குறு தளிரின் கூர்நனி பசப்ப‌
செந்தாழி உள்ளறை மாய்ந்து கிடக்குமோ.
நடுநா அசைய இரட்டுற ஈண்டு
அவன் தேர் மணிச்சில் ஒலியில் மின்னல்
ஊழ்க்கும் ஊழ்க்கும் சுடர்நுதல் பூத்து.

===============================================================


விளக்கவுரை 
==================================================================

தலைவனுக்காக காத்திருந்து காத்திருந்து விழி பூத்துக் களைத்த தலைவியின் துயரம் விளக்கும் சங்க நடைக்கவிதை இது.

தண்ணுமை எனும் முழவு இசைக்கருவியின் நடுவில் மண்ணால் நீராட்டி வைக்கப்பட்ட  அகன்ற கருப்பு பொட்டு தேரில் பூட்டிய குதிரையின் அகலக் கருவிழி (மான் தேர் மைக்கண்) போல் அதிர்ந்து விழிக்க அது போல் தலைவன் பால் ஏக்கம் கொண்டு அவன் இன்னும் வராதது கண்டு கண்கள் அச்சம் கொண்டு வானத்தை ஏறிட்டு நோக்குகிறாள் தலைவி. பொலிவு நிறைந்த(பொம்மல்) அவள் கூந்தல் (ஓதி) தன் வகிடுகள் நிலை (ஐம்பால்) சிதைந்துபோக கடற்கரையின் உப்பங்கழி சின்ன சின்ன நீர்த்துளிகளை அலம்பல் செய்ய அங்கு வந்து அரற்றும் குரல் கொண்ட நாரையானது கரைமேட்டில் போய் அடைந்து கொள்வதைப் போல அவள் தன் மெல்லிய குழைந்த கைகள் கொண்டு முகம் மூடி விசும்புகிறாள்.வருவான் வருவான் என்று எதிர் நோக்குங்கால் அவன் வராத நிலைகண்டு அவள் மருவி மயங்குகிறாள்.குளிர்ந்த அவள் கண்கள் கண்ணீரில் தளும்ப நெடிய வேல் போன்ற மாவிலையின் இளந்தளிர் காற்றில் நடுக்கம் உறுவதைப் போல் மிகவும் பசலை பாய்ந்தவளாய்துயரம் அடைந்து கிடக்கிறாள்.இது எப்படிப்பட்ட நிலை என்றால் இறந்து பட்ட மக்கள் கிடத்தி வைக்கப்படும் அந்த சிவப்பு நிற பெருந்தாழிக்குள் அவள் மாய்ந்து கிடப்பதற்கொப்பாகும்.அந்த நிலையில் சட்டென்று அவள் ஒரு கீற்றாய் ஒலிக்கும் மணியொலி கேட்கிறாள்.தலைவன் வரும் தேர் மணியின் உள் நாவு அசைந்து சிற்றொலி செய்ய அந்த இடைவிடாத ஒலி மீண்டும் மீண்டும் (ஊழ்க்கும் ஊழ்க்கும்)மின்னல் வெட்டுவது போல் அவளுக்கு களிப்பு மிக ஊட்டுகின்றது.அவள் நெற்றிப்படலமே வான் போல் சுடர்ந்து ஒளிரும்.

===================================================

-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக