திங்கள், 22 அக்டோபர், 2018

டிஜிடல் குப்பைகள்

டிஜிடல் குப்பைகள்
=============================================ருத்ரா

கடவுள் என்னிடம் வந்து
கடவுளுக்கு அர்த்தம் தெரியவில்லை.
சொல்லு என்றான்.

நான்
விஷ்ணுசஹஸ்ரநாமம் சொன்னேன்.

எனக்கு புரியவில்லையே
என்றான் அவன்.

ஏனப்பா இந்த விளையாட்டு?
சமஸ்கிருதமே நீ தானே
உனக்கா உன்னைப்புரியவில்லை?

ஆம் புரியவில்லை தான்.

நீ கடவுளே ஆனாலும் கவலையில்லை.
சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால்
நீ
நாத்திகனே.

அப்படியென்றால்
நீ கடவுளுக்கு அர்த்தம் சொல்லப்போவதில்லை
அப்படித்தானே!

ஆம் அது தான் ஐதிகம்.
வேதம் சொன்னால் தான் உனக்கு புரியும்.

கடவுள் குழம்பியவாறாய்
எதுவுமே கேட்காமல் திரும்பிவிடலாமா
என்று நினைத்தார்.
அவர் சமஸ்கிருதத்தை எங்கே போய் கற்பது?

அது
குருகுலத்தில்
மேல் சாதியினர் மட்டுமே படிப்பது அல்லவா?
கல்யாணகுணங்கள் பொருந்திய‌
ராமனின் ராமராஜ்யத்தில் கூட‌
மற்ற சாதியினர் சமஸ்கிருதம் கேட்டு
கடவுளை புரிந்து கொள்ளலாம்
என்று போனால்
காதுகளில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றிவிடுவார்களாமே.

ஆம் இது தான் ஐதிகம்

அப்போ எனக்கு கடவுள் என்றால்
என்ன என்று அர்த்தம் சொல்லமாட்டாயா?

என்னடா..சும்மா தொண தொணன்னு பேசிண்டு..

 நான்  உத்தரீயத்தை வைத்து
அரித்த முதுகை சொறிந்து கொண்டே
பலமாக "விஷ்ணு சஹஸ்ரநாமம்"
சொல்லிக்கொண்டே இருந்தேன்.

கடவுளும்
கடவுளாக வந்து விட்டு
ஒன்றும் புரியாமல்
நாத்திகராக திரும்பினார்.

=============================================================

பின் குறிப்பு

இது கணினியுகம்.
கூகிள் என்ற குப்பைத்தொட்டியைக் கவிழ்த்தால்
எல்லா சமஸ்கிருதமும் வேதசுலோகங்களும்
கிடைக்கிறதே ஈக்கள் மொய்த்துக்கொண்டு.

கடவுள் என்பதற்கு அர்த்தம் சொல்ல முடியுமா?

பாருங்கள்
முகமெல்லாம் டிஜிடல் குப்பைகளால்
நசுங்கிக்கிடக்க‌
கடவுள் அங்கே அர்த்தம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

==============================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக